எளிமையை விரும்பிய பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால்!

நோபல் பரிசை நிராகரித்த பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால் சார்த்தருக்கு (Jean-Paul Sartre) பாரீஸ் நகரத்தில் ஒரு வீடு கூட சொந்தமாக இல்லை. ஓட்டலிலேயே தங்கி வாழ்ந்தார்.

பல ஓட்டல்களில் பல மாதங்களுக்கு அறை எடுத்து தங்குவார். குளிப்பதைக் கூட தள்ளிப்போட்டு விட்டு எழுதுபவராக அவர் இருந்தார்.

ஆண்டுக்கு 300க்கு அதிகமான புத்தகங்கள் படிப்பவராக அவர் இருந்தார். அவரது சொந்தத் தேவைகள் மிகவும் குறைவானவைதான்.. சில உடைகள், சிகரெட் மற்றும் கொஞ்சம் எழுதுவதற்குத் தேவையான உபகரணங்கள் ஆகியவையே அவரது தேவைகளாக இருந்தன.

காலையில் 8.30 மணிக்கு அவர் படுக்கையிலிருந்து எழுந்திருப்பார். 9.30 மணியிலிருந்து 1.30 மணி வரை அவர் எழுதுவார். (4 மணி நேரம் காலையிலும், 4 மணிநேரம் மாலையிலும் எழுதுவது என்பது அவரது அன்றாட நடவடிக்கை.) 2.00 மணியிலிருந்து 4.00 மணி வரை அவர் அவருக்கென இருக்கும் ஓட்டல்களில் சென்று சாப்பிடுவார்.

அந்த நேரங்களில், அவர் சந்திக்கும் எழுத்தாள நண்பர்களோடு தான் எழுதிக் கொண்டிருப்பவை குறித்து உரையாடுவார்.

பிறகு தனது அறைக்குத் திரும்பி விடுவார்.மீண்டும் 5 மணியிலிருந்து 9 மணி வரை எழுதுவார். இரவு 9 மணிக்கு மேல் இவர் சிமோன் தே பொவார் எனும் அறிவுஜீவியான தோழியின் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டும், இசை கேட்டு ரசித்துக் கொண்டும் இருந்து விட்டு இரவு 12.30 மணிக்கு படுக்கைக்குச் செல்வார்.

மறுநாள் காலையில் 8.30 மணியிலிருந்து 9 மணிவரை தனது காலை உணவை அவருக்குப் பிடித்தமான ஒரு உணவகத்தில் உட்கொள்வார். அதிகம் சாப்பிட மாட்டார்.

அதிகமாக பால் கலக்காத கருப்பு காபி சாப்பிடுபவாரகவும், ஏராளமாக புகைப்பவருமாக இருந்த அவர், பிரெஞ்சுக்காரர்களின் அளவைக் கருத்தில் கொண்டால் குறைவாக மது அருந்துபவராக இருந்தார்.

இவரது சமூக வாழ்க்கை என்பது பிற்பகல் நேரத்தில்தான் இருந்தது. மற்ற நேரங்களில் தன் எழுத்தைத் தானே ரசிப்பவராக இருந்து அதை எழுதுவதிலேயே கழித்தார்.

  • கலை விமர்சகர் இந்திரன்  
Comments (0)
Add Comment