சிம்பொனி எனும் இசை வடிவுக்கு மூலகர்த்தா ஓபெரா என அழைக்கப்படும் இத்தாலிய இசை வடிவமாகும்.
ஓபெராவின் நடுநடுவே இசைக்கப்படும் ஒருவித இசையை சிம்பனியா என அழைத்தனர்.
ஆனால், 1745-ல் இதை ஓர் இசை வடிவமாக்கி சிம்பொனிக்கென ஓர் இலக்கணத்தை வகுத்தவர் இசை மேதை ஸ்டாமிட்ஸ்.
இவர் சுமார் எழுபது சிம்பொனிகளை எழுதி சிம்பொனி எனும் புது வடிவத்தை இசை மரபில் ஆரம்பித்து வைத்தார்.
பின்பு இந்த வடிவம் வேகமாக வளர்ந்துவிட்டது. பல்வேறு இசை மேதைகளும் தங்கள் வாழ்நாளில் ஒரு சிம்பொனியையாவது இயற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார்கள்.
காரணம், இந்த இசைவடிவம் சற்றுக் கடினமானது. ஏகப்பட்ட வாத்தியக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இதை ஓர் இசை நீர்வீழ்ச்சி என்றே கூறலாம்.
சிம்பொனி வடிவத்தில் உலகப் புகழ்பெற்ற மேதைகளின் வரிசை ஹைடன், மொசார்ட், பீதோவான் சைக்கோவ்ஸ்கி, ப்ரஹாம்ஸ் என நீண்டுகொண்டே போகிறது.
இவற்றுள் பீதோவான் இயற்றிய ஒன்பதாவது சிம்பொனி உலகின் தலைசிறந்த சிம்பொனி என கருதப்படுகிறது.
இதில் வியப்பான விஷயம் என்னவெனில், இதை இயற்றியபோது இவருக்குக் காதுகள் முழுக்கப் பழுதுபட்டிருந்தன!