முன்பெல்லாம் நீண்ட பேருந்துப் பயணங்களில் ஓடிடியில் திரைப்படம் பார்ப்பேன். ஆனால், மனம் நீண்ட நேரம் ஒரே விசயத்தில் லயிப்பதில்லை.
ரீல்ஸ் பார்க்கிறேன். இங்கு நிறைய திரிஷா, நயன்தாரா, பிரபுதேவா, விஜய் இருக்கிறார்கள். இவர்களது ஒரு நிமிட சாகசத்தில் திருப்தியடைகிறேன்.
ஒரு துறையில் மேதைகளாக இருப்பவர்களை இவர்கள் போலி செய்யவில்லை. ரஹ்மானும் கலா மாஸ்டரும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. மற்றபடி இவர்களுக்குள் அபாரமான கலைஞர்கள் ஒளிந்திருக்கிறார்கள்.
இவர்கள் பெரிய திரையைத் தொடவில்லை. ஆனால் யு டியூப், இன்ஸ்டா, முகநூலில் 2k, 3k, 4k விருப்பங்களைப் பெருகிறார்கள்.
அந்த விருப்பங்களின் பாதை இவர்களை சினிமா திரைக்கும் அழைத்துப் போகிறது.
அப்படி நான் முகநூலில் வாசித்த சில பத்திகளில் வண்ணதாசன் வாசனை. அவை சண்முகசுந்தரம் எனும் வங்கி ஊழியரின் (பணிநிறைவு எனச் சொன்னால் வயது ஓர் இடைஞ்சலாகத் தோன்றலாம். இளமை, இளமை சார்ந்த திணை இவருடையது) பதிவுகள்.
முகநூல் ஒரு வெகுசன ஊடகம் என்பதால் அதில் எழுதுவது தீட்டு என எண்ணும் மேட்டிமையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் சண்முகசுந்தரம் போன்றோர் முகநூலை ஓர் இலக்கிய வகுப்பாக மாற்றிவிடுகிறார்கள்.
ஒரு நாள் எனது எண் வாங்கி அலைபேசியில் அழைத்தார் சண்முகசுந்தரம். வண்ணதாசனின் பக்கத்து வீட்டுக்காரர் என்றார்.
திருநெல்வேலி, வண்ணதாசன் சொந்தம், தாமிரபரணி, எல்லாம் தெரிந்ததும் சண்முகசுந்தரம் எழுத்தின் இருட்டுக்கடை அல்வா இனிப்பு, வியப்பைத் தரவில்லை.
‘இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரலாமே!’ கேட்டேன்.
தயங்கியவர், ஒரு நூல் அளவுக்கு எழுதிவிட்டார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இவரது எழுத்துக்கள் ஒரு coloumn போலத் தோன்றும். இவை புனைவா (fiction)? அல்-புனைவா (nonfiction)? மயக்கம் தோன்றும். இலக்கியம் இந்த மர்மத்திலிருந்துதான் வசீகரிக்கச் செய்கிறது.
சண்முகசுந்தரம் எழுத்துக்களை எந்த வகைமையில் சேர்ப்பது? இவற்றில் உண்மை இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. அனுபவம் உருவாக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இருக்கின்றன.
அவை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கும் சமூக பண்பாடுசார் விழுமியங்களும் இருக்கின்றன.
இத்தகு படைப்புகள் உலகமெங்கும் எழுதப்பட்டு வருகின்றன. இதை creative nonfiction, narrative nonfiction, verfabula என்று அழைக்கிறார்கள்.
லீ குட்கைண்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் நம் சண்முகசுந்தரம்போல creative nonfiction வகை படைப்புகளை எழுதியவர்.
‘ஒரு நிருபரைப் போலத் தகவல்களால் தொடர்புகொள்வது, அதேவேளை புனைகதை போல படிக்கும் சுவாரஸ்யத்தை உருவாக்கும் வகையில் வடிவமைப்பதைதான் literary nonfiction’ என்கிறார் லீ குட்கைண்ட்.
சண்முகசுந்தரம் காட்டும் மனிதர்கள் இயல்பில் அவரோடு பழகியவர்கள்.
பஸ்ஸில் அவரோடு பயணிக்கும் ரோஸி டீச்சர் ரோஜாவின் ஒற்றை இதழை அவருக்கு உதிர்த்துத் தருகிறார்.
அதை rose is a rose is a rose என இலக்கியமாக இவரால் மாற்ற முடிகிறது. சம்பவங்களின் உள்ளார்ந்த தன்மையை தேடுவதன் மூலம், தனது அனுபவங்களைப் புனைவாக மாற்ற சண்முகசுந்தரத்துக்கு தெரிந்திருக்கிறது.
நாதஸ்வரம் எனும் கருவியை செய்ய மட்டுமல்ல, வாசிக்கவும் தெரிவதுதான் இவரது சாமர்த்தியம்.
இத்தகைய எழுத்து வகைமையை The art of perfect என்கிறார் விமர்சகர் பார்பரா லவுன்ஸ்பெர்ரி. இந்த வடிவத்துக்கான சில பண்பு நலன்களையும் அவர் வரையறை செய்கிறார்.
1. எழுத்தாளரின் கற்பனையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு மாறாக, உண்மையான உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விசயங்களை ஆவணப்படுத்துவது.
2. புறநிலை அறிக்கை பாணிக்கு மாறாக, நிகழ்வுகளின் சூழலை விவரித்து புத்துயிர் வழங்குவது.
3. எழுத்தில் நம்பகத்தன்மையை நிறுவது.
4. மெருகூட்டப்பட்ட மொழி நடை.
டேனியல் லெவிடினின் திஸ் இஸ் யுவர் பிரைன் ஆன் மியூசிக், நடாலியா கின்ஸ்பர்க்கின் ‘அவரும் நானும்’,
ஜான் மெக்ஃபீயின் ‘அட்லாண்டிக் நகரத்தின் ஹிப்னாடிக் சுற்றுப்பயணம்’, ஆண்டர் மோன்சனின் ‘நெக்-டீப் அண்ட் அதர் பிரெடிகமென்ட்ஸ்’ போன்ற படைப்புகள் முக்கியமான verfabula படைப்புகளாகக் கருதப்படுபவை.
இத்தகைய வடிவங்களை டிவி போன்ற காட்சி ஊடகங்கள் இப்போது ரியாலிட்டி ஷோவாக காட்சிப்படுத்துகின்றன.
இவ்வெழுத்துக்கள் ஒருவிதத்தில் bio pic தன்மையுடையதாகவும் இருக்கின்றன.
முடித்திருத்தும் வட இந்திய இளைஞனோடு, தான் பயணிக்கும் ஆட்டோ டிரைவரோடு, தன்னோடு படித்த மூக்காயியோடு இவரது அனுபவங்களைப் படிக்கும்போது, தாமிரபரணி என்கிற நதி நெல்லையில் மண்ணில் மட்டுமல்ல, சண்முகசுந்தரம் என்ற மனிதரின் மனசிலும் ஓடுகிறது என்பதை அவதானிக்கிறோம்.
ஒரே மாதிரியான எழுத்துக்களுக்கு மத்தியில் கட்டுரையாகவும் இல்லாமல், கதையாகவும் இல்லாமல், இரண்டும் மயங்குகிற இவரது எழுத்தைப் படிப்பது புதுவகையான அனுபவம்.
ஆம், சில இடங்களில் கடல் நதிபோல முன்னால் நகரும். அது கடலும் இல்லை. நதியும் இல்லை. உப்பங்கழி (lgoon).
பெயர் எப்படி இருந்தால் என்ன? எல்லாம் தண்ணீர்தான். இத்தகு உப்பங்கழிகளில்தாம் கானங்கெளுத்தி, சால்மன், சுர்மாய், திலாப்பியா போன்ற மீன்கள் கிடைக்கின்றன.
சண்முகசுந்தரம் ஒரு சைவ உப்பங்கழி. இருந்தாலென்ன? உப்பங்கழிகள் மீன் சாப்பிடுவதில்லை. நாம் ருசிக்கத் தடையில்லை.
விரைவில் சண்முகசுந்தரத்தின் narrative nonfiction படைப்புகள் அடங்கிய பூமத்திய ரைகை நூலை வேரல் புக்ஸ் கொண்டு வருகிறது. என்பது மகிழத்தக்க செய்தி.
பூமத்திய ரேகைக்கு அருகே வாழ்வது சௌகர்யமானது. இங்கு இரவு 12 மணி நேரம். பகலும் 12 நேரம். சண்முக சுந்தரத்தின் ஆரிக்கிளில் வெப்பம், வெண்ட்ரிக்கிளில் மழை.
அவருக்கு பெண் டீச்சர்கள் ரோஜா பூ தருகிறார்கள். ஆட்டோக்காரர்கள் இவரை கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
சீரான வெப்பமும், போதுமான மழையும் கொண்டது இந்த பூமத்திய ரேகை.