ஏஐ தொழில்நுட்பம்: யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு?

நவீனத் தொழில்நுட்பம் என்பது அறிவியல் யுகத்தில் அத்தியாவசியமான ஒன்று.

புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அதுவரை கட்டிக் காட்கப்பட்ட பழைய தொழில்நுட்பங்கள் பின்னுக்குப் போய்விடுகின்றன.

உதாரணத்திற்கு சென்ற நூற்றாண்டில் விவசாயத்தின் முன்னணி தொழில்நுட்பமாக திகழ்கிற டிராக்டர் பயன்பாட்டிற்கு வந்தபோது, தமிழகத்தில், குறிப்பாக தஞ்சையைச் சேர்ந்த ஏர் ஓட்டிக் கொண்டிருந்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

நாளடைவில் ஏர் ஓட்டும் உழவர்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள்.

அதைப்போலவே 80-களின் துவக்கத்தில் நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவான கம்யூட்டர் அறிமுகப்படுத்தபட்டபோது, வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. தற்போது, எல்லா வங்கிச் சேவையிலும் கம்யூட்டர் மயமாக்கப்பட்டுவிட்டன. 

இது இன்றைய சூழல்.

தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற ஏஐ தொழில்நுட்பம் உலகெங்கும் மிகக் குறுகிய காலத்தில் பரவியிருக்கிறது, பயன்பாட்டிற்கும் வந்திருக்கிறது.

அமெரிக்காவைப் போன்ற நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டாடவும் செய்கின்றன. 

பொதுவாக ஐடி துறையில் கம்யூட்டர் டெக்னாலஜி படிப்பை முடித்த 10 ஊழியர்கள் செய்யும் வேலையை, தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து ஒருவர் மட்டுமே அதே செயலைச் செய்துவிட முடியும்.

அமெரிக்காவில் ஐடி துறையில் இதுவரை அவுட்சோர்சிங் முறையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் பணியாற்றிவந்தார்கள்.

அவர்களுக்கு ஓரளவு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் அதையொட்டிய பொருளாதார வசதிகளும் மேம்பட்டிருந்தன.

ஐடி தொழில் என்றாலே, ஒரு மதிப்பு சமூகத்தில் கூடியிருந்தது. அப்படிப்பட்ட பொது மதிப்பீட்டில் தற்போது கல்லை விட்டெறிந்திருக்கிறது ஏஐ தொழில்நுட்பம்.

ஐடி துறையில் பணியாற்றிவந்த ஏறத்தாழ 30 சதவீதம் பேர் அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 

ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்கள் மட்டுமே பணியில் நீடிக்கிறார்கள். 

சரி, இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு என்ன லாபம் கிடைக்கிறது என்று பார்த்தால், ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால், அவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதுவரை கொடுத்துவந்த அவுட்சோர்சிங் முறையை பெருமளவில் குறைத்துவிட்டார்கள். 

இதனால் அமெரிக்காவில் பணியாற்றச் சென்ற ஐடி ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்கா அதிபரான டிரம்பின் பல்வேறு நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

அண்மையில், ஏஐ தொழில்நுட்பம் குறித்த பார்வையை முன்வைத்து டெல்லியில் ஒரு மாநாடு கூட நடந்தது.

அதில்கூட ஏஐ தொழில்நுட்பத்தினால் உருவாகும் வசதிகள் அதன்மூலமாக உருவாகும் திறமைகள் என்று பலவும் பேசப்பட்டனவே ஒழிய ஏஐ தொழில்நுட்ப வருகையால், வேலைகளை இழந்து வருகிற லட்சக்கணக்கான இளைஞர்களைப் பற்றிப் பேசப்படவில்லை.

திரைப்படம், ஊடகம் அரசு மற்றும் தனியார் அலுவலக செயல்பாடு, கல்விக் கூடங்களின் பயன்பாடு என்று பல்வேறு துறைகளில் வியாபித்திருக்கும் ஏஐ தொழில்நுட்பம் இன்னொரு பக்கம் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியதாக்கி இருக்கிறது.

நவீன தொழில்நுட்பம் தேவைதான். ஆனால், எதை இழந்து எதைப் பெறுகிறோம்? என்பதும் முக்கியமல்லவா?

ஏஐ தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளாத இளைஞர்கள் ‘பழையன கழிதலாக’ ஒதுக்கப்பட்டுவிடுவார்கள் என்கின்ற சுட வைக்கும் வாழ்வியல் எதார்த்தமும் இதில் அடங்கியிருக்கிறது.

-மணா 

Comments (0)
Add Comment