கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர்: யார் இந்த புதிய சிங்கங்கள்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது பல காலமாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஏலத்தில் இளம் வீரர்களை வாங்காமல் 30 வயதைக் கடந்த வீரர்களையே வாங்குகிறது என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

இந்த முறை அந்த குற்றச்சாட்டை பொய்யென்று நிரூபித்தியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.

இதுவரை ஒரு சர்வதேச போட்டியில்கூட ஆடாத 2 இளம் வீரர்களை தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கி சிஎஸ்கேவின் சிங்கப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.

சென்னை அணியில் முதல் முறையாக இப்படி அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ள இந்த சிங்கங்களைத் தெரிந்துகொள்வோம்..

கார்த்திக் சர்மா:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான கார்த்திக் சர்மாவின் வயது 19.

சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே இத்தனை கோடி ரூபாய் கொடுத்து ஒரு சர்வதேச அளவில் அறிமுகம் இல்லாத ஒரு இளம் வீரரை வாங்கியதில்லை.

அவரை இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் வளைத்துப் போட்டிருப்பதற்கு காரணம் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் வெளிப்படுத்திய சிறப்பான பேட்டிங்.

ரஞ்சிக் கோப்பைத் கிரிக்கெட் தொடர் மட்டுமின்றி விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரிலும் 8 இன்னிங்ஸ்களில் 445 ரன்களை குவித்திருக்கிறார் கார்த்திக் சர்மா.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரிலும் அதிரடியாக ஆடி தன் மீது ஐபிஎல் அணிகளின் கவனத்தைத் திருப்பியுள்ளார்.

அதனாலேயே அவரை வாங்க இந்த முறை ஏலத்தில் கடும் போட்டி ஏற்பட்டது. டி20 போட்டிகளில் இவரது ஸ்டிரைக் ரேட் 168.01 என்பது இவரைப் பற்றிய இன்னொரு பரபரப்பான செய்தி.

ஏற்கெனவே தோனி, சஞ்சு சாம்சன், உர்வில் படேல் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் இருக்கும்போது, இந்த ஐபிஎல்லில் ஆட இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ஆட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ 14.2 கோடி ரூபாயை இவரது பேக்கட்டுக்குள் திணித்திருக்கிறது சிஎஸ்கே

பிரசாந்த் வீர்:

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீரையும் 14.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

உத்தரப் பிரதேசத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

உத்தரப்பிரதேச டி20 போட்டிகளில் 10 ஆட்டங்களில் மொத்தம் 320 ரன்களைக் குவித்து 8 விக்கெட்களையும் வீழ்த்தியதால் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக இவரை தட்டித் தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில் இவரது ஸ்டிரைக் ரேட் 169.69 என்பது சிஏஸ்கேவை இவர் பக்கம் ஈர்த்துள்ள மற்றொரு விஷயம்.

ஜூனியர் ஜடேஜா என்று அழைக்கப்படும் இவர் இந்தப் பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வார் என்று நம்புவோம்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமாக ரன்களை எடுக்கிறது என்ற கெட்ட பெயர் கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் இருந்தது.

அதை ஈடுகட்டுவதற்காக இம்முறை இந்த 2 அதிரடி வீரர்களையும் ஏராளமான கோடிகள் செலவு செய்து ஏலத்தில் வாங்கியுள்ளது.

இந்த ஏலத்தில் சென்னை அணியின் முதல் டார்கெட் கேமரூன் கிரீனாகத்தான் இருந்தார்.

ஆனால், 20 கோடி ரூபாய் வரை சென்றும் அவரை வாங்க முடியாத்தால், வேறு வழியின்றி இந்திய வீரர்கள் வசம் சிஎஸ்கே சென்றிருக்கிறது.

இந்த இரு வீரர்களைத் தவிர மேத்யூ ஷார்ட், ராகுல் சாஹர், கிலென் போக்ஸ், அகில் ஹொசைன், மேட் ஹென்ரி, சர்பிராஸ் கான், அமன் கான் ஆகியோரையும் சிஎஸ்கே வாங்கியிருக்கிறது.

இவர்கள் பெரிய அளவிலான வீரர்கள் இல்லை என்றபோதிலும் சிஎஸ்கே அணி அவர்களை எப்படி உருவாக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்பாம்.

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment