இயக்குநர் மகேந்திரன் இயக்கிப் பரவலான கவனம் பெற்ற ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஒரு காட்சி.
அந்தத் திரைப்படத்தில் ரஜினிக்கு தங்தையாக வரும் சோபா, தன் அண்ணனிடம் இப்படிக் கேட்பார்.
“அவுங்க ரொம்ப வெகுளில…” – இது படாபட் ஜெயலட்சுமியைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது.
இதற்கு ரஜினி சிரித்தபடியே பதில் சொல்லுவார்.
சிறு வார்த்தையில்தான் அந்த வசனம் வெளிப்பட்டிருக்கும். சோபாவும் ஒரு வெகுளி தான் என்பதை வெகு சிக்கனமான வார்த்தைகளில் சொல்லியிருப்பார் ரஜினி.
இந்தக் காட்சியை இப்போது பார்த்தாலும் அந்த வசனங்கள் மிகவும் ஒரு இயல்பாகவும், பாசத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் இருப்பதை எந்தப் பார்வையாளராலும் உணர்ந்துகொள்ள முடியும்.
அப்படிப்பட்ட காட்சியைப் பற்றி நேரில் சென்னையிலுள்ள இயக்குநர் மகேந்திரன் வீட்டில் அவரிடம் அவரை பலமுறை சந்தித்தாலும் இம்முறை இந்தக் காட்சியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ‘சிம்பிளா’கச் சொன்னார்.
“நான் இவ்வளவு எளிமையா அந்த வசனத்தை எழுதி இருக்கிறதா சொல்லி இருக்கீங்களே.. ‘ஆக்சுவலா’, அவங்க, நிஜ வாழ்க்கையில ஒரு அண்ணனும் ஒரு பாசமான தங்கையும் பேசி இருந்தாங்கன்னா.. எப்படி பேசி இருப்பாங்களோ அப்படித்தான் அந்தப் படத்துல அந்தக் காட்சிய வச்சிருக்கேன்.
அதற்கேற்றபடி வசனத்தையும் ரொம்ப சிம்பிளா எழுதியிருக்கேன்.”
தொடர்ந்து பேசிய அவர், “அதேசமயம் சிவாஜி சார் நடித்த ‘தங்கப் பதக்கம்’ படத்திற்கும் நான்தான் வசனம் எழுதியிருக்கிறேன்.
அந்தப் படம் திரைப்படமாவதற்கு முன்பு, நாடகமாக நடிக்கப்பட்டது. அந்த நாடகத்திற்கான வசனமே வேறு மாதிரி இருக்கும். ஆக, திரைப்படம் என்கின்ற மொழிக்கு ஏற்றபடி அந்த வசனங்களும் மாறுபட்டிருக்கும்.
இதே மாதிரியான வசனங்களைத்தான் நான் இயக்கிய ‘மெட்டி’ என்கிற படத்திலும் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
அதில் தந்தையான செந்தாமரை மகன் சரத் பாபுவிடம் பேசுகிற வசனங்கள் மிக இயல்பாக இருக்கும். அதேசமயம் மனதைத் தொடும் விதத்திலும் இருக்கும்.
இந்த மொழியை நான் யாரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், நான் சந்தித்த எளிய மனிதர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நான் ‘துக்ளக்’கில் பணியாற்றியபோது, வெவ்வேறு அடித்தட்டு மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்வனுபவங்களை வைத்து ஒரு தொடராக எழுதிக்கொண்டு வந்தேன்.
சாதாரணமாக தெருவில் பூ விற்பவர்கள், துணை நடிகைகள் இப்படி வெவ்வேறு தரப்பினரின் வாழ்வு அனுபவங்களை அவர்களைச் சந்தித்து, அது தொடராக எழுதி வந்தபோது,
அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அந்த எளிய மொழி, எனது திரைப்படங்களுக்கும் பல்வேறு விதத்தில் பயன்பட்டிருக்கிறது.
ஆக, என்னுடைய படங்களில் இடம்பெற்றிருக்கிற வசனத்தை உண்மையில் வடிவமைத்து, அதைச் செம்மைப்படுத்தி கொடுத்தவர்கள் என்று பார்த்தால், நான் சந்தித்த எளிய மனிதர்கள் தான். அவர்களிடமிருந்து தான், வாழ்க்கையின் எதார்த்தத்தைக் கற்றுக் கொள்கிறோம்.
அதே சமயம் எத்தனையோ மக்களுக்கான பிரதிநிதிகளாக தங்களை சொல்லிக் கொள்பவரையும் சந்தித்திருக்கிறேன்.
அவர்களிடம் பேச ஆரம்பித்ததும், முதல் ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே அவர்கள் நம்மிடம் எதார்த்தமாகவும், உண்மையாகவும் பேசவில்லை என்பது நமக்கு புலப்பட்டுவிடும்.
அதற்குப் பிறகு அந்தப் பேச்சை நமக்குக் கேட்பதில் எந்தவிதமான சுவாரசியமும் இருக்காது. இதுதான் நேரடியாக மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளாக சொல்லிக் கொள்பவர்களுக்கும் இருக்கிற ஒரு எதார்த்தமான இடைவெளி.
இதைத்தான் ஒவ்வொரு படத்திலும் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
குறிப்பாக ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் மோகன், பிரதாப், சுகாசினி இவர்களுக்கு இடையேயான உரையாடல்களுக்கான மொழி அன்றைய இளைஞர்களின் மொழி எப்படி இருந்ததோ,
அதைச் சார்ந்தே அந்த மொழிநடையை வசனத்தில் பிரதிபலித்திருந்தேன். அது ரொம்பவும் இயல்பாக அமைந்திருந்தது.
இப்படி நமக்கு கற்றுக் கொடுப்பவர்கள் எளிய மக்கள்தான்.
இதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகையின் தேவைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறேன்.
நாடகத்தின் தேவைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறேன், திரைப்படங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறேன்.
இலங்கைத் தமிழில் இதை ஒரு நல்ல அவதானிப்பு என்று சொல்வார்கள். அவதானிப்பு என்றால் ‘அப்சர்வேஷன்’.
தன்னைச் சுற்றிய வாழ்க்கையில் வெவ்வேறு மனிதர்களைக் கூர்மையாக கவனிக்கும்போது, அவர்களுடைய உரையாடல்களை கவனிக்கும்போது, நமக்கு அதிலிருந்து கிடைக்கும் யதார்த்தமான மொழி நடைக்கு இணையான ஒரு மொழியை, நாம் புத்தகங்களில் தர முடியாது” என்று பேசிக்கொண்டு போனவரிடம் ஈழத்துக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பற்ப்றி பேச்சு திரும்பியது.
ஈழத்திற்கு சென்று பிரபாகரனைச் சந்தித்தது துவங்கிச் சில விஷயங்களைச் சொன்னவர், “அதைப்பற்றி வெளிப்படையாக என்னால் ஊடகத்தில் பேச முடியவில்லை.
அதற்கு ஏற்ற அரசியல் சூழ்நிலைதான் நான் போய் வந்தபோது இருந்தது. அதனால் அந்த அனுபவத்தை நேரடியாக என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
ஆனால், இலங்கைக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தது, அவரைப் போன்ற ஒரு தலைவர், அவரை நம்பி, அவருடைய தலைமையை ஏற்று அவ்வளவுக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இளைஞர்கள், அவர்கள் காட்டிய அபூர்வமான ஒரு செயல்பாட்டை என்னால் மறக்கவே முடியாது.
தமிழகத்தில் நான் பார்த்த இளைஞர்களுக்கும், இலங்கையில் அப்போது நான் சந்தித்த பிரபாகரனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு.
இங்குள்ளவர்கள் வெவ்வேறு விதத்தில், ஒரு பொழுதுபோக்கில், சமூக உணர்வில் பலவிதத்தில் அன்னியப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், அங்கு அப்படி இல்லை. மொழி, இன உணர்வு அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒரு தூண்டுதலைக் கொடுத்திருக்கிறது.
தினமும் ஒவ்வொரு கணமும் அவர்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. அந்த விழிப்பு அவர்களைத் தொடர்ந்து சுதாரிப்பாக இருக்க வைக்கிறது.
அவர்கள் செயல்பாட்டில் அவர்கள் காட்டுகிற தீவிரத்தைப் பார்க்கும்போது, உண்மையிலேயே நான் வியந்து போனேன்.
இளைஞர்கள் என்றால் பொதுவாக எப்படி இருப்பார்கள் என்கிற கற்பனை பலருக்கும் இருக்குமோ அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருந்தார்கள்.
அப்படிப்பட்ட மாறுபட்ட அனுபவத்தைக் கொண்ட பிரபாகரன் தலைமையில் செயல்பட்ட இளைஞர்களையும், பிரபாகரனையும் சந்தித்ததையெல்லாம் என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத விஷயமாக இன்றுவரை இருக்கிறது”.
நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றி பேசும்போது, அவருடைய பேச்சில் எப்போதும் ஒரு பெருமிதம் தொனிப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அவருடைய திரைப்படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். அவருடைய நாடகங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்.
சிவாஜியோடு அவருக்கு இருந்த நெருக்கத்தை அதிகப்படுத்தியவராக நடிகர் செந்தாமரையைக் குறிப்பிட்டார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும்போது மாணவர் பருவத்திலேயே தன்னை தனித்துக் கவனித்துப் பிறகு சென்னைக்கு வரவழைத்து ‘பொன்னியின் செல்வன்’ போன்ற நாவலுக்கு தன்னை திரைக்கதை எழுதுவதற்குப் பணித்து,
அதற்கான வேலைகளை அவருடைய மேற்பார்வையின் கீழ் செய்ய வைத்ததற்கு பின்னிருந்த நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.
நடிகர் ரஜினியைப் பற்றிப் பேச்சு வரும்போது, “அவருடன் மிகுந்த நட்புணர்வு வெளிப்படும். ரஜினியுடன் முன்பே பழக்கம் இருந்தாலும்,
நான் ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்குவதற்கு முன்பே அதில் வரும் காளி கதாபாத்திரத்திற்கு ரஜினிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்பதை என் மனசுக்குள் முதலிலேயே திட்டமிட்டிருந்தேன்.
அதன்படியே ரஜினி அந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தூரம் உயிரூட்டம் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு உயிரூட்டம் கொடுத்து வெகு இயல்பாக நடித்திருந்தார்.
எப்போதும் அந்தப் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றி பெருமையாக சொல்லக்கூடியவராகவே ரஜினி இருக்கிறார்.
ஆனால், அடுத்து ஜானி, கை கொடுக்கும் கை என்று நான் இயக்கிய பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், இன்னும் மறக்க முடியாத படமாக ‘முள்ளும் மலரும்’ படத்தில் அவர் நடித்த அந்தக் கதாபாத்திரத்தைத் தான் முக்கியமானதாகச் சொல்வேன்.
அந்த அளவுக்கு அவருடைய ஈடுபாடு, அப்போது என்னை தனிப்பட்ட முறையில் வியக்க வைத்திருக்கிறது.
‘கேஷுவலாக’ பேசிக் கொண்டிருந்தவர் அவருடைய வீட்டின் முன்னிருந்த கதவைத் திறந்து வீட்டை விட்டு வெளியே வந்தபோது,
அவரது வீட்டின் முன்புறமாக தெரு ஓரமாக தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைக்காரரிடம் இவராகப் பேச்சுக் கொடுத்து ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தவர், என்னுடைய இருசக்கர வாகனம் வரை என்னுடன் வந்து என்னை வழியனுப்பிவிட்டுப் போனார்.
அதாவது பெரிய அளவில், இந்திய அளவில்கூட பெரிதாக கவனிக்கப்பட்ட ஒரு இயக்குநர் எளிய மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார், எப்படித் தன்னை ஒரு அகங்காரம் சிறிதும் இல்லாத ஒரு மனநிலையில் தன்னை வைத்திருக்கிறார் என்பதை நேரடியாகவே அவரை சந்தித்த சந்தர்ப்பங்களில் என்னால் உணர முடிந்தது.
இதை இப்போதும் என்னுடைய வாழ்வின் மறக்க முடியாத ஒரு பகுதியைப் போல்தான் நினைவில் வைத்திருக்கிறேன்.
அவர் இயக்கியத் திரைப்படங்களில் மட்டுமல்ல, அவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள எவ்வளவு உயிர்ப்பான விஷயங்கள் இருக்கின்றன?
– மணா