ரஷ்ய அதிபர் புடினுக்கு அடுத்ததாக இந்தியர்கள் ஆர்வமாக காத்திருப்பது லயோனல் மெஸ்ஸியின் வருகைக்குதான்.
நாளை (டிசம்பர் 12-ம் தேதி) இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திக்கவுள்ளார்.
கொல்கத்தாவில் 70 அடி உயரத்தில் தயாராகியுள்ள தனது சிலையையும் இந்த பயணத்தின்போது திறந்து வைக்கிறார் லயொனல் மெஸ்ஸி.
இந்தியாவில் இத்தனை பெரிதாக ஒரு வீரருக்கு சிலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறை.
அத்துடன் 25 அடிக்கு 20 அடி என்ற அளவில் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள தன் சுவர் ஓவியத்தையும் திறந்து வைக்கிறார்.
மெஸ்ஸியை வரவேற்பதற்காக இப்போதே ஆர்வமுடன் தயாராகி வருகிறார்கள் கால்பந்து ரசிகர்கள்.
ரசிகர்கள்தான் இப்படியென்றால் தெலங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியுடன் கால்பந்து போட்டியில் ஆடுவதற்காக தினமும் இரவு நேரத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மொத்த்த்தில் இந்திய வரலாற்றிலேயே இதுபோல் எந்த வீரருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு கிடைக்கவுள்ளது.
கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படியோ அப்படித்தான் கால்பந்து விளையாட்டுக்கு மெஸ்ஸி என்பதுதான் அவரை வரவேற்பதற்காக இந்தியர்கள் காட்டும் உற்சாகத்துக்கு காரணம்.
கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் அவரது மொத்த சம்பாத்யம் 1,171 கோடி ரூபாய்.
தன் கால்பந்து விளையாட்டு திறமையால் நாளொன்றுக்கு 4.50 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் பணத்தை அள்ளி மூட்டைக் கட்டிக்கொண்டு இருக்கிறார் லயோனல் மெஸ்ஸி.
இந்த அளவுக்கு புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளவே பலரும் தயங்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா?…
ஆனால், அதுதான் உண்மை. அதற்கு காரணம் அவரை பாதித்த நோய்.
அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்கு தனது கால்பந்து திறமையை உயர்த்தியுள்ளார். ஆனால், இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது.
இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போட வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.
ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு கிளப்புகளும், அவரை அணியில் சேர்த்து பணம் கொடுத்து உதவ மறுத்தன.
இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார்.
ஆனால், அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இது தொடர்பாக உடனே ஒப்பந்தம் போட இரு தரப்பும் முடிவெடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை.
இதனால் அப்போது கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
உலகின் முன்னணி கால்பந்து வீரனாக உயர்ந்த நிலையிலும், அன்று தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி.
பழசை மறக்காத இந்த குணம்தான் மெஸ்ஸியை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.
பி.எம். சுதிர்