வாக்காளர்களின் அக்கறை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா?

இந்திய அளவில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் அளவுகடந்த வெப்பத்தை மீறி வாக்காளர்கள் காட்டிய அக்கறை மகத்தானது.

அதுதான் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் பணியாற்றிய பல வடமாநிலத்தவர்களை மேற்கு வங்கத்திற்கும் அசாமிற்கும் பயணம் செய்ய வைத்திருக்கிறது.

அதுபோலத்தான் தமிழகத்தில் அதிலும் சென்னையிலிருந்து மட்டும் ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமங்களுக்கிடையே சென்று வாக்களித்துவிட்டு அதேவிதமான சிரமங்களுடன் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

மேற்காசியப் போர் நிலவுவதால், பேருந்துக் கட்டணம் இரண்டுமடங்குக்கு மேல் அதிகரித்திருந்த நிலையிலும் கூட, வாக்காளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று வாக்களித்துவிட்டு திரும்பியிருப்பது இன்னொரு விதத்தில் அதனுடைய ஜனநாயக உணர்வையும் வெளிக்காட்டுகிறது.

அதேசமயம் தீபாவளி, பொங்கல் போன்ற பெரு விழாக்களின்போது தென் பகுதிகளுக்கு விடப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது, வெகுவாக குறைந்திருப்பதாக பேருந்து நிலையத்திற்குள் சென்று அழுத்துப்போன பல இளைஞர்கள் சொல்வதையும் கேட்க முடிந்தது.

வாக்காளர்களுக்கு இருக்கும் இதேவிதமான அக்கறை தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறதா என்கின்ற கேள்வியையும் பல்வேறு நடைமுறைகளை வைத்துக் கேட்க வேண்டியிருக்கிறது.

திருச்சி உள்ளிட்ட பல தொகுதிகளில் உள்ள பூத்களில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் முறைகேடாக திறக்கப்பட்டிருப்பதை சமூக வலைதளங்கள் வெளிக்காட்டியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளும் இத்தகைய அத்துமீறல்கள் குறித்து குற்றஞ்சாட்டியிருக்கின்றன.

மே 4-ம் தேதி வரை கூடுதலான விழிப்புணர்வுடன் தங்களுடைய பூத் ஏஜெண்டுகளை மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அதிமுக, பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சித் தலைமை வேண்டுகோள் வைத்திருக்கிறது.

வாக்காளர்கள் எப்படியாவது பல சிரமங்களைக் கடந்து தங்களது வாக்குகளை பதிவு செய்யும் நிலையில், அவர்களுடைய ஜனநாயக உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அதை பொறுப்பாக பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையில்லையா?

பலவிதமான சந்தேகங்கள் பொதுவெளியில் எழுப்பப்படலாம்.

ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித சந்தேகங்களுக்கும், அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயக உணர்வுள்ளவர்களின் விருப்பமாக இருக்கிறது. அத்தகைய விருப்பத்திற்கு தேர்தல் ஆணையம் மதிப்புக் கொடுக்கட்டும். 

– யூகி

#வாக்காளர் #திருப்பூர் #கோயம்புத்தூர் #ஈரோடு #வடமாநிலத்தவர் #சென்னை #மேற்காசியப்போர் #தேர்தல்ஆணையம் #வாக்குப்பதிவு #அதிமுக #பாஜக #தவெக #பாமக #Voter #War #ElectionCommission #EC #Vote #ADMK #BJP #TVK #PMK

 
 
 
Comments (0)
Add Comment