‘பொழிஞ்சி…’ – சிறுகதை!

“செத்தமூதி, தீட்டுத் துணியைக் கசக்கி மறைச்சுப் போட்டுக் கல்லு வையின்னா கேக்குதா? காத்தடிச்சு கருவேப்பிலை செடிகிட்ட வந்து கிடக்கு” – காலையிலேயே தொடங்கி விட்டாள் அம்மா.

வீட்டாப்டா முறைக்கெல்லாம் இப்படித்தான் கிளம்பி விடுவாள். கை வேலைக்கு ஆள் குறைந்த கோபம் அவளுக்கு.

தட்டையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டகைக்கு நகரும்போது தொடங்குபவள் மறுதலை முழுகும் வரை கரிச்சுக் கொட்டுவா.

பர பர‌ன்னு பத்தாயத்துக்கு கீழ் இருந்த கருக்கருவாளையம், சும்மாட்டுத் துண்டையும், எறப்பில் சொருவியிருந்த ஆக்கையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் பூங்கோதை.

செக்கண்டி கொல்ல தாண்டி கண்டி கொல்லைக்கு கிழக்காக்க போனாதான் செழிச்சு கிடக்கும் பொழிஞ்சி. (பொழிஞ்சி – அடுப்பு எரிக்கப் பயன்படும் ஒருவகை குத்துச்செடி)

“வெரசா நடப்புள்ள அரிச்சு கட்டி வர்றதுக்குள்ள பொழுதோட்டாயிரும் பாரு” – சரசு பூங்கோதையை விரட்டிக் கொண்டிருந்தாள்.

சும்மாடு கட்டத் துண்டும் கருக்கருவாளும், ஆக்கையும் மூவரின் கையிலிருந்தது.

பேச்சுவாக்கில் நடந்து கொண்டிருக்க அப்போதுதான் கவனித்த சரசு “எங்கேடி மலரு? அவள விட்டுட்டோம் பாரு” நொந்து கொண்டே திரும்பிப் பார்க்க, தூரத்தில் மலரு, தன்னுடைய வலது காலை பக்கத்தில் இருந்த நுணா மரத்தடியில் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாப்புள பண்ற?”  – சரசு கத்த,

“நரவா மிதிச்சிட்டேன்புள்ள நில்லுங்க வரேன்”.

அதைக் கேட்டவுடன் சரசுவும் பூங்கோதையும் நின்ற இடத்திலேயே சிரிக்கத் தொடங்கினர்.

ஒற்றை கையில் பாவாடையைத் தூக்கிக் கொண்டே ஓடி வந்தா மலரு.

“சீக்கிரமா நடங்க”

வேகநடை போட்டு கண்டி கொல்லைக்கு வந்தார்கள்.

“பாருடி எம்மா உசரதுக்கு வளர்ந்திருக்கு பொழிஞ்சி”  – சரசு சொல்ல,

“பின்ன? குருவைக்கு முன்னே கிடை போட்டுச்சு ரங்கசாமி மாமா. பெஞ்சே கெடுத்துச்சு மானம். விதைக்குக் கூட நெல்லு பாக்கி இல்லன்னு வெசனத்தோடு உழுது போட்டுச்சுல்ல மாமா. அதான் பாரு எருவெல்லாம் எடுத்து வச்சிருக்கு பொழிஞ்சி.”  – மலர் சொல்ல,

ஆக்கையையும் துண்டையும் ஓரமா வச்சுட்டு மூணு பேரும் வயலுக்குள்ள இறங்கி பொழிஞ்சி அரிக்கத் தொடங்கினர்.

“அடியேய் மலரு என்னாடி தரை கடிசா இருக்கு”

“இங்க வாபுள்ள மண்ணு போதபொதன்னு இருக்கு” சொல்லிக்கிட்டே மலரு ஒரு கொடங்க புடிங்கிட்டா.

சேர்ந்து மாங்கு மாங்குன்னு மூணு பேருமா புடுங்க, ஈரம் காயாத மண்ணு புடுங்க புடுங்க ஆசையா மூணு பேரும் முக்கால் கொல்லைய காலி பண்ணிட்டாளுங்க.

கொண்டு வந்த ஆக்கைய ரெண்டு சரமா விரிச்சு கெடங்கெ கெடங்கையா அள்ளி வச்சு இறுகக் கட்டினாள் பூங்கோதை.

மாத்தி மாத்தி மூன்று பேரும் கட்டி முடிச்சு, மலருக்கும் சரசுக்கும் தலையில தூக்கி விட்ட பூங்கோதை, துண்ட கோலி சும்மாடாக்கி தலையில் வைத்து அவளே தம்கட்டி பொழிஞ்சி கட்ட தலையில் ஏற்றிக் கொண்டாள்.

பட்டுப்போன பொழிஞ்சிய தனியா கட்டி சின்ன கட்டா கையில எடுத்துகிட்டா பூங்கோதை. மாசம் காணும் அடுப்பெரிக்க. இந்த பொழிஞ்சியும் எள்ளு சங்காயமும் வெச்சே களநெல்ல அவிச்சுபுடுவா தனபாக்கியம். பூங்கோதையைக் கட்டிக்கொடுக்கத்தான் சாமர்த்தியம் போதல அவளுக்கு.

பூங்கோதை வயசுக்கு வந்து பத்து வருஷம் கழிஞ்சு போச்சு. அஞ்சு வருஷத்துக்கே நாக்க புடுங்கிறா மாதிரி ஊர் பொண்டுவ பேசுவாளுவோ அந்த கவலைதான் தனபாக்கியத்துக்கு.

மத்தபடி களநெல்ல கொடுத்தாலும் ஒருகட்டு பொழிஞ்சிய வெச்ச அவிச்சு அள்ளி காயபோட்டு கட்டி மில்லுக்கு கொண்டுட்டு போய்டுவா.

பூங்கோதை பாடுதான் பெரும்பாடு. எல்லைக் கிணறுக்கு தண்ணீர் தூக்க போகையில, தீட்டாப்புடா முறைக்கு உடையார் குளத்தில குளிக்கப் போகையில அவ மூஞ்சிக்கு நேராவே பேசுவாளுங்க ஊரு பொம்மனாட்டிங்க.

“கால காலத்துக்கு கண்ணாலம் கட்டியிருந்தா ஒம்மவளே சடங்காயிருப்பா, நீ இன்னும் துணி கசக்க வந்துடுறே”  என்று சொல்லி படித்தொற பொண்டுவ சிரிப்பாளுங்க.

பொழுதோட்டா குளிக்கப் போனவ நரிநாவ மரத்துக்கிட்ட துணிய கசக்கி எருக்கஞ்செடியில வச்சிட்டு, பாவாடையை நெஞ்சுக்கு குறுக்க மாராக்கா கட்டிக்கிட்டு குளிச்சு முடிச்சா. புழிஞ்சு வெச்ச தாவணிய உதறி தோள்ல போட்டுக்கிட்டு வீட்டுக்கு கிளம்பினா பூங்கோதை.

அடர்ந்த கொலுசிலிருந்து சத்தம் வராமல் பூனை நட வெச்சு வந்து சேர்ந்தா வீட்டுக்கு. சாணி மெழுகியிருந்த வாசலுக்கு எதிரில இருந்த மாட்டுக்கோட்டையில் தாவணிய உதறி காய போட்டவ, மறக்காம நாலு பக்கமும் முடிச்சு போட்டு தொங்க போட்டா.

மறுபடியும் காத்துல தாவணி பறந்து போனா நாளைக்கும் திட்டு வாங்கணும். கார்த்திகை மாசத்து மானம் வெளில சடசடன்னு சத்தம் கேட்க ஓடிப்போயி வெளியில கட்டியிருந்த மாடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து கொட்டகையில் கட்டினாள்.

வாசல்ல போட்ட காய்ந்த பொழிஞ்சி நனைஞ்சு போயிருமேன்னு ஓடிப்போய் வாசலைப் பார்த்தா, ஈரம்படாம கட்ட எடுத்துக்கிட்டு அடுப்படிக்குள்ள போனா தனபாக்கியம்.

கொட்டகை ஓரத்தில் செவலை மாடு சுற்ற “எடுத்தே எடுத்தேன்” அதட்டிய பூங்கோதை, மாட்டை ஒதுக்கி ஓரமாக சாணியில்லாத இடத்தில தட்டையும், டம்ளரையும், தலைக்கு வைத்துப்படுக்க கொஞ்சம் சுருட்டின வைக்கோலையும் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

– சுமித்ரா சத்தியமூர்த்தி

Comments (0)
Add Comment