காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

கவிஞர் கரிகாலன்

மனிதராக இருப்பதன் பதற்றங்களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாக நாம் காதலைக் கருதுகிறோம் என்றார் சார்த்தர்.

பிளேட்டோவின் சிம்போசியத்தில் (ஜெயகாந்தனின் சபை போன்றது) அரிஸ்டோபேன்ஸ் என ஓர் நாடக ஆசிரியர் இருந்தார். அவர் காதலை முழுமைக்கான தேடலாக வரையறுக்கும் ஒரு கதையைக் கூறினார்.

மனிதர்கள் ஒரு காலத்தில் இரட்டை உடலாக இருந்தனர். அதாவது ஆண், பெண் இணைந்த hermaphrodite ஆக இருந்தார்கள். நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் இரண்டு முகங்களுடன் முழுமையாக இருந்தனர்.

ஜீயஸ் என்ற கடவுள் அவர்களின் சக்திக்குப் பயந்து அவர்களைப் பாதியாகக் குறைத்தார். அப்பல்லோ அவர்களை மென்மையாக்கினார்.

இதனால் மனிதர்கள் தங்கள் காணாமல் போன பாதியுடன் மீண்டும் இணைவதை விரும்பினர்.

இந்தக் கதை காதல் என்பது நிறைவுக்கான தீவிரமான, வேதனையான ஆசை, மற்றொரு நபருடன் இணைந்து ஒன்றாக, முழுயாக மாறுவது, என்பதை உருவகப்படுத்துகிறது.

நமது முழுமையற்ற உணர்வைப் போக்க ஒருவர் இருக்கிறார், என்பதுதான் இங்கு காதலாகக் கருதப்படுகிறது. ஆனால், இருத்தலியல் இதை வேறுவிதமாக சிந்திக்கிறது.

தற்செயல் மற்றும் நிலையற்ற இவ்வுலகில் காதலை நம் வாழ்க்கையின் அர்த்தமாக மாற்ற முயல்கிறோம்.

இதனால் நாம் நம்முடைய உலகில் வாழாமல் வேறு ஒருவருடைய உலகின் மையமாக இருக்க விரும்புகிறோம்.

அவர்கள் நம்மை கைவிட்டுவிடாமல் நிரந்தரமாக நேசிக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். காதலை நமது சொந்த அச்சங்களில் இருந்து விடுபடும் ஒரு திட்டமாக மாற்றுகிறோம்.

மனித இருப்பு அடிப்படையில் காலத்தால் வேரூன்றியதாகப் பார்க்கிறார் சார்த்தர். நாம் தொடர்ந்து கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

காலமும் காலத்தோடு நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம். காதலும் அப்படிதான். மாறக்கூடியது.

காதல் என்பது காலத்திலிருந்து தப்பிப்பது அல்ல, மாறாக காலத்திற்குள் நடக்கும் ஒரு ஆபத்தான, தற்காலிக திட்டம். நமது வாழ்க்கைக்கு ஒரு நிலையான அர்த்தத்தை காதல் மூலம் கற்பிக்க விரும்புகிறோம்.

ஆனால் காதல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட ஒரு நிலையான பொருள் அல்ல.

காதல் நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோல எதிர்காலத்தில் அது நிச்சயமற்றதாக இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்வது அவசியம்.

இப்போது இருக்கக்கூடிய அன்பின் தருணம், தவிர்க்க முடியாமல் மறுக்கப்படக்கூடிய கடந்த காலத்தின் ஒரு பகுதியாகவும் மாறும்.

அப்போது நம்மோடு அன்பில் இணைந்தவர்களின் சுதந்திரத்தை நாம் மதிக்கவேண்டும்.

அவர்கள் வெளியேறவோ அல்லது தம் முடிவை மாற்றிக்கொள்ளவோ தேவையான அவரது சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காதல் என்பதை மோதல் என்கிறார் சார்த்தர். அது ஒரு வகை அடைய முடியாத ஒற்றுமை.

காதல் ஒரு முரண்பட்ட மனித அனுபவம் என்பதைப் புரிந்துகொண்டு, பலவீனம், நிலையற்ற தன்மை மற்றும் மாற்றத்தின் சாத்தியக் கூறுகளுடன் அதை அனுபவிக்கப் பழக வேண்டும்.

நம்மோடு உறவு கொண்டவர்களது சுதந்திரம், மாற்றம் போன்றவற்றின் யதாராத்தங்களை நிராகரிக்காமல் அன்பைப் பயிலவேண்டும்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment