அதிகாரத்திற்கும் புரட்சிக்கும் இடையில் சிக்கும் உயிர்களின் கதை!

நூல் விமர்சனம்: யூதாஸின் நற்செய்தி!

வரலாற்று எச்சங்களின் நீட்சி எப்படி எளிய மனிதர்களின் வாழ்வியலை இன்னும் பாதிக்கிறது என்பதை அழுத்திச் சொல்கிறது இந்நாவல்.

‘யூதாஸின் நற்செய்தி’ எனும் நூலின் பெயரே இருவேறு காலகட்டங்களுக்கு இடையிலான ஒரு தொடர்புச் சங்கிலியை பூட்டுகிறது.

இயேசுவின் சீடர்களில் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் யூதாஸ். காட்டிக் கொடுத்தவனாக தன்னை எண்ணும் ஒருவனின் ஆழ்மனத்திற்கும் வெளியுலதிற்குமான ஆழமானப் போராட்டம் இது. ஆயினும் நூல் ஆணின் பார்வையில் பயணப்படவில்லை.

காதல் வலியை பெண்ணின் பார்வையிலேயே வெவ்வேறு பரிணாமங்களில் பேசும் கே.ஆர். மீராவின் நூல்களில் இதுவும் விதிவிலக்கல்ல.

நூல் மூன்று விஷயங்களைப் பேசுகிறது.

ஒன்று எமர்ஜென்சி காலம், அப்பொழுது நடந்த போராட்டங்கள், பாதிக்கப்பட்ட போராளிகள்.

இன்னொன்று யூதாஸின் தொன்மம்.

மூன்றாவது பெண்ணின் காதல் வலி. எப்பொழுதும் வரலாற்றை ஆணின் பார்வையில் இருந்து அணுகும் சமகாலத்தில் பெண்ணின் பார்வையில் பேசுகிறது.

அதிகாரத்தில் இருந்தவன் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவன் என இருவரின் கோணங்களிலும் பயணிக்கிறது.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1975ல் நடைமுறைக்கு கொண்டு வந்து 1977 திரும்பப் பெற்றுக் கொண்ட நெருக்கடி நிலை காலத்தில் நக்சலைட் ஒருவர் தன்னை காவல் துறையினர் சித்திரவதை செய்தபோது, தனக்கு தெரிந்த உண்மையைச் சொல்லி விட்டதால் உண்டான கொடுங் குற்ற உணர்வில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு, கே.ஆர். மீரா தனக்கே உரிய பரிமாணத்தில் ஆதிக்க தரப்பிலிருந்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்தும் ஒரு விளிம்பு நிலை வரலாற்றியல் எழுத்துகளை எழுதி இருக்கிறார்.

இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் அலாதியானது.

அவள் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்து தனது 35 வயது வரை கரை காணாத அளவிற்கு வரலாற்று எச்சங்களின் பேரலையில் சிக்கி, மூச்சு முட்ட அலைந்து திரிகிறாள்.

எல்லா நீர்நிலைகளிலும் பிணங்கள் மிதக்கின்றன. அந்த பிணங்களை எடுப்பதற்காக ஒருத்தன் தண்ணீரிலேயே கிடக்கிறான். தண்ணீரிலேயே வாழ்கிறான். தண்ணீருக்குள்ளே கிடந்தும் அவனது தொண்டை வறண்டே கிடக்கிறது.

தீராத தாகம் அவனை வாழ்நாள் முழுவதும் வாட்டி எடுக்கிறது.

காவல்துறை அவன் மீது நிகழ்த்திய கொடூரங்களில் அவனை அறியாமல் உச்சரித்த அவனின் பிரியமானவளை அவர்கள் வதைத்து அங்குதான் வீசினார்கள்.

அந்த தண்ணீருக்குள்ளேயே தான் அவன் தேடிக் கொண்டிருக்கிறான். தண்ணீருக்கு கொடுத்ததை தண்ணீரிடமிருந்து எடுக்க குளம் குளமாய் தேடி அலைகிறான்.

நீரின் அடியில் சிக்கி உப்பிக் கிடக்கும் சடலங்களை அள்ளி எடுத்துக் கரையில் சேர்க்கிறான். ஆயினும் அவன் தேடியது கிடைத்ததா? இழந்ததை திரும்பப் பெற்றானா என்பதுதான் கேள்விக்குறி.

அவனது வாழ்க்கையில் நுழையும் கதாநாயகியின் அலைச்சலும், மன உளைச்சலும் இறுதியில் தானும் ஒரு நக்சலைட் ஆகிவிட்டதற்கான மனநிலையும் ஆதிக்க அதிகார சமூகத்தின் கோர முகங்களைக் கிழித்துத் தொங்க விடுகிறது.

நாவலுக்குள் நுழைவோம்…

முதலை யூதாஸ் எனும் தாஸ் குளத்தில் மூழ்கி இறந்து போன, தற்கொலை செய்து கொண்ட, அடித்துக் கொன்று வீசப்பட்ட என குளத்தின் அடியில் கிடக்கும் பிணங்களைத் தேடிக் கண்டுபிடித்து எடுப்பவன்.

அதே ஊரில் வசிக்கும் பிரேமா எமர்ஜென்சி காலத்தில் கக்கயம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸின் மகள்.

எமர்ஜென்சி காலத்தில் பணியாற்றிய போலீஸ்களின் மனநலம் கொடூரமான காரியங்களை அரங்கேற்றிப் பழகிய பிறகு, அந்த நிலையில் இருந்து மீள முடியாது சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறது.

அது அவர்களின் குடும்பம் வரை நீள, அப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் பிரேமா.

அவளுக்கு யூதாஸின் மீது காதல். அவள் ஒவ்வொரு முறை தேடி நெருங்கும்போதெல்லாம் அவன் தொலைவில் விலகி ஓடுகிறான்.

போராளி, நக்சல் என அடையாளம் காணப்பட்ட, காட்டிக் கொடுத்தவன் என்று தன்னைத்தானே குமைந்து கொள்பவன்.

ஆக, புரட்சிக்கும் அதிகாரத்திற்கும் இடையில் சிக்கிய இரு உயிர்களின் கதை. ஆதிக்கம் செலுத்தியவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என ஒரு சேர எழுதப் பார்க்கும்.

தன்னுடைய காதலியின் கொடூரமான மரணத்திற்கு தானே காரணமாக இருந்தது எனும் குற்ற உணர்வில், உறவின் அணுக்கத்திற்கு இடம் கொடுக்காமல் தொலைந்து ஒவ்வொரு இடமாக ஓடிக்கொண்டிருப்பவன் யூதாஸ்.

அவனை காதலித்துக் கொண்டிருக்கும் பிரேமா. காட்டிக்கொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை நேசிப்பவர்களுக்கும் நிம்மதி இருப்பதில்லை என்பதற்கு உதாரணமானவள்.

நான் தோற்றுப் போன போராளி, காட்டிக் கொடுத்தவன் என் நெஞ்சில் எரியும் தீ அணையாது. நெருங்கும் உன்னையும் எரித்து விடும் என்று விலகி ஓடுகிறான்.

உறவுகளைத் தவிர்த்து ஓடி கொண்டிருப்பான் ஓய்வின்றி. இவளும் விடாது ஒவ்வொரு இடமாக அவனைத் தேடிச் செல்கிறாள்.

அவனை தேடுவதும் கண்டுபிடிப்பதும் அவனை கண்டுபிடிப்பதற்கான அடையாளமாக அங்கு ஒரு குளமோ, ஆறோ ஏரியோ என பிணங்களைத் தேடி எடுக்கும் இடமாக இருப்பதையும் அங்கெல்லாம் முகம் முதலையால் உண்ணப்பட்டு முகமற்ற பிணங்கள் இருப்பதாகவும் காட்டுவது நீளும் அதிகார கோரப்பசியின் குறியீடு.

ஜெயிப்பதும் தோற்பதும் பிரச்சனை அல்ல. புரிந்து கொள்வதும் எதிர்த்து நிற்பதுதான் முக்கியம் என்பது பிரேமாவின் வாதம். விடாமல் அவனைத் தேடிச் செல்கிறாள்.

கண்டுபிடித்த இடங்களில் தனக்கான கடைசி உணவாக எண்ணி அவனோடு உணவருந்தி களைப்பில் உறங்கிப் போகும் போதெல்லாம் அனாதையாக அந்தக் குடிசையிலேயே கைவிடப்படுகிறாள்.

காட்டிக்கொடுப்பவனுக்கு ஒருபோதும் உறக்கம் வராது என்பதை அவன் இரவில் விட்டு ஓடும்போதெல்லாம் அவளுக்கு அழுத்தி சொல்கிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடல் மெலிந்து இளமையின் சுவடுகளைத் தொலைத்து அவனுக்காகவே அலைந்து திரிகிறாள்.

தன்னை ஒரு நக்சல் எனப் பதிவதையும் தான் இறந்து போகும்போது குளத்திலிருந்து அவனாலேயே மீட்கப்பட வேண்டும் என்பதும் தன்னுடைய வாழ்நாள் கனவாக வரித்துக் கொள்கிறாள்.

அதிகாரம் ஒரு மந்திரத் தொப்பி, அதை தலையில் வைக்கும்போது மனிதர்கள் வேறு சிலர் ஆகிவிடுகிறார்கள்.

அப்படித்தான் நசுக்குபவர்களுக்கும் நசுக்கப்படுபவர்களுக்கும் இடையிலான நிகழ்வுகள் நிகழ்ந்து விடுகின்றன.

என்னை ஏமாற்றுவதற்கும், என்னை அழ வைப்பதற்கும் நான் அவனை மட்டுமே அனுமதிப்பேன் என்கிறாள் பிரேமா.

அப்படி ஒரு காதலை அவள் தனக்குள் தரித்துக் கொள்கிறாள். அறிவுக்கூர்மையானவள். அன்பின் பித்து நிலையில் அலைந்து திரிகிறாள். அதுவே அறிவுக்கும் அன்புக்கும் இடையிலான முரண்பாடு.

அன்பு மனித இனத்தின் ஆதியுணர்வு. அறிவு அதன்பின் சமூகம் பழகிக் கொண்டது. ஆக இறுதியில் ஆதியுணர்வு ஜெயித்து விடுகிறது.

போருக்கு இறங்கும்போது போராடுவதுதான் பிரதானம். ஜெயிப்பது, தோற்பது என்பது அதன் இயல்பில் நிகழ்வது.

முடிவாக புரட்சிகள் எக்காலத்திலும் முடிவதில்லை. சிறிய மனிதர்கள் தேவைப்படுகையில் தங்களுக்கே உரிய முறையில் நடத்துகிறார்கள் என்பதே நிதர்சனம்.

போராளிகள் தோற்றுப் போனாலும் புரட்சி நெருப்பு அணைவதேயில்லை என்கிற மாற்ற முடியாத உண்மையை இப்புனைவு உறுதி செய்கிறது.

நூல் : யூதாஸின் நற்செய்தி
நூலாசிரியர் : கே. ஆர். மீரா
தமிழில் : மோ. செந்தில்குமார்

கட்டுரையாளர்: சுமித்ரா சத்தியமூர்த்தி,
ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர்.
பட்டுக்கோட்டை.

Comments (0)
Add Comment