மருத்துவர் ராமதாஸின் குரல் தேய்கிறதா?

“போகப் போகத் தெரியும்..” – இது தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பிரபலமான பாடலின் முதல் வரி.

இந்த வரியை ராமதாஸ் கொடுத்த செய்தியாளர்கள் சந்திப்பின் வழியே அடிக்கடி வெளிப்படுத்தியவர் மருத்துவர் ராமதாஸ்.

பாமகவில் உட்கட்சிப் பிரச்சனை ஆரம்பித்து வலுவடைந்த பிறகு, அதிலும் மருத்துவர் அன்புமணிக்கு இடையிலான வார்த்தை மோதல்கள் அதிகமான நேரத்தில்,

“இனி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மருத்துவர் ராமதாஸ், மேலே குறிப்பிட்ட பாடல் வரியைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அன்புமணி ஒருபுறம் கட்சியினரை ஒருங்கிணைத்து அதற்கான சட்ட விதிமுறைகளை அனுசரித்து, இறுதியாக பாஜக கூட்டணியில் இடம்பெற்று, பாமகவின் சின்னமான மாம்பழச் சின்னத்தையும் கைப்பற்றிய நிலையில், பலரும் இன்றும் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி, “என்ன செய்யப் போகிறார் மருத்துவர் ராமதாஸ்?”

தற்போது திமுக கூட்டணிப் பக்கம் நெருங்கி வரும் வாய்ப்பு மருத்துவர் ராமதாசுக்கு இருக்கும் என சொல்லப்பட்டது. ராமதாசும் முதலில் திமுக அரசை சற்றே புகழ்ந்தும் பேசினார்.

ஆனால், நிலைமை சில நாட்களுக்குள் தலைகீழானது. திமுக அரசை மறுபடியும் விமர்சித்துப் பேசினார் ராமதாஸ்.

அதேசமயம் திமுக கூட்டணிக்குள் பல சலசலப்புகள் எழுந்த நிலையில், மருத்துவர் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில், கூட்டணியில் நீடிக்கும் தன்னுடைய நிலையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுவதாகவும் அது தொடர்பான எதிர் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், பல ஆண்டு காலமாக தன்னுடைய கூட்டணியில் பாஜகவைக் கடுமையாக எதிர்த்த நிலைபாட்டோடு இணைந்தபடி பயணித்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு உரிய இடம் கொடுப்பதா அல்லது கூட்டணியில் இடம்பெற விரும்புகிற ராமதாசுக்கு முக்கியத்துவம் அளிப்பதா என்கின்ற கேள்விகளுக்கு முன்னால், திமுக தலைமை, விடுதலைச் சிறுத்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அந்தக் கட்சியை முதன்மை படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் பக்கம் மருத்துவர் ராமதாஸ் செல்லக்கூடும் என்கின்ற தகவல்கள் அடிபட்டாலும் கூட, மருத்துவர் ராமதாஸின் இயல்பை நன்றாக உணர்ந்தவர்களுக்கு திரைப்பட நடிகர்கள் மீது அவர் வைத்திருந்த விமர்சனமும் தெரியும்.

அப்படிப்பட்ட பார்வையோடு இருப்பவர் தற்காலிகமாக ஒரு தேவைக்காக நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சியோடு, வேறு வழி இல்லாமல் கூட்டணி வைத்துக் கொள்வாரா? என்கிற கேள்வியும் அதே சமயம் எழுப்பப்பட்டது.

இதெல்லாம் நடந்து முடிந்த நிலையில் தான் அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை அரசியலில் இருந்தே ஒழித்துக்கட்ட சதி நடப்பதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார் மருத்துவ ராமதாஸ்.

தற்போதைய நிலையில், கட்சிப் பெயரையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலையில், நடக்கவிருக்கும் தேர்தலை எப்படி எதிர்கொள்வார் மருத்துவர் ராமதாஸ்?

ஒன்று மட்டும் புலப்படுகிறது. மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி வெளிப்படுத்திய “போகப் போகத் தெரியும்…” என்ற பாடலுக்கான அர்த்தம்தான் இன்றுவரை தெரியவில்லை.

– வா. தமிழரசன்

Comments (0)
Add Comment