இருபது ஓவர் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்கிற பெருமைகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்கிறது.
இந்திய அணி கோப்பையை வென்றாலும்கூட, அணியில் நிலவும் சார்புத்தன்மை, போதாமைகள் போன்றவையும் இந்த முறை வெளிப்படவே செய்தன.
எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைக் களையும் பட்சத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக சாம்பியனாகப் பீடு நடை போட முடியும்.
ஒரு காலத்தில் சில வீரர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இந்திய அணி இருந்தது உண்டு. ஆனால், ஐபிஎல்லுக்குப் பிறகு திறமையான வீரர்களுக்குப் பஞ்சமில்லை என்றாகிவிட்டது.
இதனாலேயே, தேசிய அணியில் இடம்பிடிக்கத் திறமையான வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
இதனாலேயே அணியில் இடம்பெறும் வீரர்கள், சில போட்டிகளில் சொதப்பினாலே, அவர் இடத்துக்குப் பங்கம் வந்துவிடுகிறது.
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சுற்றுப் போட்டிகள், சூப்பர் 8, நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 9 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.
ஆனால், உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றி, தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் விளையாடியது ஐந்து போட்டிகளில் மட்டுமே.
ஓரவஞ்சனை?
தொடர் தொடங்குவதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் சொதப்பினார்.
இதனால், உலகக் கோப்பைத் தொடரின் சுற்றுப் போட்டிகளில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற சஞ்சு, மற்ற போட்டிகளில் பெஞ்சில் உலகக் கோப்பைத் உட்கார வைக்கப்பட்டார்.
பின்னர் சூப்பர் 8 சுற்றில் முக்கியமான போட்டியான ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், நாக் அவுட் போட்டிகளில் விளையாடி, தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார் சஞ்சு சாம்சன்.
மறுபுறத்தில் அதிரடி வீரர் எனப் பெயரெடுத்த அபிஷேக் சர்மா. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டக் அவுட், உலகக் கோப்பைத் தொடரில் சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் டக் அவுட் என முட்டைகளைச் சுட்டபோதும் தொடர் முழுவதுமே வாய்ப்பு பெற்றார்.
எந்த ஒரு சிறந்த வீரருக்கும் ஃபார்ம் அவுட்’ வரவே செய்யும். அப்போது அவருக்கு ஆதரவு தேவைதான்.
ஆனால், சஞ்சு சாம்சன் விஷயத்தில் அது பாராமுகமாக மட்டுமே இருப்பது வாடிக்கையாகவே நடக்கிறது.
ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலே ஆடும் லெவனில் இருந்து கழற்றிவிடப்படுகிறார்.
அவற்றையெல்லாம் தாண்டித்தான் உலகக் கோப்பையின் முக்கியமான போட்டிகளில் சஞ்சு முத்திரைப் பதித்தார்.
இனியும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்பு தருவதில் பாரபட்சம் காட்டாமல் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் செயல்பட வேண்டியது அவசியம்.
சமமான வாய்ப்பு
உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே பேட்டிங் யூனிட் சிறப்பாக இருந்த நிலையில், பவுலிங் யூனிட்டோ பலவீனமாகவே இருந்தது.
நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் 4 ஓவர்கள்தான் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றின.
அணியில் எப்போதும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
ரவீந்திர ஜடேஜா ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்த வருண் சக்கரவர்த்தி எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.
என்றாலும் அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்புக் கொடுத்து ஆதரித்தது.
அதேநேரத்தில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் போன்றோர் தொடர்ந்து பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டது உறுத்தலாகவே இருக்கிறது.
சில நேரம் பகுதி நேர பந்துவீச்சாளர்களை நம்பியிருக்க வேண்டிய நிலையும் அணிக்கு ஏற்பட்டது.
ஷிவம் துபே போன்ற வீரர்களை அதற்குப் பயன்படுத்தி விஷப்பரீட்சையிலும் இந்திய அணி இறங்கியது. சிறந்த ஆல் ரவுண்டர்கள் தேவை என்பதையும் இது இது உணர்த்தியது.
ஆக, இனி வரும் காலத்தில் பேட்டிங் யூனிட், பந்துவீச்சு யூனிட், ஆல் ரவுண்டர் யூனிட் என மூன்றையும் வலுவாக வைத்துக்கொள்ள அணி நிர்வாகம் முன்வர வேண்டும்.
எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
– நன்றி: இந்து தமிழ் திசை