ஆறு என்பது வெறும் நீர்நிலையல்ல, சமூகத்தின் உயிர்நாடி!

நூல் அறிமுகம்: 

பவானி ஆற்றின் புனிதம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஈரோடு மாவட்ட மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாறு தான் ‘வானி’ இளையோர் நாவல்.

1950-களின் இறுதியில் சிறுமுகை (மேட்டுப்பாளையம் அருகே) பகுதியில் பவானி ஆற்றின் கரையில் விஸ்கோஸ் ஆலை தொடங்கப்பட்டது.

இந்த தொழிற்சாலை நீலகிரி மாவட்டத்தில் விளையும் யூகலிப்டஸ் மரங்கள் மூலம் மரக்கூழ் கொண்டு செயற்கை பட்டு நூல் தயாரிப்பில் ஈடுபட்டது.

தொழிற்சாலையில் ஏற்படும் கழிவுகளைத் தகுந்த சுத்திகரிப்பு இன்றி நேரடியாக பவானி ஆற்றில் திறந்துவிட்டது.

இதனால் ஆற்றின் நிறம் மாறி, துர்நாற்றம் வீசியதோடு ஆற்று நீர் கருமை நிறமாக மாறியதால் மீன்கள் செத்து மடிந்தன.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்த நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் பாழாயின.

பவானி ஆற்றை நம்பியிருந்த இந்த மாவட்ட மக்கள் மாசடைந்த இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து தோல் நோய்களுக்கும் சுவாசக் கோளாறுகளுக்கும் ஆளாகினர்.

கோபிசெட்டிபாளையத்தில் 30,000 பேருக்கு மேலாக மகப்பேறு மருத்துவம் பார்த்த புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவராக விளங்கிய மருத்துவர் சத்திய சுந்தரி தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அனைவரும் ஒரே நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்ததை அறிந்துள்ளார்.

அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. நோய்க்கான காரணத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார் மருத்துவர்.

நோயாளிகள் அனைவரும் பவானி ஆற்றின் நீரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஆற்று நீர் மிக மோசமான அளவில் மாசடைந்துள்ளதையும் கண்டறிகிறார்.

சவுத் இந்தியன் விஸ்கோஸ் ஆலை தயாரிக்கும் செயற்கை இழையின் கழிவுகள் மூலம் தான் பவானி ஆறு அசுத்தமாகிறது என்பதைக் கண்டறிகிறார் மருத்துவர்.

1980-களின் இறுதியில் பவானி நதி நீர் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற மக்கள் இயக்கத்தை உருவாக்குகிறார் மருத்துவர்.

இந்த இயக்கத்தில் கட்சிப் பாகுபாடின்றி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஓரணியில் திரட்டினார்.

மருத்துவர் ஜீவானந்தம், மருத்துவர் ஜனகரத்தினம், சுந்தரம், நாகராஜன், வி பி குணசேகரன், என் கே கே பெரியசாமி போன்றோர் மருத்துவர் சத்தியசுந்தரியுடன் இணைந்து மக்கள் இயக்கத்தை வழி நடத்தினார்கள்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் துண்டறிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினார்கள். தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம், நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டம் நடத்தினார் மருத்துவர்.

பவானி ஆற்றின் குறுக்கே பல நடைப்பயணங்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. “பவானியைக் காப்போம்” என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாறியது.

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஜெ.பால்பாஸ்கர் அவர்களும் சமூக ஆர்வலர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

வெறும் போராட்டங்களோடு நின்றுவிடாமல், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளப்பட்டது.

1990-களின் நடுப்பகுதியில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், ஆலைக் கழிவுகளை ஆற்றில் விடக் கூடாது என்று நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஆலையில் போதிய சுத்திகரிப்பு நிலையம் இல்லாததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

தொடர் போராட்டங்கள் மற்றும் சட்ட நெருக்கடிகளால் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக ஆலை 2004 ஆண்டு உச்சநீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

“ஒரு ஆறு என்பது வெறும் நீர்நிலை அல்ல; அது ஒரு சமூகத்தின் உயிர்நாடி” என்பதை உலகுக்கு உணர்த்தியது மருத்துவர் சத்திய சுந்தரி நடத்திய போராட்டம்.

இந்தப் போராட்டத்தில் மருத்துவர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார். குறிப்பாக சூட்கேசில் ஒரு கோடி ரூபாயை வைத்துக்கொண்டு பேரம் பேசியதும்,

நேரிலும், அலைபேசியிலும் கொலை மிரட்டல் விடுத்தலும், காரில் பயணம் செய்த போது லாரி, வேன் மூலம் மருத்துவரின் கார் மீது மோதி கொலை செய்ய முயற்சியும் நடந்தது.

இந்தப் போராட்ட வரலாறு தான் நாவலாக படைக்கப்பட்டுள்ளது.

‘வானி’ – வளரிளம் பருவத்தினரை இலக்காகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவலாகும். பொதுவாக இத்தகைய நாவல்கள் சாகசம், இயற்கைப் பாதுகாப்பு அல்லது சமூக மாற்றங்களை மையமாகக் கொண்டு அமையும்.

இந்த நூல் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இயற்கைக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பை இளைய தலைமுறைக்கு விளக்கும் வகையில் இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

நூலாசிரியர் முனைவர் ஈரோடு சர்மிளா மிகவும் எளிய மற்றும் நேரடியான தமிழ் நடையைக் கையாண்டிருக்கிறார்.

இந்த நாவலில் முக்கிய கதாபாத்திரமாக மருத்துவர் சத்தியசுந்தரியும் அவரது பேத்தி நித்திலாவும் வலம் வருகிறார்கள்.

பேத்தி நித்திலா, பவானி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போராட்ட வரலாறை தனது கேள்விகளால் துளைத்து எடுத்து பாட்டியிடம் விடைகளைப் பெறும் விதம் குறித்த காட்சிகளை விவரிப்பதன் மூலமும், உரையாடல்கள் மூலமும் கதையை நகர்த்தும் பாணி வாசகர்களைக் கவரும் வண்ணம் உள்ளது.

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என பிரத்யேகமான கதைகள், குறிப்பாகச் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாவல்கள் வரவில்லை.

நூலாசிரியர் முனைவர் ஈரோடு சர்மிளா இந்தக் குறையை இந்த நாவல் மூலம் போக்கியுள்ளார்.

இன்றைய சூழலில் இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில், ‘வானி’ போன்ற நாவல்கள் மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் இயற்கையைப் பற்றிய புரிதலையும் நேயத்தையும் உருவாக்க உதவும் ஒரு முக்கியமான படைப்பாகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இந்த நூல் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

****

 வானி –  இளையோர் நாவல்

ஆசிரியர் முனைவர் ஈரோடு சர்மிளா

சூழல் அறிவோம் பதிப்பகம்

கவுந்தப்பாடி-638455.

விலை : ரூ. 200/-

தொடர்பு எண்: 8825857649

suzhalarivom@gmail.com

– நூல் அறிமுகம் – M.J. பிரபாகர்

Comments (0)
Add Comment