கோபுலுவுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையிலான நெருக்கம் ஆழமானது!

கோபுலுவுக்கும், அவரது வாசகர்களுக்கும் இடையிலான நெருக்கத்தைப் போலவே, கோபுலுவுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையிலான நெருக்கமும் ஆழமானது.

லட்சுமி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் எழுத்துக்களுக்கு கோபுலு படம் என்றால் அது வாசகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான்.

கோபுலு சாதாரணமாகப் பேசும்போதே நகைச்சுவை தெறிக்கும். நாட்டு நடப்பு, உலக நடப்பு பற்றி அவருக்கு அத்துப்படி. அரசியல் விஷயங்கள் பேசும்போது, பளீரென்று சில கமெண்ட்ஸ் வரும்! அவருக்குள்ளே இன்னமும் கார்டூனிஸ்ட் கோபுலு உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை அவை உணர்த்தும்.

சாவியும், கோபுலுவும் நெருங்கிய நண்பர்கள். விகடன் காலத்தில் துவங்கிய அவர்களது நட்பு, கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என தொடர்ந்தது.

விகடனில் இருந்தபோது, ஒரு நாள், “நான் நகைச்சுவைத் தொடருக்காக ஒரு புதுமையான ஐடியா வைத்திருக்கிறேன். நம் பாரம்பரிய திருமணம் ஒன்று அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? அதில் என்னென்ன கலாட்டாக்கள், குழப்பங்கள் நடக்கும்? அவற்றை வைத்து எழுதப் போகும் அந்தத் தொடருக்குத் தலைப்பு “வாஷிங்டன்னில் திருமணம்”. அந்தத் தொடர்கதைக்கு நான் படம் போட வேண்டும் என்று சாவி கேட்டார்.

சாவியின் கற்பனைக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வாஷிங்டன்னில் திருமணம் தொடருக்கு படம் வரைந்து கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்.

அஜந்தா, எல்லோரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கும் அவரோடு கூடவே சென்று சாவியின் பயணக் கட்டுரைகளுக்கு புதுப் பரிமாணம் கொடுத்தவர் கோபுலு. சாவி தினமணி கதிரில் இருந்தபோது, கோபுலு ஆர்வத்துடன் நிறைய சித்திரங்கள் வரைந்து கொடுத்தார் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அன்றைய காலகட்டத்தில் மற்ற தமிழ் பத்திரிகைகளைவிட தினமணி கதிரின் சைஸ் பெரிசு. எனவே, சாவி, ஓவியர்களிடமிருந்து தொடர்கதைகளுக்கு பெரிசு, பெரிசாக படங்களை வரையச் செய்து, வாங்கி வெளியிடுவார்.

டாக்டர் திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் லட்சுமி தன் தொடர்களுக்கு கோபுலு படம் வரையப்போகிறார் என்றால், தொடர் கதை ஆரம்பிக்கும் முன்பாக அவரைச் சந்தித்து, கதையைச் சொல்லிவிடுவது வழக்கம். சில சமயங்களில் எழுத்தாளர் சாண்டில்யன், தன் அத்தியாயத்தோடு அவரை வந்து சந்தித்து, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருப்பார். நா. பார்த்தசாரதி கதைகளுக்கு அவர் படம் போட்டு அனுப்பி வைத்தால், பல சமயங்களில் போன் செய்து நெகிழ்ச்சியோடு பாராட்டி இருக்கிறார். கலைஞரின் பொன்னர்-சங்கர் உள்ளிட்ட தொடர்கதைகளாகட்டும், குறளோவியம் போன்ற இலக்கிய சமாசாரங்கள் ஆகட்டும் ஓவியம் வரைவது கோபுலுதான்.

மற்ற எழுத்தாளர்கள் போல, தொடர்கதைகளை அத்தியாயம், அத்தியாயமாக அனுப்பாமல், முதலிலேயே ஒட்டு மொத்தமாக எழுதிக் கொடுத்துவிடுவது எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுன் வழக்கம். தினமணி கதிருக்கு, மண்ணகத்துப் பூக்கள் என்ற தலைப்பில் தொடர் ஒன்றை அவர் எழுதிக் கொடுத்தபோது, “எனது படைப்புகள் எதற்கும் கோபுலு படம் போட்டதில்லை; இந்த தொடருக்கு அவர் சித்திரங்கள் வரைந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்” என்று சொன்னார். இது பற்றி கோபுலுவிடம் சொன்னபோது, “நான் அவரது எழுத்துக்களின் ரசிகனாயிற்றே!

அவரது உயரிய படைப்புக்களுக்கு சித்திரம் வரைய எனக்கு வாய்ப்பு அமைந்ததே இல்லை; அவரது எழுத்துக்கு சித்திரம் வரைவது எனக்கு பெரிய கௌரவம்!” என்றார் பெருமையோடு. ராஜம் கிருஷ்ணன் விரும்பியது போலவே கோபுலுவின் சித்திரங்கள் அவரது தொடருக்கு பெருமை சேர்த்தன.

“தமிழின் கிரேட் எழுத்தாளர் கல்கி. அவர் கதைகள் எழுதினபோது நான் படங்கள் வரைய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற என்னுடைய குறையை, கல்கி தீபாவளி மலர்களில் மறு பிரசுரம் செய்யப்பட்ட அவரது கதைகளுக்கு படம் வரைந்து தீர்த்துக் கொண்டேன்” என்று சொல்லுவார். கல்கி பதிப்பகம் ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்றவற்றை செம்பதிப்பாக வெளியிட்டபோது வண்ணப்படங்கள் வரைந்து மெருகூட்டியவர் கோபுலுதான்.

ஓவியர் மணியம் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தினமணி கதிரில் ஒரு கட்டுரை எழுதினார் கோபுலு. அந்தக் கட்டுரையை அவர் இப்படி முடித்திருந்தார்: “மணியம் எங்கும் போகவில்லை, மேல் உலகில் இருக்கும் கல்கி, சரித்திரக் கதை எழுத ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. அதற்கு சித்திரம் போட அவரை அழைத்துக் கொண்டார்”

1963ல் முழு நேர பத்திரிகைதுறைப் பணியில் இருந்து கோபுலு விளம்பரத்துறைக்கு மாறினார். 1972ல் சொந்தமாக “அட்வேவ்” என்ற விளம்பர நிறுவனத்தைத் துவக்கினார். அதென்ன அட்வேவ்? அந்த சமயம் சென்னையில் கடும் வெயில் சுட்டெரித்தது. பேப்பர்களில் ‘ஹீட் வேவ்” பற்றிய செய்திகள் வந்தன. அதைப் பார்த்து, விளம்பர உலகில் புதிய அலையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தன் புது விளம்பர நிறுவனத்துக்கு அட் வேவ் என்று பெயர் வைத்தார் கோபுலு.

அட் வேவின் ஆரம்ப கால கிளையன்ட்களில் முக்கியமானது காளிமார்க் குளிர்பான நிறுவனம். இதற்கு கோபுலு உருவாக்கிய தீம்தான்: ஜனங்க காளி மார்க் விளம்பரங்களை படிச்சு ரசிக்கணும்; காளி மார்க் குளிர் பானங்களை ரசிச்சுக் குடிக்கணும். அதன்படி, ஏராளமான கோபுலு டிடேட் மார்க் நகைச்சுவை கார்ட்டூன்கள் மூலமாக காளிமார்க் குளிபானங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.

“பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை என்னை நான் புதுப்பித்துக் கொள்வேன். இல்லையென்றால், டிசோனர் மாதிரி மியூசியத்துக்குப் போய்விட வேண்டியதுதான்” என்று சொல்லுவார் அவர். புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அவருக்கு அபாரமான ஆர்வம் இருந்தது. அமுதசுரபியில் அவரது அனுபவத் தொடரை எழுதியபோது, அவருடனான உரையாடல்களை பதிவு செய்வதற்காக சில சமயங்களில் மைக்ரோ டேப் ரெக்கார்டரைக் கொண்டு போவேன். சில சமயங்களில் டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டரைக் கொண்டு போவேன். அவரசத்துக்கு, என் மொபைல் ஃபோனிலேயே அவர் சொன்னவற்றை பதிவு செய்ததும் உண்டு. வாய்ஸ் ரெக்கார்டர், மொபைல் ரெக்கார்டிங் சமயங்களில் அவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

ஒருநாள், பத்திரிக்கைக்கான மேட்டர்களையெல்லாம் நான் பேனாவால், பேப்பரில் எழுதிக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டன. தமிழ் டைப்பிங் தெரியாதுபோனாலும், அழகி என்ற மொழி மென்பொருளைப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் டைப் செய்தால், அது தமிழில் வரும் என்றபோது, அதைக் கற்றுக் கொண்டு பயன்படுத்த ஆர்வம் காட்டினார் அந்த முதிய இளைஞர். அவரது கம்ப்யூட்டரில் அந்த தமிழ் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொடுத்துவிட்டு, இனி நீங்கள் தமிழிலேயே ஈ மெயில் அனுப்ப முடியும் என்றபோது, தானே முயன்று அவர் முதல் ஈ மெயிலை அனுப்பியது ஹிந்து நாளிதழின் கார்டூனிஸ்டான கேசவுக்கு.

2002 பிப்ரவரியில் ஓர் இரவில் அவருக்கு ஸ்டிரோக் வந்து நடு இரவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இடது பக்க மூளையில் ரத்தம் கிளாட் ஆகி, உடலின் வலது பக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சைக்குப் பின், உடல் நலம் தேறி, வார்டுக்கு வந்த பிறகு, டாக்டர் செரியனின் ஆலோசனையின்பேரில், இடது கையால் ஓவியம் வரையப் பழகினார். அவர் தன் இடது கையால் வரைந்த ஓவியங்கள் பல. இது குறித்து கோபுலு “உங்கள் மூளைதான் உண்மையான ஆர்டிஸ்ட். மூளையின் உத்தரவுப்படி, இத்தனை நாள் உங்களது வலது கை ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தது; இப்போது அது செயல் இழந்துவிட்ட நிலையில் அந்த வேலையினை உங்கள் இடது கை செய்யப்போகிறது. எனவே இடது கையால் உங்களால் நன்றாக ஓவியம் வரைய முடியும்” என்று டாக்டர் செரியன் ஊக்குவித்ததை சொல்லிவிட்டு, உடனே, நகைச்சுவையோடு, “பொதுவாக என் பாணிகோடுகளை “கோபுலு ஸ்டிரோக்ஸ்” என்று சொல்லுவார்கள்; ஆனால் விதியின் விளையாட்டால், கோபுலுவுக்கே ஸ்டிரோக்ஸ்” என்றும் அவர் சொன்னார்.

  • S.சந்திரமௌலி எழுதிய ‘கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

#கோபுலு #ஓவியர்கோபுலு #கார்டூனிஸ்ட்கோபுலு #Gopulu #CartoonistGopulu #ArtistGopulu #வாசகர் #எழுத்தாளர் #லட்சுமி #சாண்டில்யன் #நாபார்த்தசாரதி #ஜெயகாந்தன் #கலைஞர் #கருணாநிதி #Lakshmi #Sandilyan #NaParthasarathi #Jayakanthan #Kalaignar #Karunanithi

 
 
 
Comments (0)
Add Comment