மனிதனின் அன்றாடத் தேவைக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது எரிபொருள்கள். இவை மின் உற்பத்தி, வாகனப் போக்குவரத்து, சமையல் போன்றவற்றிற்கு இன்றியமையாத ஒன்றாகும்.
புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருட்கள் என பல வடிவங்களில் இவை கிடைக்கின்றன.
தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டில் பெரிய அளவில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலை, மாற்று எரிபொருளுக்கான தேவையை நமக்கு உணர்த்துகிறது.
சூரிய ஆற்றல் மற்றும் உயிரி எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.
மாற்று எரிபொருள் என்பது பெட்ரோலியம் அல்லாத சுற்றுச்சூழலை பாதிக்காத, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாகும்.
இவை கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, காற்று மாசுபாட்டை தடுத்து நிலையான எதிர்காலத்துக்கு வழிவகுகின்றன.
சமையல் எரிவாயுவுக்கு மாற்று வழிமுறைகள் உள்ள போதிலும் அதனைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும். இது Bio Gas திட்டம் என அழைக்கப்படுகிறது.
விவசாயக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மாட்டுச் சாணம் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு இதனை தயாரிக்க முடியும்.
இது சமையல் எரிவாயு செலவைக் குறைத்து, கழிவு மேலாண்மையை மேம்படுத்துகிறது.
அவரவர் பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு இதனை அமைக்க முடியும்.
நகரங்களில் மலிவு விலையில், சிறிய உயிரி எரிகலன்கள் கிடைக்கின்றன. இதனை வீட்டின் சமையலறையை ஒட்டியோ அல்லது மாடியிலயோ அமைக்கலாம்.
தினசரி சேரும் காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், பழத்தோல்கள் ஆகியவற்றை தனியாக சேகரித்து சிறிது தண்ணீருடன் அரைத்து கலனில் இடவேண்டும்.
இதில் ஏற்படும் நுண்ணுயிரிகள் நொதித்தல் மூலம் மீத்தேன் வாயு உருவாகிறது. குழாய் மூலம் இந்த வாயுவை அடுப்புக்கு இணைத்துச் சமைக்கலாம்.
கிராமப்புறங்களில் அதிக அளவில் மாட்டுச் சாணம் கிடைப்பதால் அதனைக் கொண்டு சாண எரிவாயுக் கலன் அமைத்து பயன்படுத்தலாம். வாயு தயாரித்த பின் வெளியேறும் திரவம் சிறந்த இயற்கை உரமாக பயிர்களுக்கு பயன்படும்.
இந்தக் கலனை உபயோகிப்பதால் செலவு குறைவதோடு மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறையும்.
கழிவுகள் தெருவில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
இம்முறையில் கழிவுகள் மற்றும் தாவரங்களிலிருந்து தொடர்ந்து எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும்.
கோபர்தன் திட்டம் என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு முதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்க பயோ எரிபொருள் வாரியம் உதவுகிறது.
எனவே குறைந்த மாசுபாடு மற்றும் அதிக ஆற்றல் திறன் கொண்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி எரிசக்தி பற்றாக்குறைக்குத் தீர்வு காண்போம்.
– எஸ். வாணி