ஆகஸ்ட் 26 – பெண்கள் சமத்துவ தினம்
‘லேடீஸுக்குன்னு ப்ரீ பஸ் ட்ராவல் அறிவிச்சாலும் அறிவிச்சாங்க, பஸ்ல கூட்டம் அதிகமாயிடுச்சு’ என்பது போன்ற பேச்சுகளையோ, ‘லேடீஸ் ஸ்பெஷல்னு மட்டும் ட்ரெய்ன் விடுறது நியாயமா’ என்பது போன்ற அக்கபோர்களையோ, அவ்வப்போது சில ஆண்கள் கூட்டம் அள்ளிவிடுவதைப் பலர் கடந்து வந்திருப்போம்.
பெண்கள் என்றாலே கீழானவர்கள் தான் என்கிற தொனி, அந்தப் பேச்சுகளின் அடிநாதமாக இருக்கும்.
அலுவல் நேரமாக அறியப்படும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை எதிர்ப்படும் மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருக்கிற பெருநகரங்களிலேயே இதுதான் நிலைமை.
அப்படியானால், இதர நிலப்பரப்புகளில் பெண்களின் சுயமரியாதையும் சுதந்திரமும் எந்தளவுக்கு இருக்கும் என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடியும்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் சாதி, மதம், இனம் உட்படப் பல பிரிவினைகளை மக்கள் மனங்களில் இருந்து அகற்றுகிற செயல்முறை ஓரளவுக்குச் சிறப்பாகவே நடந்து வந்தது.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளைக் கூர்ந்து நோக்கினால் அதில் பின்னடைவை உணர முடிகிறது. அதுவும் மெல்லத் துளிர்த்து விருட்சமாக விஸ்வரூபமெடுப்பது போன்று அந்த பின்னடைவு அமைந்திருக்கிறது.
இத்தகைய சூழலில், பெண் சமத்துவம் பற்றிப் பேசுவதும் அது தழைத்தோங்கும் வகையில் செயல்படுவதும் வாழும் சமூகத்தின் உண்மையான வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக அமையும்.
நம்மிடையே நிலவுகிற இதர சச்சரவுகளை, வேறுபாடுகளைத் தணிக்கவும் தீர்வு காணவும் வழி வகுக்கும்.
சமத்துவம் ஏன் தேவை?
அறுபதுகளில் கல்லூரிக்குச் சென்ற பெண்களின் பேஷன் உலகம் என்று சில பழைய புகைப்படங்களை அரிதாகக் கண்டிருப்போம்.
பெரும்பாலும் அவை ஏதோ ஒரு பெருநகரத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும்.
ஒரு கல்லூரியின் ஏதோ ஒரு வகுப்பில் மொத்தமாக இருபது பேர் பயின்றிருந்தால், அதில் நான்கைந்து பெண்கள் இருந்திருக்கக் கூடும் எனும் அளவிலேயே அக்காலத்தில் பெண் கல்வி இருந்தது. இன்று அது வெகுவாக அதிகரித்திருக்கிறது.
அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் கணிசமான இடத்தைப் பெண்கள் பிடித்திருக்கின்றனர். தொழில்முனைவோர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது தொடர்பான தகவல்கள், கட்டுரைகள், காணொலிகள் நம்மைச் சூழ்ந்து வருகின்றன.
அவை எல்லாமே, இந்த மாற்றங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சுத்தமாக இல்லை’ என்பதை நமக்குணர்த்துகின்றன.
இப்போதும் எல்லா துறைகளிலும் ‘பாலின சமத்துவம்’ என்பது நிலவுகிறது எனும் நிலையும் உருவாகவில்லை. பல துறைகளில் அது எட்டாக்கனியாகவே இன்னும் இருந்து வருகிறது.
அரசியல் அதிகாரப் பரப்பில் பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பெருக்க இன்றும் முயற்சிகள் மட்டுமே நடந்து வருகின்றன. பாதுகாப்புத் துறையில் பெண்களுக்கான இடம் இப்போதுதான் மெல்ல உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.
இப்படியொரு நிலை வாய்த்தபிறகும் ஊதியத்தில், பணி நிலையில் ஆண், பெண் பாகுபாடு நிலவுவது வருத்தத்திற்குரிய விஷயம்.
இப்படி சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் தான் மேலேறிக் கொண்டிருக்கிறதே தவிர, அந்தச் சமநிலையை இன்னும் எட்டவில்லை என்பதே உண்மை.
ஆனால், இதற்கே சில பல காலமாக எதிர்க்குரல்கள் எழுந்து வருகின்றன. அதுவே, இக்குரல்கள் ஓங்கி ஒலித்த காலம் எவ்வாறிருந்திருக்கும், அப்போது பெண்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் என்பதைப் பூடகமாக உணர்த்திவிடும்.
‘பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும்’ என்பது அம்பேத்கரின் வார்த்தைகள்.
‘நள்ளிரவில் ஒரு பெண் எந்தத் தொந்தரவும் இன்றி நடமாடும்போதே, நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாகக் கருத முடியும்’ என்று சொன்னவர் மகாத்மா காந்தி.
இவர்களைப் போன்று எண்ணற்ற தலைவர்கள், இந்த பூமியில் வேறுபாடுகள் தொய்ந்து சமநிலை வியாபிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கின்றனர்.
அதிலொன்றாக ‘பாலின சமத்துவம்’ இருந்து வருகிறது. அதனால், அதனை உரக்கப் பேச வேண்டிய தேவையும் உயிர்ப்போடு இருக்கிறது.
பெண்ணைப் பாதுகாப்பதாகக் கூறி, அவரை அடிமைத்தளைகளில் சிக்க வைப்பதைக் குடும்பம், சமூகம் என எல்லா கட்டமைப்பிலும் கண்டு வருகிறோம்.
உறவு, நட்பு, காதல், அன்பு என எல்லா பிணைப்புகளிலும் ‘உன்னைப் பாதுகாக்கிறேன்’ என அடிமைப்படுத்துவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அதில் இருந்து விலகி நிற்பவர்கள் ரொம்பவே அரிது.
அப்படிப்பட்ட ‘அரிதானவர்களாக’ மாறுவதுதான் சமத்துவம் தழைத்தோங்க வழி வகுக்கும்.
சுயமாகச் சிந்தித்து, முடிவெடுத்து, அதனைச் சுயமாகச் செயல்படுத்துகிற சூழலை ஒரு பெண் எதிர்கொள்வதுதான் உண்மையான சமத்துவமாக இருக்க முடியும்.
அப்படியொரு நிலையை அடையத் துடிக்கிற பெண்களுக்குத் துணையாக இருப்பதும், அது குறித்த அறிதல் இல்லாதவர்களுக்கு அதனை உணர்த்துவதும், அனைத்து பெண்களும் அதனை அடையத் தடையாக இருப்பவற்றை அடியோடு அகற்றுவதும் தான் ஆண்களின் கடமையாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சூழல் உருவாக வேண்டுமென்ற நோக்கோடு, அமெரிக்காவில் எழுபதுகளில் ‘பெண்கள் சமத்துவ தினம்’ கடைப்பிடிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
அதிபர் நிக்சன் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட முடிவு இன்றுவரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 அன்று இது பின்பற்றப்படுகிறது. 1920ஆம் ஆண்டு இதே நாளில்தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமை செலுத்துவதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன்பிறகே அங்கு பெண்களுக்குச் சொத்துரிமையில் பங்கு, ஆண்களைப் போலவே சம ஊதியம் போன்ற விஷயங்கள் மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டன.
பல ஐரோப்பிய நாடுகளிலும் அக்காலகட்டத்தில் பெண்களூக்கு வாக்குரிமை என்பது கொண்டுவரப்பட்டது.
அதனாலேயே, ‘பெண்கள் சமத்துவ தினம்’ பற்றிப் பேசுவதும் அது தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
எதற்கெடுத்தாலும் மேற்கு நோக்குப் பார்க்கிற வழக்கமுள்ள நாம் இந்த விஷயத்தில் அதனைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.
ஏனென்றால், உருளையின் மீதிருக்கும் பலகையில் நிற்கும்போது ஏற்படும் தடுமாற்றம் போன்று இவ்வுலகை விதவிதமான பிரச்சனைகள் சூழ்ந்துவரும் சூழலில் சமநிலையைப் பேணுவதே நாம் வீழ்ந்துவிடாமல் காக்க வகை செய்யும்.
‘எங்கும் எதிலும் சமத்துவம்’ என்ற முடிவை நோக்கி நகர்ந்துவிட்டால், வீழ்ச்சியை எண்ணிப் பயமுறுகிற நிலை ஒருபோதும் வராது..!
– மாபா