உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்!

தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாற்று முன்னெடுப்புகளை நிகழ்த்திய தமிழவன், ‘உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்’ என்ற பெயரில் தன்வரலாற்று நூலொன்றை எழுதியுள்ளார்.

உலக அளவில் தன்வரலாற்று நூல்களுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது.

உலகத் தலைவர்கள், இலக்கிய ஆளுமைகள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், தத்துவ ஆசிரியர்கள், வணிக வெற்றியாளர்கள் எனப் பலர் தங்களது வாழ்க்கையை நூல்களாக எழுதி, பெருந்திரளான வாசகர்களால் வாசிக்கப்பட்டும் வருகின்றன.

ஒரு தன்வரலாற்று நூல் இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பதற்கு எந்தவொரு வரையறையையும் உருவாக்க முடியாது. ஏனெனில், தன்வரலாறும் புனைவெழுத்து போன்று கட்டற்ற ஓர் எழுத்து வடிவம் தான்.

தன்னை எழுதுதல் தன்வரலாறாக இருக்க முடியாது என்று கூறும் தமிழவனின் இந்த நூலைக் கொண்டு அவரது பிறந்த தேதியைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சமூகம், அரசியல், கலை, பண்பாடு, விழுமியங்கள் என அனைத்தும் தன்வரலாற்று நூலுக்குள் இடம்பெற வேண்டும்.

‘நான்’ என்கிற தன்னிலையை வெளியே நிறுத்திவிட்டு எழுதும் போதுதான், அது சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வரலாறாக இருக்கும்.

நாகர்கோவிலில் பிறந்த ஒரு சிறுவன், இந்தப் பரந்த உலகத்தை எதிர்கொண்ட விதத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார்.

அந்தச் சிறுவனின் வழியாக ஒரு சமூகத்தை எழுதிப் பார்த்திருக்கிறார். தமிழவனின் தனி வாழ்க்கையை விரிவாக உள்வாங்கிக்கொள்ள இந்த நூல் உதவாது.

மாறாக, தமிழவனின் இலக்கியச் செயல்பாடுகளை உள்வாங்கிக் கொள்ளவும் தமிழவன் வழியாகச் செயல்பட்ட இலக்கிய உலகத்தைப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடும்.

ஆங்காங்கே பேச்சோடு பேச்சாக அவரது புனைவுகளின் அக உலக இயக்கத்தையும் திறந்துக் காட்டியிருக்கிறார்.

தமிழவன், தன் வாழ்க்கையை உதிரி உதிரி நிகழ்வுகளாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதனால்தான் இந்தத் தன்வரலாறு ஓர் புனைவுக்குரிய சுவாரசியத்தைத் தருகிறது. பிற தன்வரலாற்று நூல்களில் இருந்து தனித்தும் தெரிகிறது.

அதேநேரத்தில் இந்நூல்தான் தன் வரலாற்று நூலுக்கு ஒரு முன்மாதிரி என்று கூறமுடியாது.

கவிதை, நாவல் போன்ற வடிவங் களுக்குத் தேவைப்படும் தீவிரமான மொழிப் பிரக்ஞை தன் வரலாற்றுக்கு அவசியமில்லை.

ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், பாலியல் தொழிலாளிகள், திருநர்கள் என சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பல தரப்பினர் இன்று தங்களது வலிகளையும் துயரங்களையும் வரலாறுகளாக மாற்றி வருகின்றனர்.

வெற்றியாளர்களின் வரலாறுகளைவிட ஒடுக்கப்பட் டவர்களின் வரலாறுகள் சமீப காலங்களில் அதிக அளவில் எழுதப்பட்டு வருகின்றன.

தலித் இலக்கியத்தின் ஆணிவேராக இருப்பது இத்தகைய தன் வரலாற்று நூல்கள்தாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பாரதி, வ.உ.சி., உ.வே.சா., திரு.வி.க., நாமக்கல் கவிஞர், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் ஏற்கனவே தன்வரலாறுகளை எழுதியுள்ளனர். தமிழவனும் அந்த வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

எனினும், தன்னை முன்னிறுத்தாமல் தன் எழுத்துக்களின் வழியாக ஒரு கால கட்டத்தின் சமூக மற்றும் இலக்கிய வரலாற்றைக் கட்டியமைக்க முயன்றிருக்கிறார்.

***

தமிழவன் 
உலகச் சிந்தனையில் கிளை பரப்பிய ஒரு மரம்
(தன் வரலாறு)
யாவரும் பப்ளிஷர்ஸ் : ரூ. 450/-
தொடர்புக்கு: 90424 61472

– சுப்பிரமணி இரமேஷ்

நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment