தமிழகத்தில் பலவிதமான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள், நம்மை கடந்து போயிருக்கின்றன என்றாலும், தற்போது நடக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் உருவாகப்பட்ட சிரமங்கள் மிகவும் அதிகம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், அடுத்து பிரதான கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க திமுக படாதபாடு படவேண்டிய இருந்தது.
அந்தக் கூட்டணி அறிவிக்கப்படும் வரை காங்கிரஸ் ஒருவேளை தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமோ என்கின்ற சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.
காங்கிரஸ் எம்பிக்களே திமுக மீது வெறுப்பு மனநிலையையும், தவெக மீது ஆதரவு மனநிலையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்கள்.
அத்தகைய வெளிப்படையான விமர்சனங்களை காங்கிரஸின் அகில இந்திய தலைமை கண்டிக்கவில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வழியாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையின் பெரும் முயற்சியின் கீழ் காங்கிரஸுடன் கூட்டணி உருவாக்கி, தொகுதி ஒதுக்கீடு நடந்தாலும், காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட சுமூகமான உறவு ஏற்படவில்லை.
முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள சில காங்கிரஸ் போட்டியிடும் சில தொகுதிகளுக்கு நேரடியாக வந்த ராகுல்காந்தி, தன்னுடைய பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து கலந்து கொள்வதை ஏனோ தவிர்த்து வந்தார்.
இத்தகைய இடைவெளி பிரச்சாரத்தின் போது மட்டுமல்ல, கட்சிகள் தேர்தலுக்காக வேலை செய்வதிலும் பிரதிபலித்திருக்கிறது.
அதாவது, தங்களுடைய கட்சிப் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தங்களுடைய தொண்டர்கள் வேலை செய்தால் போதும் என்கின்ற மறைமுக வலியுறுத்தலை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் உருவாக்கி இருக்கின்றன.
இதுதான் கடந்த கால தேர்தல் அனுபவங்களிலிருந்து, தற்போதைய தேர்தலை வேறுபடுத்தி காட்டுகிறது.
ஏறத்தாழ 26-க்கும் மேற்பட்ட சிறு கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் கூட்டணி போன்ற ஒரு பிரம்மையை திமுக கட்டமைத்திருந்தாலும், தமிழக அளவில் கீழ்மட்டத்தில் வேலை செய்யக்கூடிய தொண்டர்கள் மத்தியில் இந்தக் கூட்டணி அர்த்தமூட்டக்கூடிய விதத்தில் அமையவில்லை என்பதும் தற்போது நிலவும் எதார்த்தமாக இருக்கிறது.
அதாவது, உங்கள் தட்டில் பரிமாறப்பட்டதை மட்டும் நீங்கள் சாப்பிடுங்கள் என்பதைப் போன்ற ஒரு உணர்வு. கூட்டணி உறவுகளை மீறி பல கட்சித் தொண்டர்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
திமுக தான் இப்படி என்றால், பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது?
எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை கட்சியின் முக்கியஸ்தரும் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமிதான் தமிழகம் முழுக்க அலைந்து எழுச்சியான குரலில் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று ஊடகங்களையும் பொதுமக்களையும் கவனிக்க வைத்திருக்கிறார்.
அவருக்கு இணையாக அதிமுகவின் ஏனைய தலைவர்கள் தமிழகம் முழுக்கச் சென்று பரப்புரை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிமுக கூட்டணி அங்கம் வைக்கும் பாமக தலைவரான மருத்துவர் அன்புமணியும் தமிழகம் முழுக்கச் சென்று பிரச்சாரம் செய்த தலைவர்களில் ஒருவர்.
பாஜகவை பொறுத்தவரை பிரதமர் மோடி, நான்கு முறை வந்து சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தாலும் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் போன்றவர்கள் பங்கேற்று பரப்புரை செய்திருந்தாலும், தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுக்கப் பரவலான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தற்போது அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இல்லாதவரான அண்ணாமலை பரப்புரை சென்ற அளவுக்குக் கூட நயினார் நாகேந்திரன் பரவலாக பிரச்சாரம் செய்யவில்லை.
தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்றவர்கள் அவரவர் போட்டியிடும் தொகுதி எல்லைக்குள்ளேயே தங்கள் பிரச்சாரத்தை சுருக்கிக் கொண்டார்கள்.
சீமானும் தமிழகம் முழுக்க நாம் தமிழர் இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அதேசமயம் தவெக தலைவரான விஜய் 234 தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட எத்தனை தொகுதிகளில் உருப்பிடியான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்? அடித்தட்டு மக்களிடம் தங்கள் வாக்குறுதிகளைக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியான விஷயம்.
இதையெல்லாம் விட திமுக தங்களுடைய வாக்குறுதியில் வெளிப்படுத்திய 8,000 ரூபாய் கூப்பன் என்கிற விஷயத்தை மக்களிடம் அழுத்தமாக எடுத்துச் சென்றிருக்கிறது.
ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.10,000 கொடுப்பதாக அறிவித்த அதிமுக அந்த அறிவிப்பை பொதுமக்களிடம் வெகுவாக எடுத்துச் செல்ல தவறிவிட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆக, பிரச்சாரம் நடந்திருக்கிறது என்றாலும், பிரச்சாரம் எந்த அளவுக்கு வீரியமாக எடுத்துச் செல்லப்பட்டு மக்களைச் சென்றடைந்திருக்கிறது என்பதை எல்லாம் மே 4-ம் தேதிதான் முடிவு செய்ய முடியும்.
– அகில் அரவிந்தன்