தன்னுடைய கதை வசனத்தை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தில் மீண்டும் பார்ப்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு சந்தோசமான தருணமாக இருக்கும்?
அப்படிப்பட்ட சந்தோசத்துடன் இருந்தார் மூத்த எழுத்தாளரான, 96 வயதான இந்திரா பார்த்தசாரதி. சென்னையில் உள்ள நவீன முதியோர் காப்பகம் ஒன்றில்தான் அவர் தற்போது தங்கியிருக்கிறார்.
அவருடைய வேண்டுகோளின்படி அவருடைய கதை, வசனத்தில் உருவான ‘மறுபக்கம்’ திரைப்படத்தைப் பெரிய அளவிலான டிவியில் திரையிடும் நிகழ்வு நடைபெற்றபோது, அதில் நடித்த திரைக்கலைஞரான சிவகுமார் அவர்களோடு நானும் சென்றிருந்தேன்.
காலை வேளையில் இந்திரா பார்த்தசாரதி தங்கியிருந்த அறையில், வயதானாலும், வயதுக் குறைந்த உற்சாகத்துடன் இருந்தார் இ.பா.
முதிர்ந்த நிலையிலும் நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி வாசிக்கிறார்; அவ்வப்போது எழுதுகிறார்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த மாதிரியான தோற்றத்துடன் இருந்தாலும், நடக்கும்போது மட்டும் ஊன்றுகோலுடன் நடக்கிறார்.
அவருக்கே உரித்தான புன்சிரிப்புடன் “மூளை எப்போதும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் ஆக்டிவாகத்தான் இருக்கிறது. அதனால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னவரின் பேச்சில் சிறிதும் சலிப்பின் சாயல்கள் இல்லை.
96 வயதிலும் அவரது நினைவுகள் துல்லியமாக இருக்கின்றன. 1960-களில் தனது ‘உச்சி வெயில்’ நாவலை லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர்கள் வட்டம் வெளியிட்டதையும், அதன்பிறகு நீண்ட காலத்திற்கு பின் இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன் தன்னைச் சந்தித்து திரைப்படம் ஆக்குவதற்கான உரிமையைப் பெற்று, தன்னை வசனம் எழுதப் பணித்ததையும் எளிமையாகச் சொல்லிக்கொண்டு போனார்.
தன் அறைக்குள் நுழைந்த திரைக்கலைஞர் சிவகுமாரை அணைத்து வரவேற்றார். மிகவும் மகிழ்வாக உணர்வதாகச் சொன்னார்.
தந்திர பூமி, குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன போன்ற நாவல்களையும், ஔரங்கசீப் போர்வை போர்த்திய உடல்கள் போன்ற நாடகங்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதிக் குவித்திருக்கிற இந்திரா பார்த்தசாரதி முன்னாள் நடந்துசெல்ல ஒரு சிற்றரங்கில் அவருடைய கதை வசனத்தில் வெளியான ‘மறுபக்கம்’ திரையிடப்பட்டது.
அந்தச் சிற்றரங்கில் அவருடன் அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் முதியவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.
பின் வரிசையில் இந்திரா பார்த்தசாரதியும் சிவகுமாரும் அமர்ந்திருந்தார்கள்.
படம் துவங்கியது.
நாட்டியத்தையும் இசையையும் மிகவும் நேசித்தவராக இளம்வயதில் இருந்த சிவகுமார் கதாபாத்திரம் தன்னை மாதிரியே நாட்டியத்தை நேசித்த ராதாவைக் காதலித்து மணந்தாலும் குடும்பத்து நிர்பந்தங்களால் அவரை விளக்கி வைக்க நேர்கிறது.
ஜெயபாரதியை மறுமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குப் பிறந்த மகனோ, கிருஸ்தவப் பெண்ணை திருமணம் செய்து கொண்டது அவருக்குப் பிடிக்கவில்லை.
பல்வேறு மன அழுத்தங்களுக்குப் பிறகு சித்தப் பிரமை அடைந்த நிலையில், அவருடைய மனம் தெருவில் கடந்துபோகும் நாயன இசையைக் கேட்கும்போதுகூட ஒன்றிப்போகிறது. நாட்டியத்திற்காக ஏங்குகிறது.
மரணப்படுக்கையில் கிடக்கும்போதுகூட அவரது விரல்கள் மட்டும் துடிப்போடு தாளமிடுகின்றன.
நிறைவாக சிவகுமாரின் மகன் ராதாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். பக்கத்தில் வந்து சிவகுமாரின் முகம் பார்க்கிறார். தான் மிகவும் நேசித்த ராதாவின் புன்னகைத்த முகத்தைப் பார்த்தபடி அவரது உயிர் அடங்குவதோடு படம் நிறைவு பெறுகிறது.
ஒரு பிராமணக் குடும்பத்திற்குள் நிகழ்கிற மாதிரி ஓடுகிற இந்தப் படம் ஒன்றரை மணி நேரத்திற்குள் முடிவடைந்துவிடுகிறது.
எல்.வைத்தியநாதனின் பின்னணி இசை பெரும் பலத்தைப் போல அமைந்திருக்கிற திரைப்படத்தில், தேர்ந்த, நிறைவானதொரு மாறுபட்ட நடிப்பைத் தந்திருக்கிறார் சிவகுமார்.
ஜெயபாரதியும் ராதாவும் கட்சிதமாக தங்கள் கதாப்பாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள்.
இந்திரா பார்த்தசாரதியின் வசனங்கள் வெகு இயல்பாகவும் அதே சமயம் கூர்மையாகவும் இருக்கின்றன.
படத்தின் நிறைவுக்காட்சி ‘முதல் மரியாதை’ கிளைமாக்ஸ் காட்சியை நினைவுபடுத்தினாலும், ‘மறுபக்கம்’ திரைப்படம் வெளிவந்த அதே காலகட்டத்தில்தான் ‘முதல் மரியாதை’ படமும் வெளிவந்திருக்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கதை வசனத்தில் உருவான திரைப்படத்தை மீண்டும் முதிர்ந்த வயதில் பார்த்தபோது, நெகிழ்ச்சியோடு இருந்தார் இ.பா.
இப்படம் வெளிவந்தபிறகு தன்னை இயக்குநர் கே.பாலசந்தர் அழைத்துப் பேசியவற்றை நினைவு கூர்ந்தவர், கே.எஸ்.சேதுமாதவனையும் அதில் நடித்த சிவகுமாரையும் மனம்விட்டுப் பாராட்டினார்.
அங்கிருந்த மூத்த பார்வையாளர்களும் பாரட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டபோது, அந்த சந்திப்பே பரவசம் நிரம்பிய ஒன்றாக மாறியிருந்தது.
கும்பகோணத்தில் பிறந்த இ.பா., டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். போலந்து நாட்டிலும் தமிழைப் பயிற்றுவித்தவர். சாகித்ய அகாதமி விருதும் சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றவர்.
நிறைவாக திரைப்படம் குறித்துப் பேசிய சிவகுமார், தான் அந்தப் படத்தில், நடித்ததற்காக எந்த ஊதியத்தையும் பெறவில்லை என்றார்.
‘மறுபக்கம்’ திரைப்படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்ததைப் பற்றியும், அகில இந்திய அளவில் சிறந்த படத்திற்கான ‘தங்கத் தாமரை’ விருது கிடைத்ததைப் பற்றியும் குறிப்பிட்டு,
அந்தப் படத்தில் பங்காற்றிய எழுத்தாளரான இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார் அவருக்கான புன்னகையுடன்.
ஏற்கனவே இயக்குநர் ஸ்ரீதர் ராஜனின் இயக்கத்தில் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்கிற திரைப்படம் இந்திரா பார்த்தசாரதியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், ‘மறுபக்கம்’ திரைப்படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது பார்க்கும்போதும் கேமிரா கோணங்கள், அழுத்தமான இசை, தேர்ந்த நடிப்பு, சார்ப்பான வசனங்கள் என்று நிறைவைத் தருகிற விதத்தில் உருவாகியிருக்கிற இந்தப் படத்தை இ.பா, சிவகுமார் இவர்களுடன் நானும் இணைந்து பார்த்த அனுபவம் மனதிற்கு நிறைவாக இருந்தது.
அந்தப் படம் திரையிடப்பட்ட சிற்றரங்கை விட்டு வெளியே கிளம்பும்போது சிவகுமாரை பார்த்தபடி அவருக்கு இ.பா., கொடுத்த பட்டம் ‘திருக்குறள்’ சிவகுமார்.
இ.பா-வின் மனைவி 35 வருடங்களுக்கு முன்னாடி மறைந்துவிட்டாலும், தனித்து வாழும் வாழ்க்கையில் எந்த சலிப்பும் இல்லை. உற்சாகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று புன்சிரிப்புடன் சொல்லி கைகுலுக்கியபடி எங்களுக்கு விடை கொடுத்தார் இ.பா.
எவ்வளவு இயல்பான நம்பிக்கையூட்டும் சொற்கள்!
– மணா