நவம்பர் – 18: வ.உ.சி.யின் 89வது நினைவு நாள்!
வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு நாள் இன்று. அவரின் நினைவு நாள் தியாகத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நேரத்தில் வ.உ.சியை நினைவு கூர்வது அவசியம்.
தூத்துக்குடியிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் இருக்கிறது ஓட்டப்பிடாரம். இங்கே 1872ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகநாதபிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் வ.உ.சி.
ஓட்டப்பிடாரத்தில் தொடக்கக் கல்வியும், தூத்துக்குடி செயிண்ட் சேவியர் பள்ளியில் உயர்நிலை படிப்பும், திருச்சியில் சட்டக் கல்வியும் முடித்தார்.
பிறகு ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1895ல் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார்.
1901ம் ஆண்டு வள்ளியம்மையின் மறைவுக்குப் பிறகு மீனாட்சியம்மையை மணமுடித்தார்.
• கப்பலோட்டிய தமிழன்:
1906ம் ஆண்டு சுதேசி ஸ்டீமர் கம்பெனி எனும் பெயரில் வ.உ.சி ஒரு கப்பல் கம்பெனியை பதிவு செய்தார்.
இதுகுறித்து ‘விவேகபாநு’ எனும் பத்திரிகையில் வ.உ.சி விரிவாக எழுதியுள்ளார். எஸ்.எஸ்.காலியா என்ற கப்பலை பம்பாய் சென்று கொண்டு வருகிறார். பிறகு, லாவோ என்கிற கப்பலும் வாங்குகிறார்.
தொடர்ந்து வ.உ.சியின் சுதேசி கம்பெனி, கப்பல் போக்குவரத்தைத் தொடங்குகிறது.
இது பிரிட்டிஷ் நேவிகேஷன் கம்பெனிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த பல இடைஞ்சல்கள் கொடுக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கம்பெனியினர் கட்டணத்தைக் குறைத்து இயக்குகின்றனர்.
ஆனால், எதற்கும் அஞ்சாமல் வ.உ.சி தன் பணிகளை மேற்கொள்கிறார்.
அதன்பிறகு, வ.உ.சியிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், கப்பல் கம்பெனியை விட்டுவிடும்படியும் கேட்கின்றனர். இதற்கும் அவர் மயங்கவில்லை.
ஒருகட்டத்தில் கம்பெனியின் உள்ளிருந்த பங்காளிகளே இவர்மீது பொறாமை கொள்ள வ.உ.சி கப்பல் கம்பெனியிலிருந்து வெளியேறுகிறார்.
• கோரல் மில் போராட்டம்:
இந்நேரம் தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் படுகிற கஷ்டம் அவருக்குத் தெரிய வருகிறது. அப்போது தொழிலாளர்கள் ரேகை பார்த்து வேலை செய்தனர்.
அதாவது தொழிலாளர்களின் வேலை நேரம் என்பது அதிகாலையில் கைரேகை தெரியும் அளவில் வெளிச்சம் வரும்முன் வேலைக்குவந்து, பின்னர் உள்ளங்கை ரேகை தெரியாத அளவிற்கு வெளிச்சம் மங்கிய பின்தான் போக வேண்டும்.
இதன்படி தொழிலாளர்கள் 15 மணி நேரம் வேலை செய்தனர். ஊதியமும் குறைவாக பெற்றனர். அதேநேரம் ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களைக் கொடுமையும் படுத்தினர்.
தவறுகள் ஏதாவது செய்துவிட்டால் சாட்டை அடி கொடுத்துள்ளனர். இதனால் வ.உ.சி தலைமையில் கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கியது.
இந்தப் போராட்டம் குறித்து, ‘வ.உ.சியும், திருநெல்வேலி எழுச்சியும்’ நூலில் பேராசிரியர் ஆ.ரா.வேங்கடாசலபதி, ‘1908ம் ஆண்டு தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
ஆலை மூடப்பட்டது. வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருக்கையில் அத்தொழிலாளரிடையே கூட்டங்கள் நடத்தப்பட்டன.
போராட்டம் முடியும்வரை பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தைக் கொண்டு தொழிலாளர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது; தற்காலிக மாற்று வேலை ஏற்பாடுகளும் செய்யபட்டன.
ஆலை நிர்வாகத்துடன் வ.உ.சி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மார்ச் 7ம் நாள் தொழிலாளர் வேலைக்குத் திரும்பினர்.
இந்த சமயத்தில் மக்களின் சுதேசிய உணர்வு உச்சத்தை அடைந்தது. வெள்ளையரும் அவர்களுக்கு ஆதரவு தருவோரும் புறக்கணிக்கப்பட்டனர்.
குதிரை வண்டிக்காரமும், நாவிதரும், வண்ணாரும் அவர்களுக்குப் பணிபுரிய மறுத்தனர்.
சுதேசியத்துக்கு எதிராகப் பேசியதால் ஒரு வக்கீலைப் பாதி சிரைத்து விட்டு நாவிதறொருவர் எழுந்து வந்து விட்டார்’ என்கிறார்.
இதுவே ஆசியாவில் தொழிலாளர்கள் முன்னெடுத்த முதல் தொழிற்சங்கப் போராட்டமாகும்.
• திருநெல்வேலி எழுச்சி:
இதன்பிறகு இவற்றுக்கெல்லாம் மகுடமிட்டாற்போல் சுதேசி இயக்கத்தின் தலைவர் விபின் சந்திரபால் சிறையிலிருந்து வெளியாகும் 1908 மார்ச் 9ம் நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்தார். மேலும், அவர்முன் ஆஜராகுமாறு வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 9ம் தேதி மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் விபின் சந்திரபாலின் விடுதலை கொண்டாடப்பட்டது.
இதனால், 1908 மார்ச் 12ஆம் நாள் பிற்பகலில் வ.உ.சியும், சிவாவும், பத்மநாப அய்யங்காரும் கைதுசெய்யப்பட்டனர்.
அடுத்த நாள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் தாமாகத் திரண்டனர். நெல்லை நகரத்தில் அன்று காலை இறுக்கமும், பதற்றமும் நிலவின.
ரயில் நிலையத்தை ஒட்டிய வீரராகவபுரத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டன.
கூட்டமாகக் கூடிய மக்கள் இந்துக் கல்லூரிக்குள் (இன்றைய இந்து மேல்நிலைப் பள்ளி) நுழைந்ததும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் சில ஆசிரியர்களும் அதில் கலந்துகொண்டு கிழக்கு நோக்கி நகர்ந்தனர்.
கூட்டம் முன்னேற முன்னேற மேலும் மேலும் மக்கள் சேர்ந்துகொண்டு, ‘வந்தே மாதரம்’, ‘சிதம்பரம் பிள்ளை வாழ்க’ என்றும் முழங்கிக்கொண்டு சென்றனர்.
வரிசையாக இருந்த ஐரோப்பிய வணிக நிறுவனங்களையும் அரசு கட்டடங்களையும் தாக்கினர்.
காவல் நிலையம்கூடத் தப்பவில்லை என்பதோடு ‘நீங்கள் சுதேசிகளாக இருந்தால் எங்களுடன் வாருங்கள், பரதேசிகளாக இருந்தால் வெள்ளைக்காரர்களோடு போங்கள்’ என்று துணிவுடன் போலீசாரை எதிர்கொண்டனர்.
நகராட்சி மண்எண்ணெய்க் கிடங்குக்குத் தீமூட்டியதில் அது மூன்று நாளுக்கு அணையாமல் எரிந்தது.
மக்கள் தம் எதிர்ப்புணர்வைக் காட்டுவதற்காக அரசு சொத்துகளை நாசம் செய்தார்களே ஒழிய எந்த ஒரு வெள்ளையரையும் தாக்கவில்லை.
அலுவலகங்களில் இருந்த பணத்தைத் தொடவில்லை. துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்த பிறகுதான் எழுச்சி அடங்கியது.
அதேபோல் அன்று பிற்பகல், தூத்துக்குடி நகரின் வண்டிப்பேட்டையில் தடையாணையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புக் கூட்டம் நடத்தினர்.
குதிரை மீதேறி வந்த துணை ஆட்சியர் ஆஷ் துரையையும் பிற போலீஸ் படையினையும் அவர்கள் தாக்கினர்.
நகரத்தின் அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர்.
தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. நூற்றுக்கணக்கான எளிய மக்கள் கைது செய்யப்பட்டனர். இதுவே திருநெல்வேலி எழுச்சி.
இதன்பிறகு வ.உ.சி மீது தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது நாற்பது ஆண்டுகள். இதனால் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு தண்டனை நான்காண்டுகளாக குறைக்கப்பட்டது. 1908ம் ஆண்டு முதல் 1912ம் ஆண்டு வ.உ.சி கோவை மற்றும் கண்ணணூர் சிறைகளில் இருந்துவிட்டு விடுதலையானார்.
• சென்னையில் வாழ்ந்த வ.உ.சி.
1906ம் ஆண்டு சென்னைக்கு வந்த வ.உ.சி திருவல்லிக்கேணியில் உள்ள சுங்குராமசெட்டித் தெருவில் நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார்.
அப்போது மகாகவி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
இருவரும் நண்பர்களாகின்றனர். 1907ல் இருவரும் சேர்ந்து சூரத் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
1912ம் ஆண்டு சிறையிலிருந்து வ.உ.சி விடுதலையானதும் அவரின் வாழ்க்கை சென்னையில்தான் தொடங்குகிறது. 1913ல் சென்னைக்கு வந்தவர் 1920ம் ஆண்டு வரை வசிக்கிறார்.
முதலில் சென்னை சிந்தாதரிப்பேட்டை அருணாச்சல நாயக்கன் தெருவிலும், 1915ல் மயிலாப்பூர் முண்டகக் கன்னியம்மன் கோயில் அருகேயுள்ள பரிபூரண விநாயகர் கோயில் தெருவிலும், 1916ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை பெரம்பூர் கந்தப்பிள்ளைத் தெருவிலும் வசிக்கிறார்.
இந்த கந்தப்பிள்ளைத் தெரு இன்று கந்தன் தெருவாக உள்ளது. இதனருகே வ.உ.சியின் சிலையும் இருக்கிறது. இந்த வீட்டுக்கு 1919ம் ஆண்டு பாரதியாரும், ஒரு குள்ளச்சாமியாரும் வந்த கதையை ‘நான் கண்ட பாரதி’ நூலில் வ.உ.சி எழுதியுள்ளார்.
1915ல் மயிலாப்பூர் பரிபூரண விநாயகர் தெருவில் வசித்தபோது காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதுகிறார். இதிலிருந்தே அவர் அந்தத் தெருவில் வசித்தது தெரிய வருகிறது.
தொடர்ந்து 1922ல் கோவில்பட்டியிலும், பிறகு தூத்துக்குடியிலும் வசிக்கிறார். 1936ம் ஆண்டு தூத்துக்குடியில் மரணம் எய்தினார்.
தமிழகத்தில் பாமர மக்களிடமும் சுதேசிய உணர்வையும், சுதந்திர எழுச்சியையும் முதன்முதலில் விதைத்தவர் வ.உ.சியே என்பது குறிப்பிடத்தக்கது.
– கவின்