கம்பதாசன் என்னும் கம்யூனிசக் கவிஞர்!

பாரதியாருக்குப் பின் வந்த மரபு வழிப் பாவலர்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டிய ஆனால் இலகுவாக மறக்கடிக்கப்பட்டுவிட்ட அற்புதமான ஒரு படைப்பாளி கவிஞர் கம்பதாசன்.

தன்னைக் கவிஞனாக நிலை நிறுத்திக் கொண்டவர்.

ஆரம்பகால திரைப்படங்களான திரௌபதி, வஸ்தராபகரணம், ஸ்ரீநிவாச கல்யாணம், மஹா மாயா போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி தன் கலைப் பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் முதன் முதலாக பாடலாசிரியராக உருவெடுத்தது 1940-இல் வாமன அவதாரம் திரைப்படத்தில்.

வேணு கானம், மஹா மாயா, பூம்பாவை, ஞான சௌந்தரி போன்ற படங்களுக்குப் பாடல்களை எழுதிய கம்பதாசன் 1948-ல் வெளிவந்த ‘மங்கையர்க்கரசி’ படத்தில் கதையையும், பாடல்களையும் எழுதியிருந்தார்.

ஜி.ராமநாத ஐயரின் இசையில் பி.யு.சின்னப்பாவின் குரலில் இவரது பாடல்கள் பலரையும் தொட்டன.

‘பார்த்தால் பசி தீரும், பங்கஜ வதன செங்கனி வாய்சிரிப்பைப் பார்த்தால் பசி தீரும்’ என்பதே பாடல்.

அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப் படங்களில் இவர் எழுதிய பாடல்கள் இன்னும் காலத்தால் அழியாத பாடல்களாகவும், திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத பாடல்களாகவும் காணப்படுகின்றன.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கிராமத்தில், சுப்பராயன், பாப்பம்மாள் தம்பதியர் 5 பெண்களைப் பெற்றெடுத்தபின் ஆறாவதாக 1916-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்தார்.

இயற்பெயர் அப்பாவு. செல்லப்பெயர் ராஜப்பா. சி.எஸ்.ராஜப்பா என்ற பெயரில் தன் கலைமுகத்தைக் காட்டிய இவர் படைப்பாளியாக கம்பதாசன் என்ற பெயரில் இலக்கியங்களை எழுதிக் குவித்தார்.

1950-களில் வெளிவந்த ‘இதயகீதம்’, ‘தந்தை’ போன்ற படங்கள் கம்பதாசனுக்குத் தமிழ்த் திரையுலகில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்தன.

இதில் ’ஆசைக்கிளியே அழைத்து வாராய்த் தென்றலே’ பாடல் ‘இதயகீதம்’ படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் புகழ்பெற்ற கம்பதாசனின் பாடல்.

1953-இல் வெளிவந்த ‘பூங்கோதை’ படத்தில் ’நான் ஏன் வரவேண்டும் ஏதுக்காகவோ யாரைக் காண்பதற்கோ’ என்ற பாடல் காதலின் நயத்தை அழகாகச் சொல்லியது.

இந்தியில் வெளிவந்த ‘’ஆ’’ என்ற படம் தமிழில் ‘அவன்’ என்ற பெயரில் வெளிவந்தது. மொழி மாற்றுப் படமான இதில் அத்தனைப் பாடலையும் கம்பதாசனே எழுதியிருந்தார்.

‘மேகம் நுழைந்த மின்னல் போலே…. கண் காண வரும் மனம் கனிந்து வரும்….’ என்ற பாடல் உட்பட பல பாடல்கள்.

‘அவன்’ அடைந்த வெற்றிக்குப்பின் ஏராளமான மொழி மாற்றுப் படங்களுக்குப் பாட்டெழுதினார். அதையும் இலக்கிய நயத்தோடு எழுதி வெற்றிகண்டார் கம்பதாசன்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளையும், முத்துச் சிமிக்கி என்ற சிறுகதைத் தொகுதியையும் ஆதி, சிற்பி, அருணகிரி நாதர் போன்ற நாடகங்களையும் படைத்த இலக்கியவாதியான கம்பதாசனின் கடைசிப் பாடல் 1972-ல் வெளிவந்த ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றது. ‘கேட்ட நினைவிலே’ என்பதே அப்பாடல்.

‘நன்னம்பிக்கை’ என்ற படத்தில் இவரது கவிதையொன்று எஸ்.வி.வெங்கட்ராமனின் குரலில் ’சூரியனும் ஒரு தொழிலாளி.

“தினம் சுற்றும் உலகும் தொழிலாளி” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஓங்கி ஒலித்தது.

பண்ணோடு இசைந்த பாடல் புனையும் வல்லமை கொண்ட பாடலாசிரியரான கம்பதாசன் சோஷலிச தத்துவங்களை ஏற்றுக்கொண்ட சமதர்ம இலக்கியவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியவர்.

  • நன்றி – அன்று கண்ட முகம்
 
Comments (0)
Add Comment