வரலாற்றில் இந்தியக் காடுகளுக்குள் நடந்த முதல் ஊடுருவல் (Tress passing) ரிஷிகளினுடையதே.
பௌத்த, சமண துறவறம் என்பது மக்கள் சமூகத்துடன் இணைந்தது. மக்கள் இடும் பிட்சையில் வாழ்ந்தது.
மாறாக, ரிஷிகளின் துறவறம் என்பது மக்களை விட்டு விலகி காட்டுக்குள் பர்ணசாலை அமைத்து யாகம் வளர்த்து வாழ்வதாகும்.
அதுவும் ஏராளமான கால்நடைகளுடன் குடியேறி அவற்றை மேய்ப்பதற்கு 12 ஆண்டுகள் குருகுலக் கல்வி என்ற பெயரில் மாணாக்கர்களையும் உடன் அழைத்துச் செல்வது. மேய்ச்சலும் வேள்வித் தீயும் காட்டுக்குப் பகை.
காட்டின் தொல்குடிகள் உணவு சேகரிப்புச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனவே தங்களுக்கு இடையூறான ரிஷிகளின் ஆஸ்ரம வாழ்க்கையை எதிர்த்தனர்.
இதிகாசங்கள் புனைவது போன்று அது வெறுமனே ஆரியருக்கு எதிரான யுத்தமன்று. இத்தகைய தொல்குடிகள் எவ்வளவு இழிவாகக் கருதப்பட்டனர் என்பதற்கு அர்த்தசாஸ்திரமே சான்று.
தாய்வழிச் சமூகத் தொல்குடி எதிர்ப்பின் உருவகமே வைதீக மொழியில் ராட்சசி ஆகிறாள்.
இராமாயணத்தில் அதன் பிரதிநிதியே தாடகை. அகத்தியன் தொடங்கி விஸ்வாமித்திரன் வரை தாடகையுடன் நடத்திய போரே நாடகத்தின் மையப் பகுதியாக அமைகிறது.
பள்ளி மாணவர்கள் காட்டுக்குள் செல்வதிலிருந்து தொடங்கும் கதை, இராமாயண தாடகைக் களத்தினுள் ஊடுருவி மீண்டும் நவீனக் காலத்தினுள் வந்து சேர்கிறது.
சுற்றுச்சூழல் அரசியல் எழுத்துகளில் தங்கியிருந்தால் மட்டும் போதாது.
அது பல்வேறு கலை வடிவங்களுக்குள்ளும் ஊடுருவ வேண்டும் என்பது என் அவா.
ஆனால், சில தமிழ்த் திரைப்படங்களில் அதைப் படுகொலை செய்தனர் என்பதற்கு 2.0 போன்ற ஷங்கர் படங்களே சாட்சி.
இந்நிலையில் வனப்பேச்சி அசலான நாடகமாக மனநிறைவளிக்கிறது.
இந்திய நிலப்பகுதியில் ஆஸ்ரம வாழ்க்கையில் இருந்து தொடங்கிய காட்டழிப்பு அரசியலை மிகச்சரியாகவே குறிப்பிடுகிறது நாடகப் பனுவல்.
இதிகாச கதைகள் தொடங்கி எல்லாமே பொய்கள்தான் என இறுதியில் பேசும் வனப்பேச்சி தன் மார்பில் பாய்ந்த அம்புகள் மட்டும் உண்மை என்கிறார்.
அவை மட்டுமே இன்றுவரை தொடர்ந்து தன் மார்பில் பாய்ந்துக் கொண்டிருக்கின்றன என்கிறாள்.
அவை ராமனின் தொல் அம்புகளாக மட்டுமன்றி நவீனக் காலத்தின் தேயிலைத் தோட்ட அம்பு, காப்பித் தோட்ட அம்பு, அலுமினியம், செம்பு, யுரேனியம் உள்ளிட்ட கனிமக் கொள்ளைகளின் அம்புகள் வரை அவள் உடலில் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
இதிகாச காலம் தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக நவீன தொழில்நுட்ப காலம் வரை காடுகளே அம்பில் இலக்குகளாக இருப்பதையும்,
அதுவே காலநிலை மாற்றத்தின் ஒரு காரணியாக விளங்குவதையும் தெளிவான சுற்றுச்சூழல் அரசியல் கண்ணோட்டத்துடன் நாடகத்தின் மையக் கருவாக அமைத்துள்ள தோழர் பிரளயனின் சுற்றுச்சூழல் அரசியல் பார்வைக்கு நன்றி.
பனுவலின் மைய பாத்திரமே வனபேச்சி என்கிற பேரண்டச்சிதான். அவள் குறிப்பிட்ட நிலப்பகுதியை மட்டும் பிரதிபலிக்காது மொத்த உலகின் காட்டுப் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.
இவ்வளவு சுமை நிறைந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பது எளிதன்று. பாத்திரம் நம் அனைவரின் நெஞ்சுக்குள் ஊடுருவி பதிந்தால்தான் நாடகம் வெற்றி பெறும்.
நடிப்புத் திறமை மிகுந்த ரோகிணி நிகழ்த்துக்கலையிலும் உயிர்த்துடிப்புடன் அதை நிறுவியுள்ளார்.
தொல்குடிகளுக்கு அன்பான வனப்பேச்சியாக, ரிஷிகளுக்கு ராட்சசியாக விளங்கும் அவர் இரண்டையும் ஒருசேர இராம லட்சுமணர்களிடம் காட்டும்போது மிளிர்கிறார்.
கவின்மலர் தவிர பிற நாடகக் கலைஞர்களின் பெயர் அறியாவிடினும், நாடகப் பனுவலை உயிர்ப்பித்துக் காட்டிய சென்னைக் கலைக்குழுவின் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.
இயற்கை காப்பாற்றப்பட வேண்டும் என்கிற ஆர்வமுள்ள அனைத்து மக்களும் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம் இது எனப் பரிந்துரைக்கிறேன்.
நாடக நிறைவின் இறுதியில் ஆற்றிய சிற்றுரையில் குறிப்பிட்ட ஒன்றை மீண்டும் இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்:
“நம்மிடையே அகத்தியர், விஸ்வாமித்திர்கள் இன்னும் அழிந்துவிடவில்லை. அவர்கள் வேதாந்தா, அம்பானி, அதானி என்கிற பெயரில் வாழ்ந்துக் கொண்டுதான் உள்ளனர்.
ஆனால், கெடுவாய்ப்பாகத் தாடகை மட்டுமே நம்மிடம் இல்லை. அதற்கு நாம் அனைவருமே தாடகைகளாக மாறுவது ஒன்றே வழி.”
ஒளிப்படங்கள்: நன்றி தோழர் பாலு