தொலைந்துபோன அபூர்வ பிரதிகள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு: 14

‘அற்புதம்’ என்ற சொல்லுக்கான அர்த்தமாகத்தான் என்னுடைய ஊடக வாழ்க்கையில், கிடைத்த அந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணைய ஊடகம் இவற்றில் பணியாற்றிய 45 ஆண்டுகாலங்களுக்கு மேல் இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கிற நிலையில், கீழே நான் விவரித்திருக்கும் இந்த அனுபவங்கள், கொஞ்சம் அபூர்வமான ரகம்தான்.

இத்தனை ஆண்டுகள் ஊடக அனுபவத்தில் சில ஆயிரக்கணக்கான மனிதர்களைச் சந்தித்திருந்தாலும், சிலருடைய சந்திப்புகள் தனித்து நினைவில் சிறு வெளிச்சத்துடன் இருக்கின்றன.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நான் சந்தித்த அபூர்வமான மனிதர் நிமாய் கோஷ். மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான நிமாய் கோஷ், அங்குள்ள டாக்கா என்கின்ற கிராமத்தில் 1914-ம் ஆண்டில் பிறந்தவர்.

நிமாய் கோஷின் தந்தை தனது மகனை ஒரு ரேடியோ இன்ஜினியராக ஆக்குவதற்கு ஆசைப்பட்டும், நிமாய் கோஷ்க்கு அதில் விருப்பமில்லை.

அவரது விருப்பமெல்லாம் புகைப்படக் கல்வியிலும், கேமிரா மீதுமே இருந்தது. அப்போது மேற்குவங்கத்திலிருந்த முன்னணி ஒளிப்பதிவாளர்களான அசோக் சென், தேவி கோஷ் இருவரையும் சந்தித்தாலும் நிமாய் கோஷிடமிருந்த சுறுசுறுப்பையும் ஆர்வத்தையும் புரிந்து கொண்ட தேவி கோஷ் தன்னிடம் உதவியாளராக நிமாய் கோஷை சேர்த்துக் கொண்ட போது அவருடைய வயது 18. 

சென்னையில் கோடம்பாக்கத்திலுள்ள அவருடைய வீட்டின் முன் பகுதியில், ஈசி சேரில் சாய்ந்தபடி அவர் தன்னுடைய திரை அனுபவங்களை அருகிலுள்ள சேரில் அமர்ந்தபடி அவருடைய நோட் புக்கில் அதை பதிவு செய்தேன்.

முதல்நாளே அந்தச் சந்திப்பு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. ஆனால், அதைத் தொடர்ந்து மேலும் 2 நாட்கள் வீட்டிற்கு வரச் சொன்னார். அவருடைய அனுபவங்களை வெவ்வேறு முக பாவங்களுடன் சற்றே கரகரத்தக் குரலில் அவர் பகிர்ந்து கொண்ட விதம் இப்போதும் மனதில் பதிந்திருக்கிறது.

முதலில் விளம்பரப் படங்களில் பணியாற்றியபிறகு, பல செய்திப்படங்களைத் தயாரித்ததை சொல்லி வந்த அவர், “லேடி பேடன் பவலின் இந்திய விஜயம்“ என்ற செய்திப்படத்தை தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு நிமாய் கோஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதை சிறப்பான ஒளிப்பதிவுடன் மெரூகூட்டியிருந்தார் கோஷ். அந்தப்படம் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது.

அதைத் தொடர்ந்து ‘விப்ர நாராயணா’ என்கின்ற தெலுங்கு படத்தை கல்கத்தாவில் ஒளிப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.

தொடரந்து ‘பிரதிமா’ என்ற வங்காள மொழிப்படத்தை ஒளிப்பதிவு செய்தி இருக்கிறார். அதில் போதுமான திருப்தி வராத நிலையில், சொந்தமாக ‘சின்ன மூல்’ அதாவது அடிபெயர்ந்தது என்ற படத்தை தயாரித்து ஒளிப்பதிவு செய்தார்

வங்காள மொழியில் எடுக்கப்பட்ட இந்த வங்காளிப் அந்தப் படம் மேற்கு, கிழக்கு என வங்காளம் பிரிக்கப்பட்டபோது அகதிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களை எதார்த்தமாக பதிவு செய்திருந்தார். இந்தியாவில் எந்தவிதமான மேக்கப்-பும் இல்லாமல் எடுக்கப்பட்ட    முதல் படம் சின்ன மூல் தான்.

சின்ன மூல் படத்தை ஒளிப்பதிவு செய்த அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டு போனார் நிமாய் கோஷ்.

ஒரு வேனின் பின்புறத்தில் கேமராவை பதித்து அதனுள் இருந்தபடி அகதிகள் வாழ்ந்த வெவ்வேறு பகுதிகளுக்குப் போய் அவர்களுடைய வாழ்வின் எதார்த்தத்தை மிக இயல்பாக பதிவு செய்ததைப் பற்றி மிக விரைவாக பேசிக் கொண்டு போனார் நிமாய் கோஷ்.

“எதிரே போதுமான லைட்டிங் இருக்கிறதா என்பதைக் கூட நான் பொருட்படுத்தியிருக்கமாட்டேன்.

வேனுக்குள் மறைந்து இருந்தபடி அவர்களின் வாழ்வை அங்கிருந்த இயல்பான வெளிச்சத்துடன் நான் பதிவு செய்திருந்தேன். அந்தப்படத்தை ஒரு வழியாக எடிட் செய்து, திரையிட்டபோது, சின்ன மூல் என்கின்ற அந்த வங்காளி மொழிப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல நாடுகளிலும் அது திரையிடப்பட்டது. அதனுடைய ஒரு விளைவாகத்தான் ரஷ்யாவில் நடந்த விழா ஒன்றிற்கு நான் அழைக்கப்பட்டேன்.

என்னுடன் தமிழகத்திலிருந்து இயக்குநரான கே. சுப்ரமணியம், கலைவாணரான என்.எஸ்.கிருஷ்ணனும் ரஷ்யாவில் நடந்த அதே விழாவிற்கு வந்திருந்தார்கள்.

ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நன்கு பழக்கமானவர்கள் மாதிரி ஆகிவிட்டோம். என்.எஸ்.கிருஷ்ணனும் இயக்குநர் கே.சுப்ரமணியமும் என்னை தமிழ்நாட்டு திரை உலகிற்கு வரும்படி அழைத்தார்கள்.

இந்தியா திரும்பிய பிறகு, நான் அவர்கள் சொன்னபடியே தமிழ்நாட்டிற்கு வந்தேன்” என்றவர் அடுத்தடுத்து தமிழகத்தில் தான் பணியாற்றிய பல்வேறு படங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.

பொன் வயல், இன்ஸ்பெக்டர், ரத்தபாசம், கோமதியின் காதலன், அவன் அமரன், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட நாலு வேலி நிலம், மகனே கேள் என்கின்ற தமிழ்ப்படங்களுக்கு வேறு சில வங்காள மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் பணியாற்றியிருக்கிறார்.

இப்படி பல அனுபவங்களை சொல்லிக் கொண்டுவந்த நிமாய் கோஷ் இயக்குநர் கே.பாலசந்தர் எடுத்த நீர்க்குமிழி என்கிற படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

குறிப்பிட்ட ஒரு தயாரிப்பாளரிடமிருந்து பணத்தைப் பெறாமல் மக்களிடமிருந்தே பணத்தைத் திரட்டி நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய திரைப்படம் பாதை தெரியுது பார்.

பொதுவுடைமை சிந்தனைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவரான நிமாய் கோஷ் தமிழ்நாட்டில் அப்போதிருந்த பல்வேறு திரைப்படத் தொழிலாளர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில், திரைப்படத் தொழிலாளருக்கான சங்கத்தையும் உருவாக்கியபோது, பல தரப்பட்ட சிக்கல்களை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.

அந்த அனுபவங்களைப் பற்றியும் மிகவும் கேசுவலாக சொல்லிக் கொண்டு போனார் நிமாய் கோஷ்.

3 நாட்கள் வரை நீடித்து அவரிடம் எடுக்கப்பட்ட முழுமையான நேர்காணல் என்றும் அதைச் சொல்லலாம். அவருடைய திரை வாழ்வு பற்றி வெளிப்படையான பதிவு என்றும் அதைச் சொல்லலாம்.

ஏறத்தாழ 160 பக்கங்களுக்கு மேல் நீண்டிருந்த அந்தப் புத்தகத்திற்கான பிரதியை அப்போது தமிழகத்தில் இருந்த முன்னணி பதிப்பாளர்களிடம் கொடுத்தபோது, அவர்கள் யாரும் அதை வெளியிட தயாரான நிலையில் இல்லை என்பதையும் இங்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

சில மாதங்களாக அந்தப் பதிப்பாளர்களிடம் சுற்றி வந்து கடைசியில் என்னிடமே வந்து சேர்ந்த நிமாய் கோஷின் வாழ்வைச் சொல்லும் அந்த எழுத்துப் பிரதி பல்வேறு வீடு மாற்றத்திற்குப் பிறகு தொலைந்து போக நேரிட்டது எனக்கேற்பட்ட ஒரு இழப்பு தான்.

ஏறத்தாழ 21 வயதாகியிருந்த பெரியளவில் பொருளாதார பின்னணி இல்லாத என்னால், என்னுடைய சொந்த செலவில் நான் உருவாக்கிய அந்த எழுத்துப் பிரதியை புத்தகமாக்க முடியவில்லை.                 

தற்போதும் நிமாய் கோஷினுடைய வீட்டில் அவர் வளர்த்த ஒரு நாய் அவ்வப்போது சுற்றி வர விட்டு விட்டு தேநீர் அருந்தியபடி இப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் நிமாய் கோஷ் பகிர்ந்து கொண்ட அந்த அனுபவத்தின் குரல் மட்டும் நினைவில் மீந்திருக்கிறது.

இதேமாதிரி என்னுடைய 22-ம் வயதில் என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அப்போதுதான், வளர்ந்து கொண்டிருந்த நவீன நாடகம் இயக்கத்துடன் சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து விரிவான நேர்காணலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

இவ்வளவுக்கும் அப்போது எந்த நிறுவனத்திலும் பணியாற்றாத நிலையில், நம்மூர் மொழியில் சொன்னால், “வேலையில்லா பட்டதாரி“யாகத்தான் இருந்தேன். ஆனாலும்,  இந்த முனைப்பு மட்டும் மேலோங்கி இருந்தது.

முதலில், அப்போது நவீன நாடகத்தின் நிறைய நாடகங்களை நிகழ்த்தியவரும் தேசிய நாடகப் பள்ளியில் முக்கிய இடத்தை வகித்தவருமான சே.ராமானுஜம் தஞ்சாவூர் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நீண்ட பாகவதர் மாதிரியான தோற்றத்துடன் இருந்த அவருடன் இரண்டு நாட்கள் செலவழித்து அவருடைய நவீன நாடக வாழ்வை எழுத்தாகப் பதிவாக்கினேன்.

அடுத்ததாக நான் சந்தித்தது 80-களிலேயே நவீன நாடக முயற்சி துவக்கிவிட்ட கூத்துப்பட்டறை இயக்கத்தை நடத்தியவருமான ந.முத்துசாமியை சென்னை திருவல்லிக்கேணியை வாலஜா சாலையிலுள்ள அவருடைய வீட்டில், அவரை சில தடவைகள் சந்தித்து நேர்காணல் எடுத்தபோது, முத்துசாமி கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது.

அவரது வீட்டில் போட்டுத்தரப்பட்ட பில்டர் காஃபி இடையிடையே வர அதற்கிடையே முத்துசாமி உடனான நேர்காணல் அவர் முகம் பூரித்த நிலையில் நிறைவடைந்தது.

3-வதாக சென்னை பீட்டர்ஸ் காலனியில் அப்போது குடியிருந்த பரீட்சா ஞாநியை அவருடைய நாடக அனுபவங்களுக்காக சந்தித்த போது, அந்தச் சந்திப்பு நல்லிரவு தாண்டியும் நீடித்தது.

அப்போது, பீட்டர்ஸ் காலனியை அவரது வீட்டின் உள்ளேயே தங்கி இரண்டு நாட்கள் நீடித்தது அந்த நாடக அனுபவப் பதிவு.

அந்தப் பதிவின்போது, ஞாநி காட்டிய உற்சாகமும் முகத்திலிருந்த பூரிப்பும் ஆச்சர்யப்பட வைத்தன.

4-வதாக மதுரை நிஜ நாடக இயக்கத்தை நடத்தி வந்தவரான நண்பர் மு.ராமசாமியை சந்தித்து அவருடனும் 3. 4 சந்திப்புகள் வரை நீடித்து அவருடனான நேர்காணல் நிறைவடைந்தது. வழக்கம்போல, நட்புணர்வு பொங்க பேசிக் கொண்டிருந்தார் நண்பரான மு.ராமசாமி.

அடுத்து மயிலத்தில் நான் சந்தித்தது அஸ்வ கோஷ் என்ற ராஜேந்திர சோழனை. அப்போது, தெருக்களிலேயே பல நாடகங்களை வெவ்வேறு கருத்தியலோடு நடத்திக் கொண்டிருந்தார் அஸ்வகோஷ்.

மயிலத்திலுள்ள அவரது வீட்டில், இரவு மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு ஆரம்பித்த நேர்காணல், நிறைவடைவதற்கு காலை 2 மணி ஆகிற்று. மிகவும் நெருக்கமான நண்பரைப் போல பரிவுடன் அஸ்வகோஷ் பேசிக் கொண்டிருந்தார்.

மேலே குறிப்பிட்ட 5 நவீன நாடகத்தில், இயங்கிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிய எழுத்துப்பதிவு 250 பக்கங்களுக்கு மேல் நீண்டது.

அதையும் திருத்தி, முழுமையான எழுத்துப்பிரதியாக்கி, அதையும் முன்பிருந்த மாதிரி சில பதிப்பகங்களுக்கு எடுத்துச் சென்ற போது, வள்ளலார் சொன்னதைப் போல, கடைவிரித்தும் கொள்வார் இல்லை என்கின்ற வாசகத்தின் அர்த்தத்தை சிரமத்துடன் உள்வாங்க வேண்டியிருந்தது.

சில பதிப்பகங்களைச் சுற்றி அலைந்து என்னிடமே வந்த சேர்ந்த அந்த எழுத்துப் பிரதியின் பலவிதமான இடமாற்றங்களுக்குப் பிறகு, காணாமல் போனது.

மேலே குறிப்பிட்ட 5 பேரில், மிகவும் மூத்தவரான சே.ராமானுஜம் மட்டும் என்னை பார்க்கும்போதெல்லாம், “என்னாச்சு.. உங்க நாடகப் பிரதி என்னாச்சு” என்று புன்னகையுடன் நினைவூட்டுவார். நண்பர் ஞாநியும் நினைவூட்டியிருக்கிறார்.

காலத்தால் தொலைத்த அந்த நினைவுகள் இப்போதும், கனமாகத்தான் இருக்கின்றன.

#நிமாய்கோஷ் #ஒளிப்பதிவாளர்நிமாய்கோஷ் #இயக்குநர்நிமாய்கோஷ் #கேசுப்ரமணியம் #கலைவாணர் #என்எஸ்கிருஷ்ணன் #கேபாலசந்தர் #பொதுவுடைமை #சேராமானுஜம் #ஞாநி #Profsramanujam #Gnani #nsk #kb #kbalachander #nimaighosh #முராமசாமி #muramasamy #rajendrachozhan #அஸ்வகோஷ் #aswakosh

 
 
 
Comments (0)
Add Comment