ராகுல் குற்றச்சாட்டுகளுக்கு பலம் இருக்குமா?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி அண்மையில், தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பேச்சு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவாதத்தை காங்கிரஸ் மட்டும் முன்னெடுக்காமல் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அதே கருத்தைப் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு பணித்திருக்கிறார் ராகுல்காந்தி.

வழக்கமான இந்திய ஊடக இயல்புபடி ராகுல்காந்தியின் பேச்சு சில இடங்களில் வெளிப்படையாக ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. அச்சாகி இருக்கிறது. குறிப்பிட்ட ஊடகங்களில் திட்டமிட்டு வெளிவருவது தடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு தொகுதியை மட்டுமல்லாமல் இந்தியாவில் தனக்குக் கிடைத்த பல்வேறு விதமான ஆதாரங்களை முன்வைத்து தேர்தல் ஆணையத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் ராகுல்காந்தி.

ஆனால், இதற்கு மத்திய ஆளுங்கட்சி தரப்பில் பொதுவான மறுப்பு வெளியிடப்படுகிறதே ஒழிய, ராகுல்காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்திய மாதிரி அவர்கள் உரிய ஆதாரங்களுடன் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

இந்திய விடுதலைக்குப் பிறகு, குறிப்பாக 1950-ல் குடியரசான நிலையில், அதற்கு பிந்தைய தேர்தல்களில் படிப்படியாக தேர்தல் நடைமுறை வளர்ச்சி அடைந்தாலும், அதன் பிற்பகுதியில்தான் வாக்குச்சீட்டு முறையிலிருந்து, வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு அது முதல்முறையாக கேரளாவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

(1982 மே 19 ம் தேதி கேரளா மாநிலம், பரூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM – Electronic Voting Machine) முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. )

பாரத் மின்னணு நிறுவனம் தயாரித்த அந்த தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கியவர்களில் நம் எழுத்தாளரான சுஜாதாவும் ஒருவர்.

ஆனால், தற்போது நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில், அதுவும் ஏ.ஐ தொழில்நுட்பம் அதிதீவிரமாக வளர்ந்துவிட்ட நிலையில் சைபர் க்ரைம் குற்றங்கள் மிகவும் அதிகரித்திருக்கிற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மட்டும் எந்த விதமான முறைகேடுகளும் நடக்காது என்பதற்கான உத்திரவாதத்தை அளிக்க முடியவில்லை.

அந்த அளவுக்கு தற்போது நவீன தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட ஒரு வளர்ச்சியை, குற்றவாளிகளோ அல்லது குற்றம் இழைக்க விரும்புபவர்களோ பயன்படுத்துவது என்பது பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. 

அப்படித்தான் தேர்தல் ஆணையத்திலும், வாக்குப்பதிவு இயந்திர விஷயத்திலும் நடந்திருக்கிறது. இதைத்தான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல்காந்தி.

பொதுவாகவே வாக்குபதிவு இயந்திரம் குறித்து டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் துவக்கி வெவ்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது பேசினாலும், அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்தாலும்கூட தற்போது முன்வைத்த மாதிரி ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு வெளிப்படையான குற்றச்சாட்டை எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் வெளிப்படுத்தியது இல்லை.

இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. வழக்கம்போல இதை மறுத்து, இந்தக் குற்றச்சாட்டையே கடந்து போகும் மனநிலையில் தேர்தல் ஆணையம் இருக்கிறதா? அல்லது தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதகமாக இயக்குபவர்கள் இருக்கிறார்களா?

இதை இயந்திரங்களின் கோளாறு என்றோ, ஏதோ ஒரு காரணத்தை முன் வைத்து இதில் தேர்தல் ஆணையம் சில சமாதானங்களைச் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.

ஏனென்றால் பரந்துபட்ட இவ்வளவு கோடி ஜனத்தைக் கொண்ட ஒரு நாட்டில் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துவது வாக்களிக்கும் இயந்திரம் மூலமாகத்தான் என்கிற போது, அந்த இயந்திரத்திலேயே முறைகேடு நடந்திருப்பதாக வெளிப்படுவது, மக்களின் ஜனநாயக உரிமை மீது இழைக்கப்பட்ட அநீதி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எதன் பெயராலும் முறைகேடுகள் இழைக்கப்பட்டது தெரிய வந்தால், தேர்தல் ஆணையம் தன்னை பரிசீலித்துக்கொள்ள வேண்டும் அல்லது உச்சநீதிமன்றம் போன்ற நீதி அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தலையிட்டு எந்தவிதமான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையத்தை மறுபடியும் வாக்களிக்கும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும்.

அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுக்கப்பட்டால்தான், இங்கே மக்களுக்கான ஜனநாயகம் என்று நாம் சொல்கின்ற சொல்லுக்கு அசலான அர்த்தம் இருக்கும்.

– யூகி

Comments (0)
Add Comment