தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேஜ கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றுள்ளனர்.
கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்.
ஆனால் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை.
ராகுல், கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை தமிழகம் வந்துள்ளார். சனிக்கிழமை அன்று, பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்தார். நேற்று நாங்குநேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்திரா, சோனியா, ராஜிவ் ஆகியோர் தமிழகம் வந்தால், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்தே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். ராகுலும் கடந்த காலங்களில் ஸ்டாலினுடன் சேர்ந்தே பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆனால் இந்த முறை ராகுல், ஸ்டாலினுடன் இணைத்து பிரச்சாரம் செய்யாதது, திமுக கூட்டணி கட்சித் தொண்டர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது முதலே திமுக-வுக்கும் காங்கிரஸுக்கும் சரிப்பட்டு வரவில்லை.
தொகுதிகள் எண்ணிக்கை, விருப்பமான தொகுதிகள் என அனைத்திலுமே திமுக-வுடன் காங்கிரஸ் பெரும் போராட்டம் நடத்தியது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டது.
குறைந்தபட்சம் 35 தொகுதிகளை எதிர்பார்த்த ராகுலுக்கு இந்த உடன்படிக்கையில் துளியும் உடன்பாடு இல்லை.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை டெல்லிக்கு அழைத்து ‘டோஸ்‘ விட்டார் ராகுல்.
ஸ்டாலினுடன், மேடை ஏறப்போவதில்லை என செல்வப்பெருந்தகையிடம் தெளிவாக சொல்லிவிட்டார் ராகுல்.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறிய தகவல் :
“செல்வப்பெருந்தகை மீது ராகுல் கோபத்தில் இருக்கிறார். அதனால்தான் அவர் தமிழக பிரச்சாரத்திற்கு வர விருப்பம் காட்டவில்லை.
ஏப்ரல் 6-ம் தேதி புதுச்சேரியில் ராகுல் பிரச்சாரம் செய்த அதே நாளில் ஸ்டாலினும் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இருவரும் ஒரே மேடையில் பேசுவதற்கான ஏற்பாடுகளை திமுக தரப்பு மேற்கொண்டது – ராகுல் அதை திட்டமிட்டு தவிர்த்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.
அதிமுகவைப் பாராட்டிய ராகுல்:
ஸ்டாலினுடன் மேடை ஏறாதது மட்டுமில்லாமல், அதிமுகவை ராகுல் பாராட்டிச் சென்றுள்ளது. திமுகவினரை கொதிப்படைய செய்துள்ளது.
நாங்குநேரியில் நேற்று பிரச்சாரம் செய்த ராகுல் கூறியதாவது:
ஒரு காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிமுக மிகப்பெரிய பாங்காற்றியுள்ளது – அதிமுகவில் மகத்தான தலைவர்கள் இருந்தார்கள் – அவர்கள் தமிழ் வரலாற்றையும், எதிர்காலத்தையும் பாதுகாத்தார்கள்’ என ராகுல் புகழ்ந்தது, திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திமுக–காங்கிரஸ் உறவில் விரிசல் தொடங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி