காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை ஏன்?

பிப்ரவரி மாதம் பிறந்து விட்டால் இளைஞர்களுக்குக் கொண்டாட்டம் தான். சொல்லாத காதல், சொல்லத் துடிக்கும் காதல், ஒருதலைக் காதல் என தங்களது காதலை வெளிப்படுத்த பிப்-14 க்காக காத்திருக்கின்றனர்.

அன்பை வெளிப்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் ஒதுக்கப்பட்ட ஒரு அழகான நாள் காதலர் தினம்.

காதலர் தினத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி பார்க்கலாம்.

இந்த நாள் புனித வாலண்டைன் (Saint Valentine) என்பவரின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. கி.பி 3-ம் நூற்றாண்டில், ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ், அந்த நாட்டில் உள்ள வீரர்கள் திருமணம் செய்யத் தடை விதித்தார்.

ஆனால், வாலண்டைன் அந்தத் தடையை மீறி காதலர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். இதற்காக அவர் சிறையிலடைக்கப்பட்டு, பிப்ரவரி 14 அன்று தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது தியாகமே இன்று காதலர் தினமாக மலர்ந்துள்ளது.

காதலர் தின மலர்கள்:

காதலர் தினத்தின் மிக முக்கியமான அடையாளமாக ரோஜாப் பூக்கள் இருக்கின்றன.

இதனுடன் அயல்நாட்டு மலரான துலிப்ஸ், ஆர்க்கிட் (Orchids) மற்றும் லில்லி (Lilies) போன்ற மலர்களும் அடங்கும்.

வெறும் மலர்கள் மட்டும் காதலுக்கு போதுமா? பிற முக்கியமான பரிசுப் பொருட்களும் உண்டு.

விலை உயர்ந்த சாக்லேட்டுகள், குறிப்பாக ‘ஹார்ட் ஷேப்’, பெட்டிகளில் வரும் பிராண்டட் சாக்லேட்டுகள், காம்போ ஆஃபர்களின் விலை அதிகமாக இருக்கும்.

மென்மையான பொம்மைகள் (Teddy Bears):

சிறியது முதல் பெரிய அளவிலான டெடி பியர்களின் விலை இந்த வாரத்தில் 20% முதல் 30% வரை அதிகமாகவே இருக்கும்.

அச்சிடப்பட்ட காபி மக்குகள், மெத்தைகள் (Cushions) மற்றும் பிரேம்களின் விலை ஆன்லைன் தளங்களில் ‘டிமாண்ட்.

கேக்குகள்: ரெட் வெல்வெட் (Red Velvet) மற்றும் ஹார்ட் ஷேப் கேக்குகளின் தேவை இந்த சமயத்தில் அதிகரித்தே காணப்படும்.

பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிடித்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என இரவு தூக்கத்தை எல்லாம் தொலைத்துப் பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

பலவிதமான பரிசுப் பொருட்களைக் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காதலர் தினத்தைக் கொண்டாடக்கூடாது என சில நாடுகள் தடையும் விதித்துள்ளது.

ஏன் இந்தத் தடை விரிவாகப் பார்க்கலாம்.

காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்குப் பல நாடுகளில் கலாச்சார அல்லது மத ரீதியான காரணங்களால் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன.

முக்கியமாக பின்வரும் நாடுகளில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாகத் தவிர்க்கப்படுகின்றன அல்லது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

· சவுதி அரேபியா: பல ஆண்டுகளாக இங்கு காதலர் தினத்திற்கு கடும் தடை இருந்து வந்திருக்கிறது. இருப்பினும், சமீபகாலமாக அந்நாட்டின் சமூக மாற்றங்களால் (Vision 2030) கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளன.

ஆனாலும், இது ஒரு அதிகாரப்பூர்வ விடுமுறையோ அல்லது பாரம்பரியமான ஒன்றோ அல்ல.

· பாகிஸ்தான்: 2018-ம் ஆண்டு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் காதலர் தினத்தைக் கொண்டாடுவது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்று கூறி, பொது இடங்களில் அதைக் கொண்டாடத் தடை விதித்தது.

· ஈரான்: காதலர் தினத்தை “மேற்கத்திய கலாச்சாரத்தின் ஊடுருவல்” என்று கருதி, அந்நாட்டு அரசு இதற்குத் தடை விதித்துள்ளது.

காதலர் தின அட்டைகள், பரிசுகள் அல்லது சிவப்பு ரோஜாக்கள் விற்பனை செய்வதற்கு அங்கு கட்டுப்பாடுகள் இன்றும் உள்ளன.

· இந்தோனேசியா: அதிகாரப்பூர்வமாக முழு நாட்டுக்கும் தடை இல்லையென்றாலும், ‘ஆச்சே’ (Aceh) போன்ற சில மாகாணங்களில் இஸ்லாமிய சட்டத்தின்படி காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

· மலேசியா: இங்குள்ள இஸ்லாமிய சமயக் குழுக்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுவது இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணானது என்று கருதுகின்றன. ஆகையால் இங்கும் கொண்டாட்டங்களை எதிர்பார்க்க முடியாது.

ஏன் இந்தத் தடை?

பெரும்பாலான நாடுகளில் காதலர் தினக் கொண்டாட்டம் மேற்கத்திய கலாச்சாரம் என்றும், இது தங்களின் சொந்த கலாச்சாரத்தைச் சிதைப்பதாகவும் கருதப்படுகிறது.

அதோடு, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை இது ஊக்குவிப்பதாக சில மத அமைப்புகள் கருதுகின்றன.

அதனால்தான், இதுபோன்ற நாடுகள் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளையும், ஒரு சில இடங்களில் தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

– யாழினி சோமு.

Comments (0)
Add Comment