நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம்.
அந்த மாற்றத்திற்கான புரிதலைக் கிராம சபை வழியாக உருவாக்க வேண்டும். அதற்கான சிறந்த வழிகாட்டி நூலாக இந்தப் புத்தகம் விளங்குகிறது.
புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றுவதே கிராம சபையின் ஆத்மார்த்தப் பணி என இந்த நூல் வலியுறுத்துகிறது.
கிராமப் பஞ்சாயத்துகளை நீடித்த, நிலைத்த வளர்ச்சியை உருவாக்கும் அமைப்பாக மாற்றுவது எப்படி என்பதற்கான தெளிவான செயல்முறையையும் இந்த நூல் வழங்குகிறது.
ஊராட்சித் தலைவர் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்ன? எப்படிப்பட்ட திறன்களை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
அவர் கிராமத்தை எவ்வாறு வழிநடத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்குப் பேராசிரியர் பழனித்துரை ஆழமான விளக்கங்களை அளிக்கிறார்.
மக்களை இணைத்துக் கிராமத்தை ஒரு பெரிய சமூக இயக்கமாக மாற்றுவதே ஊராட்சித் தலைவரின் முக்கியப் பொறுப்பு என இந்த நூல் பறைசாற்றுகிறது.
ஒரு புதிய சமூக அரசியல் கலாச்சராத்துக்கான செயல்திட்ட வடிவமைப்பு இந்த நூல், அந்தப் புதிய கலாச்சாரத்தின் மூலம் கிராமத்தின் தற்சார்பு எவ்வாறு சாத்தியம்? எப்போது சாத்தியம்? என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார்.
நவீனமயமும், நகரமயமும், நகர வாழ்வியல் கலாச்சாரமும் கிராமங்களில் ஆழமாகப் புகுந்திருப்பது உண்மை.
ஆனால், அதுவே உண்மையான வளர்ச்சி அல்ல என இந்த நூல் வலியுறுத்துகிறது.
மக்கள் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, தன்னிறைவு, ஆரோக்கியமான வாழ்வியல் ஆகியவற்றைக் கொண்ட கிராமமே உண்மையான முன்னேற்றம் அடைந்த கிராமம்.
நல்ல ஜனநாயகம் வேண்டுமா? குன்றாத வளர்ச்சி வேண்டுமா? சமூக மூலதனத்தைச் சரியாகப் பயன்படுத்தும் கிராமங்களை உருவாக்க வேண்டுமா?
அரசு நிதியைச் செலவழிக்கும் நிர்வாக அமைப்பாக அல்லாமல், காந்தி கண்ட கிராம நிர்மாணக் கனவை நனவாக்கும் கிராமங்களை உருவாக்க வேண்டுமா?
சிந்தனைத் துணிவும் செயல்திறனும் கொண்ட கிராம சமய தலைவர்களை உருவாக்க வேண்டுமா? அப்படியானால், அதற்கு இந்த நூல் ஒரு சிறந்த கையேடு.
பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும், அவர்களை வழிநடத்தும் திறமையான மக்கள் தலைவர்களை உருவாக்கவும், பொறுப்புமிக்க கிராம ஊராட்சிகளைக் கட்டியெழுப்பவும் தேவையான அனைத்தையும் படிப்படியாகக் கற்றுத்தரும் நூலாக இது அமைகிறது.
கிராம மேம்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
‘அதிகாரப் பரவல்’ என்பது என்ன? அது எவ்வாறு நடைமுறையில் செயல்பட வேண்டும் என்பதற்கும் இந்த நூல் புதிய வெளிச்சம் தருகிறது.
குறிப்பாக, ‘கிராம சபை என்பது அரசியல் பயிற்றுவிக்கும் ஓர் அற்புதமான ஆயுதம்’ என்று குறிப்பிடும் இடம் மிகவும் சுவாரசியமானது.
அதை வாசிக்கும்போது, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கிராம சபையில் மக்கள் பிரதிநிதியாகச் செயல்பட்டு அனுபவம் பெற்ற பின்பே மேல் நிலை அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
பேராசிரியர் பழனித்துரை இந்த நூல் வழியாக, “மத்திய அரசு, மாநில அரசு போல உள்ளாட்சியும் ஓர் அரசாட்சியே. அது ஏன் மத்திய, மாநில அரசுகளிடம் கையேந்தி நிற்க வேண்டும்?” என்ற கேள்வியை உரக்க எழுப்புகிறார்.
அவரது இந்த முக்கியமான அவதானிப்பைத் திக்கெட்டும் எடுத்துச் சென்று மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
*******************
நூல்: நமது ஊர் நமது பொறுப்பு
ஆசிரியர்: க. பழனித்துரை
அடையாளம் பதிப்பகம்
பக்கங்கள்: 192
விலை: ரூ. 209/-