மகத்தான மனிதனாக வாழ்ந்தவர் பிரபஞ்சன்!

மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை மனபூர்வமாக உணர்ந்து தன் வாழ்வை வெகு சுபாவமாகப் பேணியவர் பிரபஞ்சன்.

அல்லல்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் நெருக்கடியிலும் வாழ்வைப் புகார்களின்றி சகஜமாக எதிர்கொண்டவர். தான் தேர்ந்த வாழ்க்கையிலிருந்தும், அதன் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்தும் பிசகாதவர்.

அவரது சிறு பிராய வாழ்க்கை வடிவமைத்த வலுவான அடித்தளத்தோடு கட்டமைந்த வாழ்க்கை.

பிரபஞ்சனின் இந்த வாழ்க்கை முறையின் உயிர்ச் சுடராக அவரது அப்பா இருந்திருக்கிறார்.

அவரது அப்பாவைப் பற்றிய பிரபஞ்சனின் சித்திரம் இது:

‘என் அப்பாதான் எனக்கு ஆதர்சம். மிகவும் மேன்மையான மனிதர் அவர். சைனாப் பட்டுச் சட்டை, சாண் அகலப் பட்டுச் சரிகை வேட்டி, அமெரிக்கன் கிராப்பு, கட் ஷூக்கள், பிரான்ஸ் பரிமள வாசனைப் பொருட்களோடும் அவர் வாழ்ந்தார்.

பாகவதரின், சின்னப்பாவின், வசந்த கோகிலத்தின், ராஜகுமாரியின் ரசிகர் அவர். கிட்டப்பா பாடல்களில் கிறங்கிப்போவார். கிராமபோன் என்கிற வஸ்து, எங்கள் வீட்டில் கிட்டப்பா, சுந்தராம்பாளையே பாடிக்கொண்டிருக்கும்.

அந்த அப்பா, ஒரு நாளில் ஒரு வேளையே சாப்பிட்டு வாழ நேர்ந்த ஒரு பத்தாண்டையும் அவருடன் சேர்ந்து வாழக் கொடுத்து வைத்திருக்கிறேன்.

உப்பரிகையிலும் பாதாளத்திலும் யாரையும் குற்றம் சொல்லாத, வெறுக்காத, மிகுந்த சாந்த பாவத்தோடு துன்பங்களை எதிர்கொண்ட அந்த மாமனிதரைப் போல் வாழ்ந்து தீர்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.

என் ஒரே பிரார்த்தனை இது மட்டும்தான். மனிதனாக வாழ்தல் மகத்தானது.’

பிரபஞ்சனின் பிரார்த்தனை அவரை வழிநடத்தியது. மகத்தான மனிதனாக வாழ்ந்தார். சாந்தம் அவரைத் தழுவியிருந்தது.

  • எழுத்தாளர். சி.மோகன்

நன்றி: இந்துதமிழ் திசை

#எழுத்தாளர்பிரபஞ்சன் #WriterPrabanjan #பிரபஞ்சன் #Prabanjan #தமிழ்எழுத்தாளர் #TamilWriter #தமிழ்இலக்கியம் #TamilLiterature #நாவலாசிரியர் #TamilAuthor

 
 
Comments (0)
Add Comment