மகாராஷ்டிராவின் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, இந்திய இசை வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத ஒரு சகாப்தத்தைப் படைத்தார். தனது 10 வயது முதலே திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர்.
கடந்த 1943-ம் ஆண்டு மஜ்ஹாபால் என்ற மராத்தி திரைப்படத்தில் முதன்முதலாக சலா சலா நவ் பலா என்ற பாடல் பாடினார்.
தொடக்கத்தில் சாதாரணமாகப் பாடி வந்த ஆஷா, போஸ்லே பின்னர் கஜல், பஜன், பாப் போன்ற அனைத்து இசை வடிவங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
‘இந்தியாவின் இசைக்குயில்’ என்று புகழப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையான ஆஷா போஸ்லே, கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படப் பின்னணிப் பாடகியாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
சகோதரி லதா மங்கேஷ்கர் போல இவரும் திரைத் துறையில் சமமாக பிரபலமானார். எனினும், இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அன்போடு இருந்தனர். லதா மங்கேஷ்கர் கடந்த 2022 பிப்.6-ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 92.
ஷர்மிளா தாக்குர், ஆஷா பரேக், ரேகா, ஊர்மிளா மடோன்கர், கரீஷ்மா கபூர், ஐஸ்வர்யா ராய், ஷமிதா ஷெட்டி உட்பட பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு இவர் பாடல் பாடியுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு தனது 90-வது வயதில் துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் 3 மணி நேரம் மேடையில் நின்று அசராமல் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ஆஷா.
கடந்த 1981-ல் உம்ராவ் ஜான் என்ற இந்திப் படத்தில் பாடிய பாடல்களுக்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றார். அதற்குப் பிறகு, 1988-ல் ஒரு தேசிய விருது பெற்றார்.
இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை கடந்த 2000-ம் ஆண்டு பெற்றார்.
2008-ம் ஆண்டு ஆஷா போஸ்லேவுக்கு நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
ஜாக்கி ஷெராப் நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘லைப் ஈஸ் குட்’ என்ற திரைப்படத்தில் ஆஷா போஸ்லே கடைசியாக பாடல் பாடினார்.
இசை வரலாற்றிலேயே மிக அதிகமான பாடல்களைப் பதிவு செய்த கலைஞராக ஆஷா போஸ்லேவின் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழில் ஆஷா போஸ்லே சில பாடல்களே பாடியுள்ளார். அவை அனைத்தும் சிறந்த பாடல்களாக அமைந்துள்ளன.
இளையராஜா இசையில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், ‘செண்பகமே செண்பகமே’ பாடல் பாடிப் பிரபலமானார். அதன்பின்னர் மீரா படத்தில் இளையராஜா இசையில் ‘ஓ பட்டர்ஃபிளை’ பாடல் இசை ரசிகர்களைத் திக்கு முக்காட வைத்தது.
ஹே ராம் படத்தில் ‘நீ பார்த்த பார்வை…’, இருவர் படத்தில் ‘வெண்ணிலா வெண்ணிலா’, வித்யாசாகர் இசையில் சந்திரமுகி படத்தில் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் ‘செப்டம்பர் மாதம்’ ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.
தனது 90-வது வயதிலும் அவர் தொடர்ந்து பாடி வந்தார்.
ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ. பி. நய்யார், மதன் மோகன், ஆர்.டி. பர்மன், இளையராஜா, அனு மாலிக் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையிலான கலைஞர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார்.
ஆஷா போஸ்லே நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று (ஏப்ரல் 11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானர். அவருக்கு வயது 92.
ஆஷா போஸ்லேவின் மறைவு லட்சக்கணக்கான இசைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், இசையமைப்பாளர்களும் ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளை மயக்கிய ஆஷா போஸ்லேவின் மறைவு, இந்திய இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
– மணி அமுதன்