பெருஞ்செலவுடன் நம்மைக் கடக்கும் தீபாவளி!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தீபாவளி என்றாலே களை கட்டும் கல்லாக்கள்.

தீபாவளிப் பண்டிகை என்றதும் சுமார் ஒரு மாதத்திற்கு அதற்கான பரபரப்புத் துவங்கிவிடுகிறது.

விதவிதமான துணிக்கடை விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாளிதழ் மற்றும் வார இதழ்களிலும் அலை அடிக்கின்றன. 

என்னதான் ஒரு பவுன் நகையின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்தாலும் தொலைக்காட்சிகளில், நகைக்கடை அதிபர்களே வித்தியாசமான தோற்றங்களில் புன்சிரிப்புடன் செய்கூலி இல்லை என்று நகை வாங்குவதற்கான தூண்டுதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நகைக்கடை, துணிக்கடை, கார், மோட்டார் என்று எல்லாவற்றிலுமே தீபாவளிக் கொண்டாட்டம் துவங்கிவிடுகிறது.

பற்றாக்குறைக்கு சினிமாக் கொண்டாட்டத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

தீபாவளிக்கென்றே தனியாக சில சிறப்புத் திரைப்படங்கள் வெளியாகி ரசிகப் பெருமக்களை குதூகலப்படுத்துகின்றன.

தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ரயில், பேருந்து, விமானம் என்று சகல போக்குவரத்துகள் சிறப்பு விலையேற்றத்துடன் ஜோராக நடக்கும்போது, பேருந்துக் கட்டணம் கூட இரு மடங்குக்கு மேல் ஏறும்போது ஒப்புக்குச் சப்பாணி போல் அரசு அதிகாரிகள் வழக்கம்போல நடவடிக்கை எடுக்காமல், எச்சரிக்கை மட்டும் விடுக்கிறார்கள். 

இவர்களே இப்படி இருக்கும்போது விதவிதமான ஸ்வீட்ஸ் தயாரிப்பாளர்களும் ஓட்டல் உரிமையாளர்களும் சும்மா இருப்பார்களா?

அவர்களும் நாக்கின் ருசிக்குத் தீனிபோட்டு இதுவரை சர்க்கரை வியாதிக்குள் விழாமல் தப்பித்தவர்களைக் கூட இழுத்துப் பிடித்து டயாபடிஸ்-காரர்களாக்கி விடுகிறார்கள்.

தீபாவளி முடிந்து தீபாவளி விருந்துச் சாப்பாடு செரிமானம் ஆகிறதோ இல்லையோ, தீபாவளி முடிந்ததும் நம்ம வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது  அவர்களுடைய முகம் போகிறப் போக்கை பார்க்கும்போது, தனிச் சோகத்துடன் இருப்பார்கள்.

மதுப்பிரியர்கள் தீபாவளி விடுமுறை நாட்கள் மொடாக் குடி குடித்து விசேஷமாக மல்லாந்து இருப்பார்கள்.

பாலித்தீன் பைக்குள் தீனியை அடைக்கிற மாதிரி பலர் உடலுக்குள் கண்டதையும் அடைத்து அவை செரிமானம் ஆவதற்கு நாட்டு மருந்துக் கடைகளில் சிறப்பு லேகியத்தை வாங்கி முழுங்கித் தீர்ப்பார்கள்.

சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும், நாடு கடந்தும் சுற்றுச் சூழலை தங்கள் பங்குக்குக் கெடுத்து மாநகராட்சி ஊழியர்கள் நிறைய குப்பைகளை அள்ளும் சூழலலையும் சேர்த்து உருவாக்கும்.

வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பல பணிகளை தங்கள் உழைப்பால் நிரப்பிக் கொண்டிருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் தீபாவளியையொட்டி கையில் சேமித்த சம்பளத்துடனோ, முகத்தில் பூரிப்புடனோ தங்களது மாநிலங்களுக்கு ரயில் ஏறுவார்கள்.

இந்தியா முழுக்க என்னதான் குடும்ப பட்ஜெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கடன் வாங்கியாவது பல குடும்பங்கள் தீபாவளியைக் கொண்டாடித் தீர்ப்பதற்குள் பல ஆயிரம் கோடிகள் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை புள்ளி விவரத்துடன் தொலைக்காட்சிகளில், பொருளாதார நிபுணர்கள் சாவகாசமாக அலசி காயப்போடுவார்கள்.

நரகாசூரன் இந்தியாவில் எப்படியெல்லாம் பெருஞ்செலவுடன் தொடர்புப்படுத்தி நினைக்கப்படுகிறார்!

– லியோ

 
Comments (0)
Add Comment