இந்தியாவின் தோல்விக்குக் காரணம் கம்பீரா?

கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் மேலும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது இந்தியா.

இம்முறை சேதம் மிக அதிகம். கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 15 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தியிருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

வெற்றி பெறத் தேவையான எளிய இலக்கான 124 ரன்களைக்கூட உள்ளூரில் எடுக்க முடியாமல் இந்தியா பெற்ற தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரு காலத்தில் தாய் மண்ணில் வெல்ல முடியாத அணியாக இருந்த இந்தியா, இப்போது தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதற்கான முக்கிய காரணமாக கம்பீரைத்தான் சொல்லவேண்டி இருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. இந்திய அணி டெஸ்ட் உலகில் வெல்ல முடியாத அணியாக இருந்தது.

அதிலும் உள்ளூர் போட்டிகளில் கில்லி போல் ஒவ்வொரு போட்டியையும் சொல்லி வைத்துக்கொண்டு அடித்தார்கள்.

அதற்கு முக்கிய காரணம் ராகுல் டிராவிட் அடிப்படையில் ஒரு டெஸ்ட் வீரராக இருந்ததுதான்.

விளையாட்டு வீரர்களுக்கு ஆக்ரோஷம் மட்டும் போதாது, மோசமான கட்டங்களில் பொறுமையும் தேவை என்று கற்றுக்கொடுத்தார் ட்ராவிட்.

ஆனால், கம்பீரின் அணுகுமுறை அதற்கு முற்றிலும் வேறாக உள்ளது.

அடிப்படையில் கவுதம் கம்பீர் ஒரு டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிந்தனைகளை கொண்ட வீரர்.

அதனால் அவருக்கு தெரிந்ததெல்லாம் அதிரடியான பேட்டிங்தான். அதையே வீரர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்க, டெஸ்ட் போட்டியில் அது பயன்படாமல் போயிருக்கிறது.

இந்திய வீரர்கள் நேற்று டொக் வைத்து ஆடியிருந்தாலே நிதானமாக 124 ரன்களை எட்டியிருக்கலாம். ஆனால் கம்பீர் கற்றுக்கொடுத்த அதிரடியால் அவசரமாக பேட்டிங் செய்து விக்கெட்களைக் இழந்தனர்.

கம்பீரின் இந்த வழிகாட்டுதல், இந்தியாவில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என மண்ணைக் கவ்வியது இந்திய அணி. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரிலும் 3-1 என தோற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் கஷ்டப்பட்டு டிரா செய்த இந்திய அணி, வலு குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் வெற்றி பெற்றது.

இப்போது மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் உள்ளூரிலேயே முதல் அடியை வாங்கியிருக்கிறது.

கம்பீரின் முக்கிய குணங்களில் ஒன்று தான் நினைத்தபடி எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று நினைப்பது.

அதற்கு தடையாக இருக்கும் என்று கருதியே மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், முகமது ஷமி ஆகியோரை ஓரம்கட்டத் தொடங்கினார்.

எந்த நட்சத்திர வீரரும் இல்லாமல் அணியை வழிநடத்தி வெற்றிகளைக் குவித்து பெயர் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் இப்போது களத்தில் மூத்த வீரர்களின் அனுபவம் இல்லாமல் இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருக்கிறது.

மூத்த வீரர்கள் விஷயத்தில்தான் இப்படியென்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு (2024) ஐபிஎல் கோப்பையை வென்ற பெருமையைத் தன்னோடு பங்குபோட வந்ததால், ஸ்ரேயஸ் ஐயரையும் ஓரம்கட்டினார்.

அதனால் முக்கியமான கொல்கத்தா போட்டியில், டெஸ்ட் போட்டிகளில் அனுபவமே இல்லாத வாஷிங்டன் சுந்தர் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்க நேர்ந்தது.

கொல்கத்தா மைதானத்தில் உள்ள பிட்சை, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சாக மாற்றச் சொன்னதே கம்பீர்தான்.

இதை சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார். கம்பீரும் அதை நேற்று போட்டி முடிந்தபின் ஒப்புக்கொண்டார்.

கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் போன்ற மிகச்சிறந்த சுழற்பந்து ஜாம்பவான்கள் இருந்தவரை இப்படி பிட்ச்களை தயாரித்ததில் தவறில்லை.

ஆனால், இப்போது இந்தியாவில் சுழற்பந்து வீச்சு பலவீனமாக இருக்கிறது. பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியும் சுழற்பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் கம்பீர் ஏன் சுழற்பந்து வீச்சுக்கான பிட்சைக் கேட்டார் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதால் இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா.

இந்தச் சூழல் மாற, டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மீண்டும் தலைதூக்க டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் கம்பீரை பயிற்சியாளராக வைத்துக் கொண்டு, டெஸ்ட் போட்டிகளுக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் போன்ற மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களை பயிற்சியாளர்களாக முயற்சித்து பார்க்கலாம்.

இல்லாவிட்டால் இந்த ஆண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை நமக்கு கிடைக்காது.

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment