நூல் அறிமுகம்:
புத்த மத வரலாற்றில் பௌத்த ஸ்தூபிகள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. புத்தர் தாம் வாழும் காலத்தில் தனக்கு சிலை வைப்பதை அவர் விரும்பவில்லை, சிலைகள் வைக்கப்படுமேயானால் உருவமே முன் நின்று அவர் போதித்த தத்துவங்கள் பின்னணியில் சென்று விடும் என்று அவர் நினைத்ததால் அதை தொடக்கத்தில் நிராகரித்தார்.
ஆனால், காலப்போக்கில் புத்தரின் தத்துவங்களை வாழ்வோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் அவர் மீது கொண்ட அதீத அன்பினால் அவருக்கு சிலை வைத்து வணங்க தொடங்க அது மகாயான பௌத்தத்தில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டது.
உலகின் பல்வேறு நாடுகளில் மகாயான பௌத்தமே இன்றும் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது.
எனவே அவரோடு கூட புத்தரின் தத்துவங்களோடு கூட புத்தரின் ஏற்றுக் கொள்ளப்பட்ட உருவமும் வழிபாட்டில் நிலைத்து விட்டது. இது மகாயான பெளத்தத்திற்கு மட்டுமின்றி தேரவாதம் பெளத்தத்திற்கும் பொருந்தும்.
இலங்கையில் எங்கெங்கு காணினும் புத்தரின் சிலைகளை அதிகமாக இருப்பதை நாம் காண முடியும். ஒவ்வொரு புத்தர் திருக்கோயிலும் மூன்று நிலைகள் எப்பொழுதும் காணப்படும்.
ஒன்று அரசமரம், இரண்டாவது ஸ்தூபம், மூன்றாவது சைத்தியம் என்று சொல்லுகின்ற கோயில் இந்த மூன்று நிலைகள் தான் பௌத்தத்திற்கான பௌத்தத்தில் வணங்கக் கூடிய இடங்களாக கருதப்படுகின்றன.
அரசமரம் என்று சொல்லப்படுகின்ற கல்லால மரம் இந்தியா முழுவதும் காணப்படுகின்ற ஒரு மரமாகும்.
அதுமட்டுமின்றி பௌத்தம் பரவிய நாடுகளிலும் புத்தரின் நினைவாக இம்மரம் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது. எனவே இந்த அரசமரம் வணக்கத்திற்குரிய மதமாக பெளத்தர்களாக பார்க்கப்படுகிறது.
ஸ்தூபம் என்பது புத்தரின் நினைவை வைத்து வணங்குகின்ற ஒரு இடம். அதாவது புத்தர் மறைந்த பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டு எட்டு பாகங்களாக அந்த எச்சங்கள் பிரிக்கப்பட்டு பல எட்டு பாகங்கள் இந்தியாவின் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட ஒரு இடத்தில் வைக்கப்பட்டன. அவையே ஸ்தூபங்களாக பின்னர் நிலைபெற்று நின்று விட்டன.
அது மட்டுமின்றி அறகத்தின் (அறஹந்தர் என்பது ‘மோகங்களை முற்றிலும் வேரறுத்து முழுஞானம் பெற்று நிர்வாண நிலையை அடைந்தவர் என்று பொருள்’) நிலை அறிந்த முன்னணி பிக்குமார்கள் இறந்த பிறகு அவர்களது உடலும் எரிக்கப்பட்டு அவர்களது எச்சமும் ஸ்தூபங்களில் வைக்கப்படுகின்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வந்ததை வரலாற்று நிகழ்வுகளில் பார்க்கின்றோம்.
தற்காலத்தில் கிழக்கு ஆசிய நாடுகளில் புத்த மத கோயில்களில் பெளத்தர்களாக இருப்பவர்கள் மறைந்த பிறகு அவர்களது உடல் எரிக்கப்பட்டு அவர்களது சாம்பல் சேகரிக்கப்பட்டு ஒரு கண்ணாடி குடுவையில் வைக்கப்பட்டு அவை புத்தரின் புத்த கோவில்களில் இன்றைக்கும் பாதுகாப்பாக வைக்கப் படுவதை பார்க்கிறோம்.
எனவே சாம்பல் என்பது வணங்கக் கூடிய பொருளாக இல்லாமல் அது பாதுகாக்கக் கூடிய பொருளாக நினைவு போற்றுகின்ற ஒரு எச்சமாக பௌத்தத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த பின்னணியில் பார்க்கும்போது இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான புத்த ஸ்தூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.
பௌத்தத்தின் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்ட 6-ம் நூற்றாண்டில் இருந்து 12-ம் நூற்றாண்டு வரையில் ஏராளமான பெளத்த ஸ்தூபங்கள் இடிக்கப்பட்டு தரையோடு தரைமட்டமாக்கப்பட்டன.
அவற்றில் குறிப்பாக புத்தரின் தாதுக்கள் அடங்கிய ஸ்தூபங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்து இருக்கின்றார்கள்.
அவை மீட்கப்பட்டு புனரமைக்கப்பட்டு தற்போதைய வடிவத்தில் இந்தியாவின் பல இடங்களில் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு ஸ்தூபங்களுக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட ஸ்தூபங்களின் கற்களில் இருந்து எழுந்து தன்னைத்தானே எழுதிக் கொண்ட ஒரு வரலாறாக இல்லாமல் வரலாற்று அறிஞர்களின் பெருமுயற்சியால் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்று கருவூலங்களாக இன்றைக்கு இருக்கின்றன.
தமிழ்நாடு பெளத்தர்கள் சங்கப்பேரவை தொடங்கப்படுவதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் நானும் எனது இணையர் டாக்டர் சுபாஷினியும் ஒரிஷா மாநிலத்தில் புவனேஸ்வருக்கு அருகில் இருக்கக்கூடிய பல்வேறு புத்த சின்னங்களுக்கு சென்று பார்வையிட்டோம்.
அப்போது புஷ்பகிரி என்கின்ற இடத்தில் மிக பரந்த அளவில் இருந்த ஒரு மாபெரும் பௌத்த பல்கலைக்கழகத்தின் உச்சியில் ஒரு ஸ்தூபம் இருப்பதை நேரடியாக பார்த்தோம். அங்கு ஸ்தூபத்தின் உச்சியில் ஒரு கற்பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அப்பெட்டியை பிரித்து பார்க்கும்பொழுது அதற்குள்ளே இரும்பு பெட்டியும், அதற்குள்ளே செப்பு பெட்டியும், அதற்குள்ளே ஒரு பித்தளை பெட்டியும், அதற்குள்ளே ஒரு வெள்ளி பெட்டியும், அதற்குள்ளே ஒரு தங்கப்பெட்டியும், அந்த தங்கப்பெட்டிக்குள்ளே வைர, வைடூரியங்களோடு சில தாதுக்கள் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.
இப்படி பல்வேறு கட்ட பாதுகாப்புகளோடு பாதுகாக்கப்பட்ட அந்த தாது புத்தரின் தாதுவாக இருக்கலாம் என்று நம்பப்பட்டு அது இன்றைக்கும் புஷ்பகிரியில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
நாங்கள் போன நேரத்தில் அந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்ததால் எங்களால் அதை பார்க்க முடியவில்லை.
எனவே அந்த பல்கலைக்கழகத்தையும், அந்த ஸ்தூபத்தையும் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். வருகின்ற வழியில் அந்த ஸ்தூபத்தை பற்றின நினைவுகள் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது.
உயர்ந்த நிலையில் தம்மத்தை போதித்த மாபெரும் பகவன் புத்தரின் போதனைகளை பாதுகாக்கின்ற மக்கள் எவ்வளவு பேரன்போடு அவரது தாதுக்களைப் பாதுகாத்தார்கள் என்பதை நினைத்து வியப்பாக இருந்தது.
அந்த வியப்பினூடே தான் தமிழகத்திற்கு திரும்பி தமிழ்நாடு பெளத்தர்கள் சங்கப்பேரவையை நாங்கள் தொடங்கினோம்.
இந்த பின்னணியில் பார்த்திபன் அவர்கள் தொகுத்திருக்கும் இந்த புத்தகத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பெளத்த ஸ்தூபாக்கள் பற்றின வரலாற்றுக் குறிப்புகளும் அவை மீட்டெடுக்கப்பட்ட விவரங்களும் அவற்றிற்குள் என்ன இருந்தன, என்ன இல்லை என்பதை பற்றின தகவல்களும் தொகுக்கப்பட்டு மிக நேர்த்தியாக நூலாக வெளிவந்திருக்கின்றது.
வழக்கமாக கோவி.பார்த்திபன் அவர்கள் நாக்பூருக்கு செல்லும்பொழுது நாக்பூர் நினைவு மலரை வெளியிடுவது வழக்கம்.
ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு அது தொடர்பான ஆவணங்களை திரட்டி புகைப்படங்களைத் திரட்டி வெளியிடும் அவரது வழக்கத்தை நான் தொடர்ந்து பாராட்டி வருகிறேன்.
இந்த ஸ்தூபாக்கள் பற்றிய தொகுப்பும் அந்த வரிசையில் இணைகிறது. அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் சொல்லும் பொழுது இவை மலராக இல்லாமல் முழுவதும் தொகுக்கப்பட்ட ஒரு தனி நூலாகவும் வெளியிடவேண்டும் என்று நான் அவரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
அதை அவர் நிறைவேற்றுவதாக சொல்லி இருக்கின்றார். இந்த தொகுப்புகள் முழுமையாக வெளிவரும்.
அதனால் பௌத்தர்களிடையே தமது மதத்தின் புண்ணிய தலங்கள் என்று சொல்லப்படுகின்ற புனித தலங்கள் அல்லது நினைவு சின்னங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் அவற்றை நோக்கி அவர்கள் பயணப்படுவதற்கும் பேருதவியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பௌத்தம் மறுமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் புத்தகம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெளத்த மறுமலர்ச்சிக்கான ஊக்கமாகவும் இது அமைகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்புத்தகத்தை தொகுத்த தோழர் கோவி.பார்த்திபன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி வாழ்த்துக்கள். புத்தகத்தை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
ஜெய்பீம்! ஜெய்புத்தம்!
- முனைவர் கௌதம சன்னா,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை.
******
பௌத்தம் எழுகிறது!
தீட்சாபூமி சிறப்பு மலர்-2025
மும்மணி பதிப்பகம் வெளியீடு