தமிழகத்தில் தற்போது வெயிலும் மழையும் கலந்து கட்டி அடிப்பதால் திரும்பும் இடங்களிலெல்லாம் இருமல் சத்தம் கேட்கிறது.
மருத்துவமனைகளில் காய்ச்சலுடனும் இருமல் மற்றும் சுவாசத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
மாறிவரும் தட்பவெப்ப நிலையை நம் உடம்பு சரிவர ஏற்றுக்கொள்ள முரண்டு பிடிப்பதன் அடையாளங்களாக இவற்றைச் சொல்லலாம்.
அதிலும் சிறு குழந்தைகள் படாதபாடு படுகிறார்கள். அந்த இருமலை அடக்குவதற்காக மருந்துக்கடைகளில் கண்ட கண்ட இருமல் மருந்துகளையெல்லாம் வாங்கி வலுக் கட்டாயமாக குழந்தைகளை குடிக்க வைக்கிறார்கள்.
பெற்றோர்கள் இப்படி இருமலுக்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகளில், அண்மையில் 15 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.
இன்னும் மருந்து விநியோகிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாதிப்புகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு வெளியாகவில்லை.
அதேசமயம், தமிழகத்தில் பாதிப்புக்கான இருமல் மருந்தைத் தயாரித்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
இன்னும் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்கின்ற விரிவான விவரங்கள் தெரியவரவில்லை.
மருந்து கண்காணிப்பாளர்களின் வீடுகளில் எல்லாம் ரெய்டுகள் நடந்ததாகவும், செய்திகள் வெளி வந்திருக்கின்றன.
அந்த அளவிற்கு பிஞ்சுக் குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? எதை நம்பி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இருமலை சரி பண்ணும் மருந்துகளை கொடுக்கிறார்கள்?
குழந்தைகள் நலம் பெற வேண்டும் என்பதைத் தானே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அந்த நடவடிக்கையை சீர்குலைத்து உயிர் வாங்கும் அளவிற்கு பாதிப்பை உருவாக்கியவர்களை யார் தண்டிப்பது?
சுகாதார இலாகாவில் பொறுப்பில் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கு எல்லாம் இதில் பொறுப்பில்லையா?
மழைப் பொழிவு தொடர்ந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், மருத்துவர்களை கலந்து ஆலோசிக்காமல், இருமல் மருந்துகளை வாங்கிச் சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பதை பெற்றோர்கள் நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது. சமூகத்தின் தேவையாகவும் இருக்கிறது.
அதனால் தான் சொல்கிறோம் இருமல் வந்தால் உஷாராக இருங்கள்!
– தனலட்சுமி. ஆர்