நூறாண்டுகளுக்கு முந்தைய கலை, இலக்கியம், சினிமாவை அறிய வேண்டுமா?

நூல் அறிமுகம்:

சினிமா, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் தடம் பதித்து வருபவர் விட்டல்ராவ்.

சென்னை மூர் மார்க்கெட்டின் சார்சானிக் பாணியிலான பழைய கட்டிட வளாகத்தில் பழைய புத்தகங்களை அவர் தேடிக் கண்டெடுத்த அனுபவங்களை ஓர் அழகிய நூலாகவே எழுதிவிட்டார்.

அதிலுள்ள நிரந்தரக் கடைகளும் வராண்டா கடைகளும் இருகரம் கூப்பி வரவேற்றதோடு, ரசனைக்குத் தக்க வரவுகள் வந்தால் எடுத் துவைத்திருந்து தரும் அளவுக்கு கடைக்காரர்களுடன் இவர் நெருக்கமாகிவிட்டார்.

மவுண்ட் ரோடு தர்க்கா மரத்தடி புத்தகக் கடை, பைகி ராப்ட்ஸ் சாலையின் பழைய புத்தகக் கடைகள், லஸ் சர்ச் ரோடு ஆழ்வார் புத்தகக் கடை, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தவெளி புத்தகக் கடை என இவர் புத்தகத் தேடல் நீண்டு செல்கிறது.

இந்நூலில் புத்தகம் தேடிய அனுபவங்களுடன், புத்தகம் விற்பவர்களின் வாழ்க்கை மாற்றங்களையும் அறிந்துகொள்கிறோம்.

ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகள், அதில் இடம்பெற்ற ஓவியங்கள், எழுத்தாளர்களின் பின்புலம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறோம்.

வாசகர்களைக் கவர்ந்த படைப்பாளர்களுக்கும் நாவலுக்கும் இயக்குநருக்குமான தொடர்பு, இயக்குநருக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கும் சென்னைத் தியேட்டர்களுக்குமான தொடர்பு என சங்கிலியாக கோர்த்துச் சொல்கையில், அன்றைய சென்னையின் மங்கலான சித்திரமும் கிடைத்துவிடுகிறது.

பழைய விஷயங்கள் என ஒதுக்கிவிடாமல் சர்வதேசப் பத்திரிகைகள் வழியே கலை, இலக்கியம் அரசியல் கடந்துவந்த பாதையின் வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் அரிய தகவல்களின் புதையலாக அமைந்துள்ளது.

பால்நிலவன்

**************

நூல்: வாழ்வின் சில உன்னதங்கள்
ஆசிரியர்: விட்டல்ராவ்
ஜெய்ரிகி பதிப்பகம்
விலை: ரூ. 429/-
தொடர்புக்கு : 864342772

Comments (0)
Add Comment