நூல் அறிமுகம்:
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல். யூமா வாசுகி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நூலாசிரியர் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு.
தமிழில் அறிவியல் புனைவை எழுதுகிறவர்கள் எண்ணிக்கை மிக அரிதாக இருக்கக்கூடிய சூழலில் இவரது நூல் நம்பிக்கையளிக்கிறது.
சுஜாதாவின் அறிவியல் புனைவால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதன் பிறகு தமிழ் எழுத்துலகம் மிகப்பெரிய வெற்றிடத்திற்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அகரா அவர்களின் எழுத்து பெரும் ஆறுதலளிக்கிறது.
ஒருவகையில் அறிவியல் புனைவு எழுதுபவர்களுக்கு மிகத் தீவிரமான அறிவியல் சார்ந்த வாசிப்பும் அது சார்ந்த விழிப்புணர்வும் தேவை. அதற்கென மெனக்கெட்டு உழைப்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் அகரா நம்பிக்கை அளிக்கிறார்.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய நிறைய விஷயங்கள் இன்று நடைமுறை உலகில் சாத்தியப்பட்டிருக்கிறது எனும் வகையில் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் ஒரு வகையில் எதிர்காலத்தையும் கணிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இவருடைய சிறுகதைகள், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் நுட்பங்கள் வியக்க வைக்கிறது.
தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் இருக்கின்றன. முதலில் இறவா நொடிகள்.
நிகழ்காலத்தில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு கடந்த காலத்தில் இருக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு நிகழ்கிறது.
இருவருக்கும் இடையிலான உறவு இன்ஸ்டாகிராம் வழியில் துவங்கும் நிலையில், அது அடுத்தடுத்த கட்டங்களுக்கு பரிணமிக்கும் போதும் அவர்களால் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத சூழல்.
ஏனெனில் அவளுடைய கடந்த காலத்தில் அவன் அறிமுகமாகாதவனாக இருக்கிறான்.
இத்தனைக்கும் காரணம் அவன் நெட்வொர்க்கின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து நண்பன் மூலமாக கிடைத்த புதிய ரவுட்டரை கணினியில் இணைய இணைப்புக்காக இணைத்தது.
கடந்த கால பிம்பத்திற்கும் நிகழ்கால மனிதனுக்கும் இடையிலான அந்த உறவு நேரில் என்ன மாதிரியான சிக்கல்களை நிகழ்த்துகிறது என்பது கதை.
திடீரென ஒரு நாள் அந்த ரவுட்டர் வேலை செய்யாமல் போக அவர்களுக்கு இடையில் என்ன நிகழ்ந்தது என்பதே இறவா நொடிகள்.
இரண்டாவது சிறுகதை லூசிட் லவ். ஐடி கம்பெனியில் பணிபுரியும் கதிர் எலக்ட்ரானிக் பொருட்களை தீவிர பொழுதுபோக்காக பயன்படுத்துபவன். புதிதாக ப்ளேஸ் ஸ்டேஷனுக்கு வரும் லூசிட் கேம் எனும் ஏஐ விளையாட்டை விளையாடத் தொடங்குகிறான்.
கனவுக்குள் ஒரு எந்த இடத்திற்கு விரும்புகிறோமோ அந்த இடத்திற்கு இட்டுச் செல்லும்.
நிகழ்வுலகில் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிறைய விருப்பங்களை கனவில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறான். இருவருக்கும் இடையில் மெல்ல மெல்ல எப்படி உறவு துளிர்க்கிறது.
இருவரும் இணைந்து பயணிக்க, ஒரு நாளில் எதிர்பாராத ஒரு விபத்தில் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிரிகிறது.
கனவுலகில் இறுதி வரை தன்னைப் பற்றிய அடையாளங்களை மறைத்துக் கொண்ட அந்தப் பெண்ணை நிகழ் உலகில் தேடி கண்டுபிடித்தானா? இருவரும் சேர்ந்தார்களா? என்பது அழகான ஒரு காதல் கதை.
மூன்றாவது கதை பியூட்டிஃபுல் மைண்ட். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பும் சிவாவிற்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வுகள் அத்தனையும் ஏற்கனவே பார்த்த நிகழ்வுகளாக இருப்பதாக உணர்கிறான். ஒருவகையில் ‘தேஜாவு’ போன்று.
அடுத்தடுத்த நிகழ்வுகளும் அதேபோல் தொடர, புதிராக தன்னுடைய நண்பன் ராமை சந்திக்கச் செல்கிறான். தொடர்ந்து நிகழ்வுகளை அவன் பட்டியலிட அதற்கான காரணமாக அங்கு ஒரு மிஷினை காண்பிக்கிறான் ராம்.
அதுதான் ‘டெலிபோர்ட்டேஷன் டிவைஸ்’ கதையில் அவர் எதிர்கால அறிவியல் நுட்பங்களை கொண்டு வந்தது சேர்க்கிறார்.
‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’, ‘சப் ஆட்டோமிக்’ என்கிற கருத்துருக்களை கதையோடு இணக்கமாக பயன்படுத்தியிருக்கிறார்.
‘டெலிபோர்ட்டேஷன் டிவைஸ்’ இன் மூலமாக அவர்கள் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் பயணம் செய்ய, அதனால் அவனுடைய வாழ்க்கை நிகழ்வுகளை சிறிது மாற்றும் போது எப்படி அது அடுத்தடுத்த நிகழ்வுகளை பாதிக்கிறது என்பதாக ஒரு பாரடக்ஸ் வகை கதையாக எழுதி இருக்கிறார், சுவாரசியம்.
இந்த தொகுப்பில் மிகவும் கவர்ந்தது காட்ஜிபிடி (GodGPT) என்கிற சிறுகதை. எப்படி இன்று AI ஆல் உலகம் அதன் செயல்பாட்டு திறனில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டிருக்கிறதோ, அப்படி ஒரு தொழில்நுட்பம் வளரும் போது அது என்ன மாதிரியான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை கதையாக்கியிருக்கிறார்.
அர்ஜுன் உருவாக்கிய காட்ஜிபிடி என்னும் செயலி எதிர்காலத்தை கணிக்க கூடியதாக இருக்க, பரிசோதனை முயற்சியிலேயே அவனின் காதலி பிரியா இன்னும் சற்று நேரத்தில் இறக்கப் போகிறார் என்கிற தகவல் திரையில் ஒளிர்க்கிறது.
தான் அழிவதற்கு முன்பு தன்னுடைய நினைவுகளை, உணர்வுகளை, சுய நினைவுகளை டிஜிட்டல் ஆக மாற்றி தரவுகளாக காட்ஜிபிடி யில் பதிய வேண்டுகிறாள் பிரியா. ஏஐ க்கு மனிதத் தன்மை கிடைக்கும்போது அது என்ன விதமாக பரிணமிக்கிறது.
தரவுகளோடு தரவுகளாக சேர்ந்த ப்ரியாவின் நினைவுகளை அவனால் மீண்டும் சேகரிக்க முடிந்ததா? மனித தன்மையை பெற்றுக்கொண்ட ஏஐ என்ன விதமான பரிணமித்தது?
அதனால் உலகத்தில் என்ன விதமான பிரச்சனைகள் நிகழ்ந்தது என்பதை பரபரப்பான கதையாக்கி இருக்கிறார்.
ஒருவகையில் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் வரலாம் என்கிற எச்சரிக்கையாகவும் தோன்றுகிறது.
ஐந்தாவது சிறுகதை ஆழி. கிட்டத்தட்ட இந்த கதை திரைகதை அமைப்பைப் போல விறுவிறுப்பாக செல்கிறது.
பேய் கதைக்கே உரிய திகிலோடு வாசிக்க வைக்கிறது.
ஆயினும் ஆங்காங்கே சில குறிப்புகளைக் கொடுத்து அறிவியல் புனைவுதான் என்று உணர்த்துகிறார்.
கடைசி வரை பேய்க்கதை போலவே கொண்டு சென்று ‘ஆஸ்டல் ட்ரான்ஸ்போர்டேஷன்’ என்று ஆன்மாவை மட்டும் கடத்தும் எதிர்கால அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்.
ஒரு வகையில் குண்டலினி யோகாவில் சொல்லப்படுவது போல, அறிவியலில் “ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது இன்னொன்றாக மாற்றத்தான் முடியும்” என்கிற கருத்தை ஜீவாத்மா பரமாத்மாவோடு தொடர்புபடுத்தி ஆன்மா உருவாக்கப்படுவதும் இல்லை அழிக்கப்படுவதும் இல்லை அது இன்னொன்றாக மாற்றமடைகிறது என்பதாக ‘ஆஸ்டல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன்’ என்கிற சுவாரஸ்யமான ஒரு புனைவை சொல்லியிருக்கிறார்.
ஒரு விஞ்ஞானியை அறிமுகப்படுத்தி, அவனுடைய ஆய்வகம் என்றெல்லாம் தொடங்கும் கதை, கதிருக்கும் அந்த ஆய்வகத்திற்கும் இடையிலான சில நிகழ்வுகள், அவனுடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு திரும்பத் திரும்ப எப்படி ஒரு லூப் போல் நிகழ்கிறது என்பதையும் தொடர்பு படுத்தியிருப்பார்.
அறிவியல் சம்பந்தமாக நிறைய கேள்விகள் எழுப்பக் கூடியதாக இருக்கிறது சிறுகதை.
எல்லாவற்றுக்கும் அவர் தெளிவான விளக்கத்தை கொடுக்கக் கூடியவராகவும் இருந்தார் என்பது மகிழ்ச்சி.
நூலுக்கு எழுத்தாளர் அதிஷா அவர்களும் திரைப்பட இயக்குநர் அஜயன் பாலா அவர்களும் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள்.
இது முதல் நூல் என்பது ஆச்சரியம். இன்னும் ஒரு அறிவியல் எழுத்தாளர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பது இந்த நூல் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. வாழ்த்துகள்.
நூல் : இறவா நொடிகள்
அறிவியல் புனைவுச் சிறுகதைகள்
நூலாசிரியர் : அகரா
கலக்கல் ட்ரீம்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை
பக்கங்கள் : 152
விலை : ரூ. 180/-
தொடர்புக்கு – 98409 67484
– சுமித்ரா சத்தியமூர்த்தி