“பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே…” என்று ‘ரத்தத் திலகம்’ படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பசுமையான வரிகளைப் போலத்தான் இருந்திருக்கிறது கல்லூரியில் படித்த பலரின் நினைவுகளும்.
வரவில்லாமல் செலவு செய்து உற்சாகத்துடனும், நட்புணர்வுடனும் வாழ்க்கைக்கு நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதில், பள்ளிப் பருவத்தைப் போலவே, கல்லூரிக் காலங்களும் உற்சாகமானவை. நினைவில் என்றும் ததும்பக் கூடியவை.
இப்படிப் பல முக்கிய பிரமுகர்களின் கல்லூரிக் காலத்தைப் பற்றிய தொடரை ‘குமுதம்’ வார இதழில் துவக்கியபோது, நான் எழுதிய கட்டுரையின் தொகுப்புதான் ‘கல்லூரிக் காலங்கள்’ என்கிற இந்நூல்.
இந்தத் தொடருக்காக கல்லூரி நினைவுகளை மீட்பதற்காக சிலரை அவர்கள் படித்தக் கல்லூரிக்கே மறுபடியும் அழைத்துப் போன தருணங்கள் ரசமானவை. சில நெகிழ்வானவை.
தற்போதைய எம்.பி.யான கவிஞர் கனிமொழியை அவர் படித்த எத்திராஜ் கல்லூரிக்கும், தமிழருவி மணியனை அவர் படித்த மாநிலக் கல்லூரிக்கும்,
இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். தணிகாச்சலத்தை அவர் படித்த சென்னை மருத்துவக் கல்லூரிக்கும், திரைக்கலைஞர் திரு.சிவகுமாரை அவர் படித்த நுண்கலை ஓவியக் கல்லூரிக்கும் அழைத்துச் சென்ற அனுபவங்கள் ரசனைக்குரியவை.
திரு.சாலமன் பாப்பையாவும், திரு.வைகோவும், திரு.வெற்றி மாறனும், மறைந்த நடிகர் விவேக்கும் தங்களுடைய கல்லூரி அனுபவங்களை விவரித்தபோது, அப்போது அவர்களுடைய முகங்களில் பிரதிபலித்த உணர்வு இளமைத் துடிப்பு மிக்கதாகவும், புன்னகை படர்ந்ததாகவும் மாறி இருந்ததை மறக்க முடியாது.
இதைப் படிக்கிற வாசகர்களுக்கும் அவரவர் கடந்து வந்த கல்லூரிக் காலம் நினைவுக்கு வந்தால், அதுவே இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்.
பரிதி பதிப்பகம் சார்பில் உருவாகியுள்ள இந்த நூல், ஜோலார்பேட்டையில் நாளை (14.09.2025) வெளியிடப்பட உள்ளது.
தொடர்புக்கு – 72006 93200