தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்.
11 வயதில் ஆறாம் வகுப்போடு வட்டிக் கடை கணக்குப் பிள்ளையாக பர்மாவுக்குச் சென்றார் வ.சுப.
அங்கே, ‘உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்றதால் 18 வயதில் பர்மா இவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியது.
ஊருக்கு வந்ததும் தமிழ் படிக்க ஆசைப்பட்டவர், பண்டிதமணி கதிரேசனாரின் கருணையால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து புலவர் (பி.ஓ.லிட்) படிப்பில் முதல் மாணவராக வந்து, அங்கேயே ஆசிரியரானார்.
பிறகு, 1948-ல், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக வளர்ந்து, அக்கல்லூரியின் முதல்வராக உயர்ந்தவர்.
1970-ல் மீண்டும் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கே திரும்பி, மொழிப்புல முதல்வராக அங்கீகரிக்கப்பட்டார்.
வள்ளல் அழகப்பர் பற்றி வ.சுப. எழுதிய ‘கோடி கொடுத்த கொடைஞன்’ என்ற நெக்குருகும் வாழ்த்துப்பாதான் அழகப்பா பல்கலையின் நிறுவனர் வாழ்த்தாக இன்றளவும் உள்ளது.
சங்க இலக்கியங்களில் அகத்திணை குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி பி.எச்.டி, பட்டம் பெற்றார்.
1979-ல் காமராசர் பல்கலை. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட இவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது அதன் அமைப்புக் குழு தலைவராகவும் இருந்தார்.
திருவள்ளுவர் விருது
யாப்பிலக்கணம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக புதுச்சேரிக்குச் சென்றிருந்த வ.சுப., அங்கே திடீரென உடல் நலன் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
நாடக நூல்களில் ஆரம்பித்து 32 நூல்களை எழுதி இருக்கிறார். 2007-ல் இவரது நூல்களை அரசுடமை ஆக்கிய தமிழக அரசு, 1990-ல் திருவள்ளுவர் விருது வழங்கி கவுரவித்தது.
தமிழ்வழிக் கல்விக்காக தனி இயக்கம் தொடங்கிய மாணிக்கனார், மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் யாத்திரை நடத்தினார்.
தமிழும் தில்லை அம்பலத்தில் அரங்கேற வேண்டும் என போராட்டங்களை முன்னெடுத்தார்.
எந்தவொரு காரியத்தையும் ‘உ’ ‘சிவமயம்’ போட்டு எழுதும் மரபை உடைத்து ‘த’ (தமிழ்) என்று போட்டு எழுதி தமிழுக்கு அணி சேர்த்தார்.
விருப்ப முறி
தனது வீட்டு நூலகத்தில் இருந்த சுமார் 10,000 நூல்களை அழகப்பா பல்கலைக்கு தர வேண்டும் எனவும் தனது சொத்தில் ஆறில் ஒரு பகுதியை, தான் பிறந்த ஊரான மேலச்சிவல்புரியின் வளர்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் விருப்ப முறி (உயில்) எழுதி வைத்திருந்தார்.
தந்தையின் விருப்பத்தை இன்றளவும் நிறைவேற்றி வருகிறார்கள் அவரது வாரிசுகள்.
காலம் அழைத்தது
‘‘நேர்மை, எளிமை, உண்மையாக வாழ்ந்த அப்பா, திருக்குறளைப் போலவே இரண்டு அடியில் ஆயிரம் குறட்பாக்களை எழுதத் தொடங்கினார். 578 குறட்பாக்கள் எழுதிக் கொண்டிருக்கும்போதே அவரை காலம் அழைத்துக் கொண்டது.
அந்த குறட்பாக்களை ‘மாணிக்கக் குறள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். 7 ஆண்டுகள் முயற்சியில் தற்சிந்தனைகள் என்ற தலைப்பில் தனது வாழ்க்கை குறிப்பையும் அவர் எழுதி வைத்துள்ளார்.
தினமும் அதிகாலையில் எழுந்து 4 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர். கடுமையான உழைப்பாளி.
சங்க இலக்கியங்களைத் தன் நுனிநாக்கில் வைத்திருந்தவர். மூதறிஞர், செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர் என்றெல்லாம் போற்றுதலுக்குரியவர் வ.சுப.மாணிக்கம்.
– குள.சண்முகசுந்தரம்