சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இதுவரை காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் ஒரு பவுன் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற அளவிற்கு விலை ஏறிவிட்டது. நகைக் கடைக்காரர்களே இந்த அளவுக்கு விலை ஏற்றத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வசதி உள்ளவர்கள் தங்கத்தின் விலை எந்தளவுக்கு உயர்ந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், வழக்கமாகக் காதுக் குத்து, சடங்கு, திருமணம் என்று பல்வேறு குடும்ப விழாக்களுக்கு சிறு அளவில் நகைகளை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் இந்த விலையேற்றத்தில் திணறிப் போயிருக்கிறார்கள்.
அவர்களால், தற்போது ஏறியிருக்கிற தங்கத்தை சுலபமாக வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு ஒரு மாற்றாக தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் 22 கேரட் தங்கத்திற்குப் பதிலாக 9 கேரட் தங்கம் புழக்கத்திற்கு வந்திருக்கிறது.
இந்த 9 கேரட் தங்கத்திற்கு தரச் சான்றிதழ் மதிப்பும் கிடைத்திருக்கிறது.
இந்த 9 கேரட் தங்கத்தில் தங்கம் 9 சதவீதமும், மீதம் செம்பும் கலந்திருக்கும். ஆனால் 22 கேரட் தங்கம் எந்த அளவிற்கு ஒளிரும் தன்மை கொண்டதோ அதே அளவிற்கு 9 கேரட் தங்கமும் இருக்கும்.
அதோடு சுலபமாகக் கருகக் கூடியதல்ல என்றும் உத்திரவாதமாகச் சொல்கிறார்கள்.
மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது புழக்கத்திற்கு வந்திருக்கிற 9 கேரட் தங்கம் இனி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக புழக்கத்திற்கு வரலாம்.
பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு 22 கேரட் தங்கம், சற்றுப் பொருளாதாரநிலை குறைந்தவர்களுக்கு 9 கேரட் தங்கம் என்று தங்கத்திலேயே இருவேறு நிலைகள் வருவதற்கான சாத்தியம் இருக்கிறது.
தங்கத்தின் விலை ஒரு லட்சத்திலிருந்து இனிமேல் ஒன்றரை லட்சம் வரைக்கும் போய்விடலாம் என்று நகைக் கடைக்காரர்களே சொல்லும் நிலையில், நகை வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் என்னதான் செய்ய முடியும்?
9 கேரட் தங்கம் போன்ற மாற்று தான் அவர்களுக்கான எளிய வழியாக இருக்கும்.
எம். மாலதி