வசந்த மாளிகையில் நடிக்க மறுத்த சிவாஜி!

சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் பாலமுருகன். அவரது மகன் பூபதி ராஜா சிவாஜி கணேசனைப் பற்றிய சில நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்:

“என் அப்பாவின் வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்து முதலில் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் ‘எங்க ஊர் ராஜா’.

என் அப்பா தன் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நபரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை எழுதினார். இப்படத்தில் அப்பா – மகன் என 2 வேடங்களில் சிவாஜி நடித்தார். இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ரகுநாத சேதுபதி.

இப்படத்தில் ரகுநாத சேதுபதி ஒரு கட்டத்தில் வீட்டை இழந்துவிடுவார். மீண்டும் அந்த வீட்டை மீட்பேன் என்று ரகுநாத சேதுபதி சபதம் செய்வார்.

அந்தக் காட்சியில் “என் வீட்டை மீட்கும் வரை என் பெயர் ரகுநாத சேதுபதி தேவர் இல்லை” என்று என் அப்பா வசனம் எழுதியிருந்தார்.

ஆனால், அந்த வசனத்தில் உள்ள ‘தேவர்’ என்ற ஜாதிப் பெயரைச் சொல்ல சிவாஜி தயங்கினார்.

இந்த வசனத்தில் ஜாதிப் பெயர் வருகிறதே என்று அப்பாவிடம் சிவாஜி சொல்ல, அதை சிவாஜி பேசும் வசனமாக பார்க்காமல் அந்த கதாபாத்திரம் பேசும் வசனமாக பாருங்கள் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

“அது அந்த கதாபாத்திரத்தின் தன்மை. இதற்கு முன் நீங்கள் பிரஸ்டீஜ் பத்மநாபன் ஐயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். அதுபோல் இந்தப் படத்தில் நீங்கள் ரகுநாத சேதுபதி தேவராக நடிக்கிறீர்கள். அதனால் அந்த வசனம் தவறில்லை” என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகும் அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி ‘ரகுநாத சேதுபதி சேர்வை’ என்று சிவாஜி பேசி நடித்தார்.

தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்து வெளியான பிரேம் நகர் என்ற படத்தைத் தழுவித்தான் தமிழில் வசந்த மாளிகை திரைப்படம் எடுக்கப்பட்டது.

இப்படத்தின் வசனங்களும், சிவாஜியின் நடிப்பும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தன. சிவாஜி நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக வசந்த மாளிகை அமைந்தது.

ஆனால், இப்படத்தை தமிழில் எடுப்பதாகச் சொன்னதும், அதற்கு வசனம் எழுத என் அப்பா பாலமுருகன் மறுத்துள்ளார். அதேபோல் இப்படத்தில் நடிக்க சிவாஜி கணேசனும் மறுத்துள்ளர்.

இந்தப் படத்தின் கதை, ஒரு வரிக்குள் சுருக்கமாக இருந்ததே இதற்கு காரணம். இதில் தன் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று சிவாஜி நினைத்தார்.

என் அப்பாவும் சிவாஜியும் இணைந்து அதுவரை எடுத்த ராஜபார்ட் ரங்கதுரை, எங்க ஊர் ராஜா, பட்டிக்காடா பட்டணமா படங்களைப் போல் இந்தப் படத்தில் வலுவான கதை இல்லை என்று நினைத்துள்ளார்.

அப்போது இயக்குநர் பி.பிரகாஷ்ராவிடம் இதைப்பற்றி பாலமுருகன் கூறியுள்ளார்.

அதற்கு அவர், “இது வெறும் கதையல்ல இரண்டு இதயங்களின் சந்திப்பு.

அந்த இதயங்களின் முரண்பாடுகள் மற்றும் அதை அந்த இதயங்கள் எப்படி எதிர்கொண்டன என்பதுதான் இந்த படத்தின் கதை” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் சொன்னதை அப்படியே சிவாஜியிடம் அப்பா சொல்ல, அவரும் வசந்த மாளிகை படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சிவாஜிக்கு தென் மாவட்டங்களில் ரசிகர்கள் அதிகரித்தனர்.” என்று பூபதிராஜா கூறினார்.

‘எங்க ஊர் ராஜா’ படத்துக்குப் பிறகு பட்டிக்காடா பட்டணமா, முதல் மரியாதை, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் சிவாஜி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment