சிங்கப்பெண் சிம்ரன் பாலாவைத் தெரியுமா?

நாட்டின் எல்லைகளில் அரும்பணி ஆற்றி வரும் ராணுவத்தை போல், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகிறது மத்திய ரிசர்வ் காவல் படை.

சவாலான காலங்களில் சிறப்பாகச் செயல்படும் இப்படை பிரிவில், நெடுங்காலம் தொட்டே பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது.

1986-ல் உலகின் முதலாவது அனைத்துப் பெண் காவல் படையான ‘மகிளா பட்டாலியன்’ CRPF-ல் தான் தொடங்கப்பட்டது.

இத்தகைய படைப் பிரிவில், சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் 26 வயதான உதவி கமாண்டன்ட் சிம்ரன் பாலா.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஓர் எல்லை நகரமான Naushera-வைச் சேர்ந்த இவர், பல்வேறு புதிய வரலாறு படைத்திருக்கும் பெருமைக்குரியவர்.

சமூக அறிவியலில் பட்டம் பெற்ற பின், 2023-ம் ஆண்டு நடைபெற்ற UPSC மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 82-வது இடத்தைப் பிடித்தார்.

அந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து தேர்ச்சிப் பெற்ற ஒரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு கிராமில் உள்ள CRPF அகாடமியில் பயிற்சி பெற்றபோது, சிறந்த அதிகாரிக்கான விருதை பெற்றார்.

பின்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள bastariya battalion-ல் முதல் பணி நியமனம் பெற்றவர், அங்கு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அவரின் அபார திறமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒத்திகைகளின் போது அவரது வலுவான செயல் திறன் காண்போரை வியக்க வைத்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு அனைவரும் எதிர்நோக்கிய, ஜனவரி 26-ம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள கர்த்தவ்ய பாதையில் நடைபெற்ற பிரம்மாண்ட அணி வகுப்பில் 140 ஆண்கள் கொண்ட படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் சிம்ரன் பாலா.

இந்த சாதனையானது நாட்டின் பாதுகாப்பு படைகளில் மாறிவரும் நெறிமுறைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான CRPF-ல் தகுதி மற்றும் திறனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது.

தேசிய நிகழ்வில் ஒரு பெண் அதிகாரி முற்றிலும் ஆண்கள் கொண்ட படைப் பிரிவை வழிநடத்துவது இதுவே முதல் முறை என்பதால் சிம்ரன் பாலாவின் பங்களிப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் வீரநடை போட்டு வியக்க வைக்கும்படி பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், இளைய சமூகத்தினருக்கு ஓர் உந்து சக்தியாக விளங்குகிறார்.

  • எஸ்.வாணி
 
Comments (0)
Add Comment