தொழில்நுட்பப் புரட்சியின் புதிய திறவுகோல்!

மனித குல நாகரீகம் தோன்றிய காலம் முதலே நம்முடன் இணைந்து பயணிப்பது அறிவியல். ஆதி மனிதன் ஆடை உடுத்தத் தொடங்கிய பொழுது ஆரம்பித்தது தான் பரிணாம வளர்ச்சி.

பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவை முறையான ஆய்வு, சோதனைகள் மூலம் திரட்டி, அதன் விதிகளைப் புரிந்து கொண்டு எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் ஒரு முறையே அறிவியல் ஆகும்.

பண்டைய காலங்களில் மக்கள் இயற்கையை கவனித்து அதன் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முயன்றனர். இதுவே அறிவியலின் ஆரம்பம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் மனிதனின் வாழ்வில் இரண்டற கலக்க ஆரம்பித்தது.

கிராமங்களில் வானொலி பெட்டியின் வழியே முதன் முதலில் செய்திகள் செவிகளில் நுழைந்த போதாகட்டும், இல்லத்தரசுகளின் தோழனாய் இயந்திரங்கள் வழியே உதவியதாகட்டும்,

வண்ணங்களை குழைத்து வடிவங்களாக கண் முன் உலகவிட்ட தொலைக்காட்சி ஆகட்டும், அலுவலகங்களில் பணியாளனாய் அமர்ந்திருக்கும் கணினி ஆகட்டும், எல்லா இடங்களிலும் உட்பகுந்து நீக்கமற நிறைந்துள்ளது அறிவியல்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அது தன்னை பாட்டைத் தீட்டிக்கொண்டு மெல்ல மெல்ல முன்னேறியது.

விவசாயம், விண்வெளி, மருத்துவம், தொழில், வர்த்தகம், கல்வி என பல்வேறு துறைகளிலும் தன் சாம்ராஜ்யத்தைப் பரப்பியுள்ளது அறிவியல்.

டெல்லியில் வசிக்கும் மகளிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருந்த தாயின் ஏக்கத்தை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்வது கடினம்.

அமெரிக்காவில் 1963-ல் ஜனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இந்திய கிராமவாசிகளை சென்றடைய ஒரு நாள் ஆனது. இவ்வாறு இருந்த காலமெல்லாம் இப்போது பழங்கதையாகிப் போனது.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டதால் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் பூமி பந்தின் மறுபக்கத்தில் நடக்கும் சம்பவங்களை கூட உடனுக்குடன் நம்மால் பார்க்க முடிகிறது, எல்லாம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தான்.

இது மனித நாகரீகத்தின் வளர்ச்சி, அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நோய்களை குணப்படுத்தவும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வித்திடவும் உதவி உள்ளது அறிவியல் வழி முறைகள் மூலம் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சியானது அடுத்தடுத்த கட்டங்களுக்கு புதிய பரிமாணங்களுடன் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதன் புதிய வடிவம் தான் ஏஐ என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு. இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் பல வழிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எந்த ஒரு சிக்கலான பிரச்சினையை எளிதாக தீர்க்கும் திறன் இருப்பதால், பல்வேறு தொழில்களில் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பயன்பாடுகள் நம் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தொழில்நுட்ப புரட்சியின் புதிய திறவுகோலாக அமைந்துள்ள இந்த செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளது.

இதன் மூலம் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் பேசாத ஒன்றை பேசியதாகவும் சித்தரிக்க முடியும். இதன் பின்னே இருப்பது ஏ.ஐ தொழில்நுட்பம் தான்.

ஏ.ஐ என்றால் என்னவென்று பார்ப்போம். மனிதனுக்கும் எந்திரத்துக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அது படைப்பாற்றல் திறன் தான். மனிதன் என்பவன் சிந்தித்து செயலாற்றுபவன்.

ஆனால், எந்திரம் என்பது எந்த வேலைக்காக நிர்மாணிக்கப்பட்டதோ அந்த வேலையை மட்டுமே செய்யும்.

இதனை சிறிது மாற்றி எந்திரங்கள் மூலம் படைப்பாற்றல் திறன் சாத்தியப்படுமானால் அதுதான் செயற்கை நுண்ணறிவ. எளிதாகக் கூற வேண்டும் என்றால் மனித நுண்ணறிவை கணினிக்குள் கொண்டு வரும் முறைதான் செயற்கை நுண்ணறிவு.

மனிதனின் சிந்தனை, அறிவு, கற்றல், முடிவெடுத்தல், பிரச்சினைகளைக் கையாளுதல் போன்ற செயல்களை கணினி அமைப்புகளைக் கொண்டு செய்யும் திறனைத் தான் ஏ.ஐ என்கிறோம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் போன் மற்றும் லேப்டாப் வழியே உங்களுக்கு உதவும் நண்பன் என்று சொல்லலாம்.

தனக்கு வழங்கப்படும் தரவுகள் அல்லது டேட்டாக்களில் இருந்து வடிவங்களையும் தொடர்புகளையும் கற்றுக்கொள்ளும் ஏ.ஐ அதை பயன்படுத்தி கணிப்புகளையும் பணிகளையும் செய்கிறது.

தன்னிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் தகவல்கள், யோசனைகள் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைத் தருகிறது.

அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு தானாக இயங்கும் தொழில்நுட்பம், தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளைப் புரிந்து கொள்ளும் திறன்,

படங்கள், வீடியோக்கள், முக அடையாளம் காணுதல், எழுத்துக்கள், இசை போன்றவற்றை உருவாக்கும் திறமை ஆகிய முக்கிய பிரிவுகள் இதில் உள்ளன.

மனிதர்களின் பணிச் சுமையை குறைத்து வேலைகளை துல்லியமாகவும் வேகமாகவும் செய்ய உதவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கிறது.

சமீபகாலமாக வணிகம், சுகாதாரம் நிதி, தொழில்நுட்பம் வாகனம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் ஏ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் நாள்பட்ட நோய்களை ஆய்வு செய்வதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.

இதே போல் தொழில் துறையிலும் பல பணிகளில் எந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கவும், செலவினங்களை குறைக்கவும், நிதித் துறையில் பகுப்பாய்வு மோசடிகளை கண்டறியவும், வணிகத்துறையில் முடிவெடுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவின் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று, தரவு அல்லது டேட்டா பாதுகாப்பு. பல நிறுவனங்கள் தங்களிடம் உள்ள முக்கியமான டேட்டாக்களை பாதுகாக்க ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

கல்வித் துறையில் பாடத்திட்டங்கள் உருவாக்குவது, மாணவர்களுக்கு யோசனைகள் வழங்குவது போன்றவற்றிலும் இதன் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

மொழிபெயர்ப்புக்கு பெரிதும் உதவுவதால், மொழிகளை பயன்படுத்துவதில் உள்ள தடைகள் அகலும்.

வேளாண்மை துறையில் மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை களையவும் வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும் சென்சார்கள் மூலம் கிடைக்கும் தரவுகளை வகுப்பாய்வு செய்வதன் மூலமும் வெப்பநிலை, மழைப் பொழிவு, காற்றின் வேகம் மற்றும் வறட்சி அபாயத்தைக் கணிக்கவும் முடியும்.

பாதுகாப்புத் துறையில் ஆயுத கட்டுப்பாடு, கண்காணிப்பு போன்ற பணிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது செல்போனில் இருக்கும் குரல் மூலம் அடையாளம் காணுதல் மற்றும் முகம் அடையாளம் காணுதல் தொழில்நுட்பத்துக்கும் செயற்கை நுண்ணறிவு தான் அடிப்படை.

ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைகளை வேகமாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். இதனால், மனிதர்களின் வேலை பளு குறையும். ஏஐ மூலம் புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன

Chat GPT, Canvas AI Magic design, Perplexity, Google Gemini, Mid journey என இதில் நிறைய தளங்கள் இருக்கின்றன. சிலவற்றை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

ஏ.ஐ. பயன்படுத்த தொடங்குபவர்களுக்கு Chat GPT நல்ல தேர்வாகும். தமிழ் ஆங்கிலம் உட்பட 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.

எவ்வாறு இதனை பயன்படுத்துவது என்று பார்ப்போம்:

chat.openai.com என்ற லிங்கை பிரவுஸ் செய்து, உங்களின் மொபைல் போன், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவற்றில் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் மொபைல் போனின் ப்ளே ஸ்டோரில் இருந்து chat GPT ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ChatGPT settings language-இல் சென்று உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் தமிழ் மொழியை தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

Chat GPT ஆப்பை உங்கள் மொபைலில் ஓபன் செய்ததும், என்ன உதவி வேண்டும் என்ற இடத்தில் உங்களுக்கான கேள்விகளை உள்ளீடு செய்து நீங்கள் பதிலை பெற முடியும்.

ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், எழுத்துக்கள் ஆகிய வடிவங்களில் உங்களின் கேள்விகளை நீங்கள் உள்ளீடு செய்ய முடியும் .

இதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். கதை, கவிதை கட்டுரை, மொழிபெயர்ப்பு புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வது, வியாபார நோக்கத்திற்கான உதவிகள், அன்றாட செயல்பாடுகளுக்கு தேவையான ஆலோசனைகள், மருந்துகள் பற்றிய சந்தேகங்கள் ஆகிய பலவற்றிலும் இதனுடைய உதவியைப் பெறலாம்.

உதாரணமாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப ஆடைகளை எவ்வாறு தேர்வு செய்வது, எந்த வகையில் உடுத்துவது, இருக்கும் காய்கறிகளைக் கொண்டு எவ்வாறு ஒரு உணவு சமைப்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்கலாம்.

உங்களுக்கான புத்தகப் பரிந்துரை, அந்த புத்தகம் எங்கு கிடைக்கும், அதன் சுருக்கம் என்ன என்பதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

உங்களுக்கான வியாபார ஐடியாக்களை உருவாக்கவும், எப்படி அதனை கொண்டு செல்வது என்றும் ஒரு ஈமெயில் எப்படி தயார் செய்வது?

வீட்டுக்கான ஒரு மாத பட்ஜெட் எவ்வாறு எழுதுவது என நீங்கள் என்ன உதவியை வேண்டுமென்றாலும் Chat GPT மூலம் பெற முடியும்.

எந்த மொழியை வேண்டுமானாலும் கற்பதற்கு Chat GPT உங்களுக்கு கை கொடுக்கும். புகைப்படங்களை கார்ட்டூனாக மாற்றுவது, வரைபடமாக மாற்றுவது, வீடியோவாக மாற்றுவது, எடிட் செய்வது என பல்வேறு வகைகளும் இருக்கின்றன.

நீங்கள் ஒரு புகைப்படத்தை உள்ளிட்டு அதில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்ற தகவலை அளித்தால் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தயாராகிவிடும். அடிப்படை தெரிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் கட்டணம் இல்லாத ஆசிரியராக செயல்படும் Chat GPT.

எந்த ஏ.ஐ கருவியாக இருந்தாலும் பிராம்ப்டிங் மிகவும் முக்கியமாகும். பிராம்டிங் என்பது உங்களுக்கு தேவைப்படும் தகவலை சரியாக கேட்டு பெறுவது.

ஆயிரம் டேட்டாக்களை வைத்திருந்தாலும் ஏ.ஐ என்பது ஒரு இயந்திரம் அதற்கு நாம் கட்டளைகளை சரியாக வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, பிற வழிகளிலும் தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தாலும் இந்த தொழில்நுட்பத்துக்கு உணர்வுகள் கிடையாது என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உள்ளிடும் தகவல்கள், புகைப்படங்கள் போன்றுவற்றை ஒரு டேட்டாவாக ஏஐ சேமித்து வைக்கும் என்பதால் புகை படங்களை உள்ளிடும் போது கவனமுடன் செயல்பட வேண்டும்

தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் பெருகி வாழ்க்கை இனிமையாகிறது. ஆனால், பாதுகாப்பு குறைகிறது.

நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போல் எல்லா கண்டுபிடிப்புகளிலும் பல நன்மைகள் இருப்பது போல் சில தீமைகளும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இதற்கு ஏஐயும் விதிவிலக்கல்ல என்று சொல்லும் வகையில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியிலும் சில சவால்கள் உள்ளன.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் ஒரு புறம் ஏற்பட்டிருந்தாலும் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

அதேசமயம் மனித உணர்வு, படைப்பாற்றல், தனித்திறன்கள் தேவைப்படும் பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் குறையாது.

குறிப்பாக மருத்துவத் துறையில் ஏஐ மூலம் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றாலும், மருத்துவர்களின் தேவை ஒருபோதும் குறையாது.

ஏனெனில் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே இது மருத்துவருக்கு உதவியாக இருக்குமே தவிர அவருக்கு மாற்றாக அமைய முடியாது.

கல்வித்துறையில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதில் ஏ.ஐ ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்குமே தவிர அவர்களுக்கு மாற்றாக செயல்பட வைத்து விட முடியாது.

இதேபோன்று இசைத் துறையைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் தனி திறனுடன் விளங்குவதால் இவர்களுக்கு மாற்றாக ஏ ஐ – யை செயல்பட வைக்க முடியாது.

ஆனால், தொழிற்சாலை போன்ற இடங்களில் சில வேலைகளை தானியங்கு படுத்தப்படுவதால் வேலைவாய்ப்பு குறையும் ஆபத்தும் உள்ளது.

கணினியில் உள்ள மென்பொருள் சூத்திரம் செயல்பாட்டு திட்டங்கள், கணிப்புகள், தீர்வுகளைச் செய்யும் ஏ.ஐ, அல்காரிதம் பயிற்சி பெற்ற தரவுகளில் இருந்து கற்றுக் கொள்கின்றன.

அந்தத் தரவுகளில் பாரபட்சம், தவறுகள் இருந்தால் அது நியாயமற்ற தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

ஏஐ பயன்பாடு காரணமாக, தனி உரிமை மற்றும் தரவுகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். Chat GPT போன்ற தேடு பொறியியல் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, ஒரே மாதிரியான பதிலையோ அல்லது ஒரு சார்புடைய பதிலையோ அல்லது தவறான காலாவதியான பதிலையோ பெறுகின்ற ஆபத்து உள்ளது.

ஏஐ பெறும் தரவுகளில் தவறு இருந்தால் இது நடக்கக்கூடும்.

ஏ.ஐ. மூலம் தவறான தகவல்களையும் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தையும் எளிதாக உருவாக்க முடியும். இது சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் .

மேலும் ஏ ஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் பெரும் தொகை செலவாகும்.

சில சந்தர்ப்பங்களில் ஏ.ஐ அமைப்புகள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் ஆபத்தும் உள்ளது. இது கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தார்மீக பொறுப்பில்லாமலும் நெறிமுறைகளை கருத்தில் கொள்ளாமலும் கண்முடித்தனமாக பயன்படுத்தும்போது அது தனி மனிதனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு அச்சுறுத்தல் ஆக அமையும் ஆபத்தும் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இதுபோன்ற தீமைகள் ஏற்படாமல் இருக்க, செயற்கை நுண்ணறிவை மிகவும் பொறுப்புடனும் அடிப்படை நெறிமுறைகளுடனும் நேர்மையாகவும் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு தேவையான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

  • எஸ். வாணி
 
Comments (0)
Add Comment