எழுத்துக்களால் வாசகனை வசீகரித்த குவெம்பு!

கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர் குப்பளி வெங்கடப்ப கவுடா புட்டப்பா. 

ஆனால், இவர் எழுதும் நூல்களில் குவெம்பு என்றே பெயர் இருக்கும். இதனால் குவெம்பு என்று சென்னால்தான் இலக்கிய உலகத்தில் பரிட்சயம்.

இவர், ஞானபீடம், பத்ம பூஷண், பம்பா விருது, சாகித்திய அகாதமி என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

கன்னட இலக்கியத்தில் மட்டுமல்லாது இந்திய இலக்கியம் வரை இவரது கவிதைகள் பிரபலம்.

கர்நாடக மாநிலம், இரேகொடிகை என்ற ஊரில் 1904-ம் ஆண்டு பிறந்த இவர் 1994-ம் ஆண்டு தனது 89ஆவது வயதில் மறைந்தார்.

இதையடுத்து இவரது பெயரில் இலக்கிய உலகத்தில் சமூகத்திற்கான படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு 2013-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் எழுத்தாளருக்கு ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

குவெம்பு கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், என்னும் துறைகளில் முத்திரை பதித்தவர்.

ஆசிரியராய், கல்லூரி முதல்வராய், பல்கலைக் கழகத் துணைவேந்தராய்ப் பதவிகள் வகித்தவர்.

மைசூர், பெங்களுர், கான்பூர், குல்பர்கா, ஆகிய பல்கலைக் கழகங்கள் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் அளித்துத் தம்மைப் பெருமைப் படுத்திக் கொண்டன.

கர்நாடக ரத்னா, கர்நாடக அரசவைக் கவிஞர் போன்ற பெருமைகளும் அவருக்குக் கிடைத்தன.

குவெம்புவின் கவிதைகள் எளிமையானவை; வாசிக்கும் வாசகனை உடனே தம்முள் ஈர்க்கக் கூடியவை; கருத்துகளைத் துணிந்து கவிநயம் குன்றாமல் சொல்லக் கூடியவை.

கிராமத்தின் முக்கியமான தொழில் விவசாயம்தான்; அத்தொழிலைச் செய்யும் விவசாயியைத் தியாகி என்றும், யோகி என்றும் குவெம்பு போற்றுகிறார்.

உலகில் எச்செயல்கள் நடந்தாலும் அவன் தன் பணியை விடாமல் செய்துகொண்டே இருப்பான். அதனால்தான் அவனை ‘ஏரின் யோகி’ என்கிறார்.

அவன் தன் தொழிலை இடைவிடாமல் செய்து வருவதால்தான் இவ்வுலகில் மன்னர்கள் ஆண்டனர். சிற்பிகள் சிலைகளைச் செதுக்கினர். கவிஞர்கள் கவிகள் புனைந்தனர். அதுவும் பலனை எதிர்பாராமல் விவசாயி தன் பணியை ஒரு கர்மம் போலச்செய்து வருவதனால்தான், 

’ஏர்கொழுவில் அடங்கிஉள்ளது கர்மம்
ஏர்மீது நின்றுளது தர்மம்’

– என்கிறார்.

இப்பாடலை மொழிபெயர்த்தவர் பயன்படுத்தும், யோகி, ராகி, கர்மம், தர்மம் போன்ற சொற்கள் பொருளமைதியோடு ஓசைநயமும் கொண்டு விளங்குகின்றன.

பிறைச்சந்திரன் என்றொரு கவிதை. அதில், ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,

’கடவுளின் பெப்பர்மிண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்’

என்று எளிமையாகக் கேட்கிறான்.

சாதாரண பெப்பர்மிண்ட் மிட்டாயானது சுவைக்கச் சுவைக்கத் தேய்ந்து மறைந்து போகும்.

ஆனால், வானில் உள்ள பெப்பர்மிண்ட்டான பிறைச் சந்திரன், ”எவ்வளவு சுவைத்தாலும் செலவாகாமல் வளர்கின்ற பெப்பர்மிண்ட்டா” எனக் கேட்கிறான் அவன்.

மேலும் கவிதை வளர்கிறது. ”அந்த பெப்பர்மெண்ட் எனக்குக் கிடைக்குமா அம்மா” என் அவன் அம்மாவிடம் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.

’நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே’

இப்போது சிறுவனுக்கு ஓரளவு புரிகிறது. கடவுளின் குழந்தையாக வேண்டுமானால் தாயைப் பிரிய வேண்டும். ஆனால் அவன் தன் தாயைக் கடவுளைவிட மேம்பட்டவராகக் கருதுகிறான்.

எனவே தன்னிடமிருந்து தன் தாயைப் பிரிக்கின்ற பெப்பர்மிண்டே வேண்டாமென உறுதியாகக் கூறுகிறான்.

’கடவுளின் குழந்தையாக விரும்பமாட்டேன்
அவனை மீறியவள் நீயம்மா
தாயைப் பிரித்துக் கடவுளிடம் சேர்க்கிற
பெப்பர்மிண்ட்டும் வேண்டாமம்மா’

கடவுளை விடத் தாயை உயர்வாகக் காட்டும் எளிமையான கவிதை இது. அதுவும் சிறுவன் பார்வையில் கூறப்படுவதால் இது மேலும் சிறக்கிறது.

சில சாத்திரங்கள் அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவையாகும். கால மாறுதலுக்கேற்ப அவை மாற்றப்படவேண்டும்.

ஏனெனில் மாந்தன் அறிவு வளர்ந்துகொண்டே போகும் தன்மை உடையது. அவ்வளர்ச்சிக்கேற்ப அவனுக்கு வழிகாட்டுக் சாத்திரங்களும் மாறவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும். அதனால்தான் குவெம்பு,

’தாகத்துக்கு வருகிற சோதரனுக்கு நீர் கொடுக்க
மனுசாத்திரத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டுமா என்ன?’

என்று வினா தொடுக்கிறார்.

பஞ்சமன் ஒருவன் குழந்தை ஏரி நீரில் மூழ்கும்போது அதைக் காப்பாற்றாமல் பக்கத்திலேயே குளித்துக் கொண்டிருக்கும் ஒரு பிராமணன் நான் அதைத் தொட்டால் என் பிராமணத்துவம் கெடும் எனச் சும்மா இருக்கலாமா? என்பது குவெம்பு தொடுக்கும் கேள்வி.

அப்படித்தான் சாத்திரம் சொல்கிறது எனில் சொன்ன மனுவையும், அவன் சொன்ன சாத்திரத்தையும் பிணைத்து வீசியெறிவோம் என்கிறார்.

நம் இதயம் சொல்வதே தரும நீதி எனச் சொல்லும் குவெம்பு, அக்கவிதையைக் கடைசியில்,

’அந்நாள் முனிவரும் நம்போல மனிதரே
அவரின் சாத்திரம் அவர் காலத்துக்கு மட்டுமே
காலத்துக்கேற்ப தேசத்திற்கேற்ப
நம்மிதயமே மேன்மையான நீதிநூல் நமக்கு’

என்று “எந்தக் காலத்து சாத்திரம் என்ன சொன்னால் என்ன?” முடிக்கிறார். ’கடவுள் சாட்சியானார்’ கவிதையில் உள்ள ‘நீளடவி’ என்னும் சொல்லும், ‘அலைபுனல்’ என்னும் வினைத்தொகைச் சொல்லும் மொழிபெயர்ப்பாளரின் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

– தமிழ் மாறன்

Comments (0)
Add Comment