பொதுவாக ஆக்டோபஸ் என்றாலே வித்தியாசமான உயிரினம் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. அதில் ஒரு வகை ஆக்டோபஸ் காற்றை சேமித்து வைத்து கடலில் மிதக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆனால், அது உண்மை. ஆர்கோனாட் (Argonaut) என்ற இந்த மர்மமான உயிரினம், உலகிலேயே மிகவும் விசித்திரமான ஆக்டோபஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதை Paper Nautilus என்றும் அழைப்பார்கள். (Nautilus – வெளிப்புற சுருள் வடிவ ஓடு கொண்ட ஒரு செஃபலோபாட் (Cephalopod) உயிரினம்.)
ஆனால், சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஆர்கோனாட் நாட்டிலஸ் அல்ல; இது ஒரு வகை ஆக்டோபஸ்.
பெண் ஆர்கோனாட் உருவாக்கும் மெல்லிய, சுருள் வடிவ முட்டைக் கூடு (Egg Case) நாட்டிலஸின் ஓட்டை ஒத்திருப்பதால் மட்டுமே இந்தப் பெயர் வந்தது.
நீண்ட காலமாக, ஆர்கோனாட் இந்த ‘ஓட்டை’ வேறு உயிரினங்களிடமிருந்து எடுத்துப் பயன்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் நம்பினர்.
ஆனால், 19-ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு இயற்கை ஆராய்ச்சியாளர் Jeanne Villepreux-Power நடத்திய ஆய்வுகள் இந்த நம்பிக்கையை முறியடித்தன.
பெண் ஆர்கோனாட் தனது இரண்டு நீளமான சிறப்பு கைகளிலிருந்து கால்சைட் (Calcite) என்ற கனிமப் பொருளை சுரந்து, அந்த மெல்லிய சுருள் வடிவ முட்டைக் கூட்டை தானே இயற்கையாக உருவாக்குகிறது என்பது அப்போது நிரூபிக்கப்பட்டது.
எனவே, அது உண்மையான ஓடு அல்ல; பெண் ஆர்கோனாட்டின் உடலில் உருவாகும் தனித்துவமான முட்டைக் கூடு.
பெரும்பாலான ஆக்டோபஸ்கள் கடலடியில் வாழ்கின்றன. ஆனால், ஆர்கோனாட் மட்டும் திறந்த கடலின் மேற்பரப்பிற்கு அருகில் வாழும் அரிய Pelagic Octopus ஆகும்.
இதற்காக, பெண் ஆர்கோனாட் கடலின் மேற்பரப்பில் இருந்து ஒரு காற்றுக் குமிழியை தனது முட்டைக் கூட்டுக்குள் அடைத்து வைத்து, தண்ணீரில் எளிதாக மிதக்கிறது.
இந்த மிதப்புத் திறன் (Buoyancy) காரணமாக, அதிக ஆற்றலை செலவிடாமல் திறந்த கடலில் வாழ முடிகிறது.
ஆனால், இங்கே ஒரு பெரிய மர்மம் இருக்கிறது.
இந்த மிதப்புத் திறனைப் பெற உதவும் முட்டைக் கூடு பெண் ஆர்கோனாட்டுக்கு மட்டுமே உள்ளது.
ஆண் ஆர்கோனாட்டுக்கு அந்த முட்டைக் கூடு கிடையாது.
அப்படியிருக்க, அது திறந்த கடலில் எப்படி வாழ்கிறது, எப்படி மிதக்கிறது என்பது இன்றுவரை முழுமையாகப் புரியாத ஒரு அறிவியல் புதிராகவே உள்ளது.
ஆண் மற்றும் பெண் ஆர்கோனாட்களுக்கு இடையே மிகப் பெரிய உடலமைப்பு வேறுபாடு காணப்படுகிறது.
பெண் ஆர்கோனாட், ஆணைவிட சுமார் 8 மடங்கு பெரியதாகவும், சில இனங்களில் 600 மடங்கு வரை கனமாகவும் இருக்கும்.
மிகப்பெரிய இனமான Argonauta argo-வில், பெண்ணின் உடல் சுமார் 13 செ.மீ. வரை வளரக்கூடும்.
ஆனால் ஆண் வெறும் 2 செ.மீ. அளவுதான் இருக்கும்.
இதன் இனப்பெருக்க முறையும் வித்தியாசமானது.
ஆண் ஆர்கோனாட்டின் இடது கண்ணுக்குக் கீழே இருக்கும் மாற்றமடைந்த இனப்பெருக்கக் கை (Hectocotylus)-யில் விந்தணுக்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.
இனப்பெருக்கத்தின் போது, அந்தச் சிறப்பு கையை உடலிலிருந்து பிரித்து பெண்ணிடம் அனுப்புகிறது.
பெண் அதை தனது முட்டைக் கூட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் முட்டைகளை கருவுறச் செய்கிறது.
இந்த மாற்றமடைந்த கை, இனப்பெருக்கத்திற்காக மட்டுமே பயன்படும் ஒரு சிறப்பு உறுப்பு.
பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு பெண் ஆர்கோனாட்கள் மட்டுமே நன்கு தெரிந்திருந்தன.
பெண்ணின் முட்டைக் கூட்டுக்குள் காணப்பட்ட இந்தப் பிரிந்த ஹெக்டோகோடைலஸை முதலில் ஒரு புதிய வகை ஒட்டுண்ணி புழு என்று கூட அவர்கள் நினைத்தனர்.
பின்னர்தான் அது ஆண் ஆர்கோனாட்டின் மாற்றமடைந்த இனப்பெருக்கக் கை என்பது புரிந்தது.
இன்றும் ஆர்கோனாட் பல மர்மங்களை தன்னுள் வைத்திருக்கிறது.
குறிப்பாக, இயற்கைச் சூழலில் உயிருடன் இருக்கும் ஆண் ஆர்கோனாட்டைப் பற்றிய நேரடி கள ஆய்வுகள் மிகவும் அரிதாகவே உள்ளன.
மேலும், திறந்த கடலின் நடுவே ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் எப்படி கண்டுபிடிக்கின்றன? ஏன் சில நேரங்களில் ஜெல்லி மீன்களின் மீது பயணம் செய்கின்றன?
ஏன் சில சமயங்களில் நூற்றுக்கணக்கான ஆர்கோனாட்கள் ஒன்றாகக் கூட்டமாக மிதக்கின்றன? போன்ற பல கேள்விகளுக்கும் இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை.
தானாக உருவாக்கும் முட்டைக் கூடு, காற்றைப் பயன்படுத்தி மிதக்கும் திறன், உயிரின உலகிலேயே வித்தியாசமான இனப்பெருக்க முறைகளில் ஒன்று, இன்னும் தீராத பல அறிவியல் மர்மங்கள்,
என இவை அனைத்தும் சேர்ந்து, ஆர்கோனாட்டை உலகின் மிகவும் ஆச்சரியமான ஆக்டோபஸ்களில் ஒன்றாக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– சங்கீதா