பத்தாயிரம் கோடி ரூபாய் + அழகான பெண்!

துருக்கி நாட்டுக்கு நிபந்தனை வைத்த உகாண்டா நாட்டுத் தளபதி

சிறு பிள்ளைகள் அக்கம் பக்கத்தில் வம்பிழுத்துவிட்டு வர, பெற்றவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்படியோர் நிலை ஒரு நாட்டின் அதிபருக்கே ஏற்பட்டால்… சுவாரஸ்யமான அந்த விஷயத்தைப் பார்ப்போம்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா என்றதுமே வறுமைதான் நமக்கு நினைவுக்கு வரும். அங்கு இன்னொரு பிரச்சினையும் உண்டு; அது மதத் தீவிரவாதம்.

அங்கு 99% பேர் இஸ்லாமியர்கள் என்றாலும், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவை அரசு எதிர்த்து நிற்கிறது. அரசோடு மக்களும் சேர்ந்து எதிர்க்கிறார்கள்.

இவர்களுக்கு உதவியாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் சில நாடுகள் தங்கள் ராணுவத்தை அனுப்பி உள்ளன.

விஷயம் இதில் இல்லை… சோமாலியாவில் அமைதியை நிலைநாட்ட உகாண்டா நாடும் படையை அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில் தான், உகாண்டா ராணுவ ஜெனரல் முஹூசி கைனருகாபாவின் ட்வீட் ஒன்று உலகையே அதிர வைத்திருக்கிறது.

அவர், “சோமாலியாவில் எங்கள் வீரர்கள் உயிரைக் கொடுத்து அமைதியை நிலைநாட்டி வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி அந்நாட்டில் பல்வேறு முதலீடுகளைச் செய்து லாபம் ஈட்டுகிறது துருக்கி நாடு.

இதற்கு ஈடாக, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பணமும், துருக்கி நாட்டின் மிக அழகான பெண்ணைத் திருமணம் செய்து தரவும் வேண்டும்” என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார்.

மேலும், “முப்பது நாட்களுக்குள் இந்தக் கோரிக்கைகளைத் துருக்கி நிறைவேற்றாவிட்டால், உகாண்டாவில் உள்ள துருக்கியத் தூதரகம் மூடப்படும்.

அதோடு எங்கள் வான்வெளியில் துருக்கி ஏர்லைன்ஸ் பறக்கத் தடை விதிக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

இதுதான் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் முஹூசியின் இந்தப் பேச்சுக்கு என்ன பதிலுரைப்பது என விக்கித்துப் போய் நிற்கிறது துருக்கி நாடு.

சோமாலிய அரசும் ஏதும் சொல்லவில்லை. முஹூசியின் தந்தையும் உகாண்டா அதிபருமான யோவேரி முசெவேனியும் தர்மசங்கடத்தில் நெளிகிறார்.

“ஏன் தர்மசங்கடம்? அந்த நபரை ஜெனரல் பதவியிலிருந்து நீக்க வேண்டியதுதானே?” என்கிறீர்களா… அவர் வெறும் ஜெனரல் அல்ல; அதிபர் யோவேரி முசெவேனியின் மகனும் கூட!

முஹூசி இப்படி அதிரடியாக ட்வீட் போடுவது புதிதல்ல. 2022-இல் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்க இருந்த நேரம்.

நம்ம முஹூசி, “ஜார்ஜியாவுக்கு வாழ்த்துகள். அவருக்கு நூறு உயர்தர பசுக்களை அனுப்புவேன். எனக்கு ஒரு நல்ல பெண் பார்த்துத் தர வேண்டும்” என ட்வீட் போட்டார். இது சர்ச்சையைக் கிளப்பியது.

தவிர, இந்த ட்வீட்டுக்கு ஒருவர், “நீங்கள் அளிக்கும் பசுக்களை அவர் ஏற்காவிட்டால்?” என்று கேட்க, “அவரது நாட்டின் மீது படையெடுப்பேன்” என்றார் ராணுவத் தளபதி முஹூசி.

இதனால் கோபமடைந்த இத்தாலி நாடு, தனது தூதர் மூலம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

அதிபர் யோவேரி, “என் மகன் ஏதோ நகைச்சுவைக்காக அப்படிப் பதிவிட்டுவிட்டான், பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என மன்னிப்பு கேட்டார்.

அதே 2022-இல், பக்கத்து நாடான கென்யாவுடன் போர் ஏற்படும் சூழலையும் உருவாக்கிவிட்டார் முஹூசி.

“நானும் எனது ராணுவமும் கென்யாவின் தலைநகரான நைரோபியைக் கைப்பற்ற இரண்டு வாரங்கள் கூட ஆகாது” என்று பதிவிட்டார்.

கென்யா கொதித்துவிட்டது. கண்டனங்கள், மக்கள் எதிர்ப்பு எனத் தாக்குதல் நடத்தத் தயாராகிவிட்டது கென்யா.

வழக்கம்போல், முஹூசியின் அப்பா யோவேரி காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டார்.

“அவன் சின்னப் பையன், அவன் பதிவிட்டது தனிப்பட்ட கருத்து; நாட்டின் கருத்தல்ல” என மன்றாடிப் போரைத் தவிர்த்தார்.

ஆனால் கென்யாவும் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு நாடுகளும், “சின்னப் பையனா? அந்தச் சின்னப் பையனை நம்பியா ராணுவத் தளபதி பதவியைக் கொடுத்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டன.

“இதோ அவனுக்குத் தண்டனை தருகிறேன்” என்று அதிபர் யோவேரி எடுத்த நடவடிக்கை உலகை அதிர வைத்தது.

மகன் முஹூசி வகித்து வந்த தரைப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், உடனடியாக ‘ஜெனரல்’ என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அதாவது, பதவி உயர்வுதான் தண்டனை… மகன் அல்லவா!

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்… அப்பா அதிபர், மகன் ராணுவத் தளபதி; அப்படியென்றால் அங்கு மன்னராட்சியா நடக்கிறது? கிட்டத்தட்ட அப்படித்தான்.

உகாண்டா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது இடி அமீன். அவர் 1979-இல் புரட்சி மூலம் விரட்டியடிக்கப்பட்டார்.

அவரை விரட்டியடித்த பல ராணுவக் குழுக்களுள், இந்த யோவேரி உருவாக்கிய குழுவும் ஒன்று. அடுத்து வந்த ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார்.

ஆனால் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இவரும் காட்டுக்குள் சென்று கொரில்லா படை உருவாக்கி, புதிய அரசுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார்.

1985-க்குள் ஐந்து அதிபர்கள் மாறி மாறி வந்தனர்; ஒருவரை ஒருவர் கவிழ்த்தனர். அப்படித் தனக்கு முன்னவரை வீழ்த்தி 1986-இல் அதிபரானவர்தான் யோவேரி முசெவேனி.

இடைப்பட்ட காலத்தில் குறுகிய நாட்கள் அதிபராக இருந்தவர்களைப் போல இவர் இல்லை. இன்று வரை நாற்பது ஆண்டுகளாக அதிபர் நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

ரொம்ப நல்ல பிள்ளையாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிடுவார். இவரேதான் ஜெயிப்பார்.

“மக்கள் விருப்பம் அப்படி இருக்கிறது; பதவி ஒரு முட்கிரீடம்தான்” என்று பேசிவிட்டு, அதே அதிபர் இருக்கையில் அமர்ந்திருப்பார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் எதிர்க்கட்சிகள் கூப்பாடு போடும்.

“தேர்தல் முறைகேடு, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டது, கள்ள ஓட்டு” என்றெல்லாம் கதறும்.

“எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், அவர்களது குடும்பத்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்” என மனித உரிமை ஆர்வலர்கள் கொதிப்பார்கள்.

ஆனால், புன்னகையுடன் ஆட்சியைத் தொடர்வார் யோவேரி.

இவருக்கு மக்கள் மீது பெரும் பாசம். மக்கள் என்றால் பொதுமக்கள் அல்ல; அவரது குழந்தைகள்!

அதற்கு முன் அவரது மனைவியைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். அவரது பெயர் ஜானெட் முசெவேனி.

1973-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இன்று வரை ஆத்மார்த்தமான தம்பதி. அதனால்தான் மனைவிக்கு நாட்டின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பை அளித்து அழகு பார்க்கிறார் யோவேரி.

இவர்களது மகன்தான் முஹூசி கைனருகாபா – நாட்டு ராணுவத்தின் ஜெனரல்!

உகாண்டாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த, தற்போது ஆப்பிரிக்க யூனியனின் உகாண்டா சார்பான உறுப்பினராக இருக்கும் சாம் குட்சாவின் மகளான சார்லோட்டைத் தான் முஹூசி திருமணம் செய்துள்ளார்.

தவிர, மூன்று மகள்கள். அவர்களும் அவர்களது கணவர்களும் அரசுப் பதவிகள் எதிலும் இல்லை.

“அப்பாடா” என்கிறீர்களா? அரசை வழிநடத்துவதே அவர்கள்தான். இப்படி அதிபர் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு அதிகார மையம்தான்.

அதிலும் ட்வீட் புகழ் ஜெனரல் முஹூசி கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், அவரை அடுத்த அதிபர் ஆக்கிவிட வேண்டும் என்று குடும்பம் துடிக்கிறது.

இதற்காகப் பொது நல அமைப்பு ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் முஹூசி.

நமது சந்தேகம் இதுதான்… தளபதியாக இருக்கும்போதே முஹூசி கன்னாபின்னாவென்று ட்வீட் போடுகிறார், அப்பா மன்னிப்பு கேட்கிறார்.

முஹூசியே அதிபராகி கண்டபடி ட்வீட் போட்டால், யார் மன்னிப்பு கேட்பது?

– பத்திரிகையாளர் டி.வி.சோமு

Comments (0)
Add Comment