கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 15
ஜெர்னலிச வாழ்க்கையில் எத்தனையோ தலைவர்களைப் பார்த்து பழகுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், சில தலைவர்கள் காட்டிய அக்கறையும் பரிவும் ஒத்துழைப்பும் ஆச்சர்யப்படும் விதத்திலேயே அமைந்திருப்பது ஒருவிதத்தில் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
குமுதம் வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பேட்டிக்காக கலைஞரை சந்திக்கபோனபோது, குறும்பான புன்னகையுடன் வரவேற்றார்.
அப்போது, அவர் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பிலிருந்தார்.
மாலைப்பொழுது நெருங்கும் நேரத்தில், அவரை சந்திப்பதற்கு முன்பே அங்கு கூடியிருந்த அதிகாரிகள்,
“சரியா, அரைமணி நேரம்தான். பேட்டி முடிஞ்சவுடனே பல வேலைகள் இருக்கு. சீக்கிரம் முடிச்சிட்டு வந்திடுங்க” என்று இதமாகச் சொன்னார்கள்.
கலைஞரின் அறைக்குப் போனபோது அங்கு அவருடைய உதவியாளரான சண்முகநாதனும் வந்தார்.
பேட்டியை நான் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தபோது, மிக வேகமாக சுருக்கெழுத்தால் எழுதிக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.
ஒரு வழியாக பேட்டி, எதிர்பார்த்த விதத்தில் முடிந்ததும் நான் வாட்சைப் பார்த்தேன்.
அதை கவனித்த கலைஞர், “என்னய்யா, நான் தான் வாட்சைப் பாக்கணும், நீ வாட்சைப் பாக்குறீயே” என்றார் புன்னகையோடு.
“வெளிய நிக்கிற அதிகாரிகள் கரைக்டா அரை மணி நேரத்துல வந்துருங்கன்னு சொல்லியிருக்காங்க” என்று நான் சொன்னதும் மறுபடியும் சிரித்தார்.
“பொறுய்யா… பத்து நிமிஷம் என்னுடன் பேசிட்டுப் போலாம்” என்றவர் எங்கள் இருவருக்கும் காஃபியைக் கொண்டுவரச் சொன்னார்.
சூடாக காஃபி வந்தது. இரண்டு பேரும் காஃபி டம்ளரை எடுத்து குடித்தபோது, அதிலிருந்து பத்து நிமிடங்களுக்கு மேல் கடந்து, அன்றைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றி அவருக்கே உரித்தான கேலி கலந்த பாணியில், ஜாலியாக சொல்லிக் கொண்டு போனார்.
அதற்குள் அவரே சொன்னபடி, பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த கால் மணி நேரம் எப்படிக் கடந்து போனதென்றே தெரியவில்லை. அந்தளவுக்கு உற்சாகம் கொப்பளிக்க பேசிக் கொண்டிருந்தார்.
நிறைவாக, அவரிடம் “நீங்க பேட்டின்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால கொடுத்ததைவிட, இப்ப நீங்க பேசுறது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கே” என்றதும், அவரிடமிருந்து பலத்த சிரிப்பு வெளிப்பட்டது.
“ஆஃப் த ரெக்கார்ட்யா.. இதை பேசினது, உங்க பத்திரிக்கைகாக இல்ல.. உனக்காகதான் பேசி இருக்கேன். இதைப் புரிஞ்சுக்கிடுவனு நினைக்கிறேன்” என்று குறும்புடன் சொன்னபடி, நாங்கள் இருவரும் அறையைவிட்டு வெளிவர அதிகாரிகள் வழக்கம்போல அவரை சூழ்ந்து கொண்டார்கள்.
இதுபோல பல முறை சந்தித்தபோது, ஆஃப் தி ரெக்கார்ட் என்று சொல்லி, வெகு இயல்பாக அவர் பேசிய விஷயங்கள் இப்போதும் மனதில் பதிந்திருக்கின்றன.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், பொறுப்பாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரம், நீண்ட கால நண்பரான தொல்.திருமாவளவனை பேட்டிக் காண வேண்டி இருந்தது.
மறுநாள் காலை இதழ் வந்துவிடும் என்பதால், அன்று இரவுக்குள் அவரை பேட்டி எடுக்க வேண்டியிருந்தது.
நண்பர் வன்னியரசு மூலம் திருமாவளவனைத் தொடர்பு கொண்டபோது, “நீங்க எங்க இருக்கீங்க” என்றவரிடம் நான் புரசைவாக்கம் ஆபிசில் இருப்பதாகச் சொன்னதும், “நான் சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருக்கிறேன். எப்படியும் பத்தரையிலிருந்து பதினோரு மணி ஆகிவிடும். நானே நேரடியாக புரசைவாக்கத்திலிருக்கிற உங்களுடைய ஆபிசிற்கு வந்து விடுகிறேன்” என்றார்.
சொன்னதைப் போலவே இரவு பதினோரு மணி வாக்கில் குமுதம் அலுவலகத்திற்கு அவரது கட்சி சகாக்களுடன் வந்து சேர்ந்தார்.
சிறு உபசரிப்பிற்குப் பின் பேட்டிக் கொடுக்கத் தயாரானார். சரியாக முக்கால் மணி நேரத்திற்கு அவருடனான அந்தப் பேட்டியை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்தேன்.
உடனே உற்சாகத்துடன் கைக்குலுக்கிவிட்டுக் கிளம்பிவிட்டார் திருமா.
அவர் சென்றதும், டேப் ரிக்கார்டரில் இருந்த அந்தப் பதிவை எழுத்தாக்கி, ஃபுரூப் பார்த்து, லே அவுட் செய்து, கவர் ஸ்டோரியின் முன் பக்கத்தில் தலைப்பும் போட்டு என்னுடைய வேலையை முடித்துவிட்டு புரசைவாக்கம் அலுவலகத்தைவிட்டு, கிளம்பும்போது காலை 4 மணி.
வீட்டிற்குப் போய்விட்டு, திரும்பவும் அலுவலக நேரத்தில் மிகச்சரியாக ஒன்பதரை மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்து, எனது அலுவலக கேஃபினுக்குள் நுழைந்தபோது, அங்கு ரெடியாக இருந்தது குமுதம் ரிப்போர்ட்டர் அந்த வாரத்திய இதழ்.
உடனே சென்னையிலுள்ள திருமாவளவனின் அலுவலகத்திற்கு அவர் பேட்டி கொடுத்த இதழ் பிரதிகளைக் கொடுத்தபோது, நன்றி பொங்கிய திருமாவின் குரலும் ஞாபகத்தில் இருக்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே.மூப்பனாரை அதற்கு முன்பே நான் சந்தித்திருந்தாலும்கூட அப்போது, அவருடைய கட்சி முக்கியமான கூட்டணி நிலைப்பாட்டை எடுக்க முடிவெடுத்திருந்த நேரம்.
நண்பர் கோபண்ணாவின் உதவியுடன் மூப்பனாரை அவரது வீட்டில் சந்திக்கப் போயிருந்தேன்.
மூப்பனாருக்கு அப்போது உடல்நலத்தில் பிரச்சனை ஏற்பட்டு பேசுவதில் கடும் சிரமம் இருந்தது.
அதற்கு முன்பு, சில முறை மூப்பனாரைச் சந்தித்து நான் பேட்டி எடுத்து வந்திருந்தாலும் கூட, இம்முறை அவரைப் பார்த்தபோது, அவரது உடலின் நலிவும் வெளிப்படையாகத் தெரிந்தது.
அந்த நிலையில், அவர் தனித்து பேட்டியளிப்பதை தவிர்த்திருக்கலாம். ஆனாலும், அவர் ஒப்புதல் அளித்திருந்தார்.
கேள்விகளுக்கு மிகவும் மெதுவாகத்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் பேச நினைப்பதை சரியாக பேச முடியாததை அவருடைய பேச்சு வெளிக்காட்டியது.
டேப் ரிக்கார்டரில் பதிவு செய்துவிட்டு வீட்டிற்குப் போய் அதை இயக்கிப் பார்த்தபோது. மூப்பனாரின் பதில்கள் சரியாக பதிவாகவில்லை.
நான் மூப்பனாரைச் சந்தித்தபோது, அருகிலிருந்த நண்பரான கோபண்ணாவிடம் கேட்டபோது, “அவர் பதிலளித்தது உங்களோட நினைவில இருக்குல. அதைவைச்சு எழுதி இந்தக் காப்பியை எடுத்துட்டு வாங்க” என்றார்.
மாலை நேரத்திற்குள் எழுதி முடித்து, கோபண்ணாவிடம் அந்த எழுத்துப் பிரதியைக் காண்பித்தபோது, படித்துப் பார்த்துவிட்டுச் சொன்னார், “ரொம்ப சரியாத்தான் எழுதியிருக்கீங்க”.
அடுத்த வார குமுதம் இதழில் அட்டைப்பட கவர் ஸ்டோரியாக வெளிவந்தது மூப்பனாரின் பேட்டி.
இதெல்லாம்விட வித்தியாசமானது, கலைஞர் அவர்களின் மூத்த புதல்வரான மு.க.அழகிரியுடனான சந்திப்பும் பேட்டியும்.
நான் மதுரையிலிருந்தபோதே அவருடன் பழக்கம் உண்டு. நேரடியாக பார்க்கும்போது எப்பவும் மிக வெளிப்படையாகப் பேசுவார் அழகிரி. மனம் திறந்து பாராட்டவும் செய்வார். அதே மாதிரி விமர்சனமும் செய்வார்.
அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதுரையில் உள்ள அவரது வீட்டில் அவரைச் சந்தித்தேன்.
எதிரெதிர் ஷோபாக்களில், நாங்கள் அமர்ந்திருந்தோம். நான் டேப் ரிக்கார்டரை ஆன் செய்து என் கையில் வைத்திருந்தேன். அதைப் பார்த்தவர், “குடுங்க நான் கையில வைச்சுக்கிறேன்” வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டார்.
பேட்டி ஆரம்பமாகி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டது. பேட்டியை முடித்துவிட்டு அன்றிரவே சென்னைக்குக் கிளம்ப வேண்டியிருந்தது.
மதுரையிலிருந்த எங்கள் வீட்டிற்குப் போய், டேப் ரிக்கார்டரை ஆன் செய்த போதுதான், அதில் எதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. டேப் ரெக்கார்டரில் ஒன்றுமே பதிவாகி இருக்கவில்லை.
அந்த வாரத்திய குமுதம் இதழின் கவர் ஸ்டோரியாக அந்தப் பேட்டியை வெளியிட தீர்மானித்திருந்த நிலையில், பதிவாகாத அந்த டேப் ரிக்கார்டர் பிரச்சனையானது.
பேட்டிக்காக நான் தயாரித்திருந்த கேள்விகள் என் கையிலிருந்தன. அழகிரி சொன்ன பதில்கள் என் நினைவில் இருந்தன.
கடகடவென்று அமர்ந்து அவர் சொன்னவற்றைத் தொகுத்து எழுதி, அதற்கு தலைப்பும் போட்ட நிலையில் அழகிரியை மறுபடியும் தொடர்பு கொண்டேன்.
“என்னங்க..” என்றவரிடம், “காலையில எடுத்தப் பேட்டியை உங்கக் கிட்ட ஒருமுறை வாசிச்சுக் காண்பிச்சிட்டா, நல்லா இருக்கும்னு தோணுது, வரட்டுமா” என்று கேட்டதும் வரச் சொன்னார்.
போனதும் காஃபி கொடுத்து முதலில் உபசரித்தார். டேப்ரிக்கார்டரில் எதுவுமே பதிவாகாதது குறித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை.
”வாசிக்கட்டுமா” என்றதும் வாசிக்கச் சொன்னார்.
அந்தப் பேட்டி முழுக்க வாசித்து முடித்ததும், “நல்லா வந்திருக்கு, நல்ல தலைப்புதான் போட்டுருக்கீங்க” என்று புன்சிரிப்புடன் பாராட்டினார்.
அந்தப் பேட்டி அடுத்த வார குமுதம் இதழில் கவர் ஸ்டோரியாக வெளிவந்தது.
நழுவ வாய்ப்பிருந்தும் பிடிவாதமாய் மரக்கிளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் பசுமைப் படர்ந்த இலைகளைப் போலவே மனதிலும் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கின்றன இதைப் போன்ற சில நினைவுகள்.
– மணா