என்னுடைய தோல்வி மட்டும் வருத்தத்திற்கு உரியதாகி விடாது!

பெருந்தலைவர் காமராஜர்
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின்படி போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றிருக்கலாம். சிலர் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். 
 
அப்படி வெற்றி பெறாமல், போனவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணத்தைப் போல அமைந்திருக்கிறது 1967-ல் நடந்த தேர்தலில், விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு, காமராஜர் பேசிய பேச்சு.
 
அன்றைய பேச்சிலிருந்து காலத்தின் தேவை கருதி அதன் சிறு பகுதி கீழே.
 
1967 தமிழகத்தின் அரசியலையே மாற்றிப் போட்ட தேர்தல் நடந்த ஆண்டு. அதுவரை ஆட்சியிலிருந்த காங்கிரசை வீழ்த்திவிட்டு அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.
 
காமராஜரே விருதுநகரில் தோல்வியைச் சந்தித்தார்.
 
அந்தச் சமயத்தில், தமிழகத் தேர்தல் முடிவுகள் பற்றி காமராஜர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு பகுதி:
 
“தமிழ்நாட்டின் பொதுத்தேர்தல் முடிவுகள் எனக்குப் பெரும் வியப்பைத் தந்துள்ளன, மற்றவர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நம்புகிறேன்.
 
இந்த மாநிலத்தில் காங்கிரசின் இத்தகைய தோல்விகளுக்கான காரணங்களைச் சரியாகக் கணிப்பது மிகக் கடினமான ஒன்றாகும்.
 
இந்த இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் மிக்க விசுவாசத்துடனும், அதன் திறமைக்கேற்பவும் மக்களுக்குத் தொண்டாற்றி வந்துள்ளது.
 
இந்த இருபது ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
 
இந்த உண்மை காரணமாகத் தான் மக்கள் காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்து விட்டனரோ என்று நான் அதிசயப்படுகிறேன்.
 
எப்படி இருந்தபோதிலும், மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று கருதியுள்ளனர். ஓட்டளித்துள்ள முறையிலிருந்து இது புலனாகிறது.
 
இது வாக்காளர்கள் தந்த தீர்ப்பானதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதோடு, ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகும் கட்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
 
சொந்தமுறையில் எனக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மக்கள் கவலையுடன் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
 
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இவ்வளவு பெரும்தோல்வி ஏற்பட்டிருக்கையில் எனது தோல்வி மட்டும் ஆழ்ந்த வருத்தத்திற்குரிய ஒன்றாக ஆகிவிடமுடியாது’’
 
(25.02.1967 தேதியிட்ட ‘விடுதலை’ நாளிதழில் இருந்து…)
Comments (0)
Add Comment