அதிகரிக்கும் மின்வெட்டும் சர்ச்சை அரசியலும்!

தவெக பல்வேறு தடைகளைக் கடந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் தற்போது எதிர்கொண்டிருக்கிற முதன்மையான பிரச்சனை – மின்வெட்டு.

தமிழகத்தில் சென்னையில் மட்டுமல்ல கடைக்கோடி வரை உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் மின்வெட்டுப் பற்றாக்குறை தொடந்து நீடித்து வருகிறது.

இரவு நேரங்களில் நீடித்து வரும் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் தற்போது நிலவும் மின்வெட்டு குறித்து தவெக ஆட்சிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்கள். ஊடகங்களிலும் எழுப்பி வருகிறார்கள்.

தற்போது நீடிக்கும் மின்பற்றாக்குறையை எப்படிப் புரிந்துகொள்வது?

தற்போது வெய்யிலின் தாக்கம் வழக்கத்தைவிட பெருமளவு அதிகரித்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பே, அதாவது திமுக ஆட்சியின் இறுதி நேரத்தில் கூட சென்னை போன்ற பெருநகரங்களில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை இருந்தது குறித்து இதே இணைய இதழில் குறிப்பிட்டிருக்கிறோம்.

ஆக, எதோ தவெக ஆட்சி வந்தபிறகு தான் மின்தடை ஏற்பட்டதாகக் கூறுவது ஏற்கக் கூடிய ஒன்றல்ல.

அக்கினி நட்சத்திரம் ஆரம்பித்த நேரத்தில் தான் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து இன்றுவரை வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் மின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக குளிர்சாதன வசதி கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல ஓட்டல்களிலும் வீடுகளில் கூட மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவது கூடியியிருக்கிற நிலையில், மின்தேவை கூடியிருப்பதை பலரும் இயல்பாகப் புரிந்துகொள்ள முடியும்.

புதிதாக பொறுப்பேற்று இருக்கிற தவெக அரசு தற்போது அதிகரித்திருக்கிற மின் தேவைக்கு ஏற்ற்படி போதுமான மின்சாரத்தை வழங்குவதில் சிக்கல் இருப்பதை அனுபவபூர்வமாக புரிந்தநிலையில்,

அந்தத் தடையை சரிப்படுத்த சற்று அவகாசம் கோருகிறார் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் அதை வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவிக்கவும் செய்கிறார்கள்.

தவெக அரசு மட்டுமல்ல தற்போதுள்ள நிலையில் எந்தக் கட்சி சார்ந்த அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தாலும் இதே மின்தடையை சமாளிக்க வேண்டிய சூழ்ல்தான் உருவாகி இருக்கும்.

இதைத்தான் இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிற தவெகவும் செய்துகொண்டிருக்கிறது.

ஆனால், அதே நேரத்தில் மின்சார இலாக்காவில் உள்ள சில கருப்பு ஆடுகள் தங்களுடைய ஆட்சிக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுவதாக ஆளும் கட்சித் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக ஏற்கமுடியாது.

அங்கங்கே சில அரசியல் சார்ந்து சில நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதை வைத்து பொதுமைப்படுத்திவிட முடியாது.

இனி வெய்யில் காலம் தணியும்வரை தற்போது நீடித்து வரும் மின் பற்றாக்குறையைச் சமாளிப்பது தவெக அரசுக்கு வந்திருக்கிற சவால்.

இதற்கான கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து பெற முடியும்?

அண்டை மாநிலங்களில் இருந்தா? அல்லது மத்திய அரசிடமிருந்தா? என்பதையெல்லாம் மக்களின் நலனுக்காக முடிவெடுக்க வேண்டிய கட்டாயப் பொறுப்பில் இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

மின்பற்றாக்குறையை எதிர்கட்சிகளோ, மற்றவர்களோ தங்களுக்கு சாதகமான அரசியலுக்குப் பயன்படுத்துவது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

மக்களின் உடனடி மின்சாரத் தேவைக்காக அவசியமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விஜய்யின் கையில்தான் இருக்கிறது.

– லியோ

Comments (0)
Add Comment