அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் உருவாகி, அதன் விளைவு போரில் போய் முடியுமோ என்கின்ற அச்சம் பரவலாக இருந்த நேரத்தில் அமெரிக்க அதிபரான டிரம்ப் நேரடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டார்.
நான்தான் முன் நின்று இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்தச் சூழலை நிறுத்தியதாக 25 முறைகளுக்குமேல் அவர் தெரிவித்துவிட்டார்.
அதேசமயம் நமது பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அது குறித்து பேசியபோது, ட்ரம்ப் குறித்து டிரம்பின் பெயரைக் குறிப்பிட்டு எதையும் அவர் விமர்சிக்கவில்லை.
மாறாக ட்ரம்பின் பொருளாதார ரீதியான அழுத்தம் பல நாடுகளின் மீது பாய்ந்ததைப் போலவே, இந்தியாவின் மீதும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்போம் என்கின்ற எச்சரிக்கைகள் தொடர்ந்து ட்ரம்பினால் முன்வைக்கப்படுகின்றன.
இதையடுத்து சமீப நாட்களில் டிரம்பின் எச்சரிக்கைக் குறித்து மறைமுகமாகப் பேசிய பிரதமர் மோடி, இனி சுயசார்புள்ள பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றிருக்கிறார்.
அதோடு, வெளிநாடுகளில் இருந்து வரும் ஏற்றுமதியைவிட உள்நாட்டுத் தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இது இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியால் முன்வைக்கப்பட்ட சுதேசி இயக்கச் சிந்தனைக்கு ஒப்பானது என்று சொல்லமுடியாவிட்டாலும், அதன் அர்த்தத்தையே தற்போது மோடியும் இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.
முன்பு துவக்கக் காலத்தில் பாஜகவின் மூத்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் முன்வைத்த ஒரு முழக்கங்களில் ஒன்று சுதேசி என்கின்ற முழக்கம்.
நாம் இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என்கின்ற முழக்கத்தோடு, அதைத் தொடர்ந்து இந்துக் கடைகளிலேயே வாங்கவோம் என்று அவர்கள், அதைத் தன்னுடைய இந்துத்துவாக் கொள்கையோடு சேர்த்து முழங்கியதுதான் அப்போது பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது.
ஆக, சுதேசி என்கின்ற முழக்கத்தைக் காங்கிரசைப் போல, பாஜகவின் மூத்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ம் ஒரு காலத்தில் முன்வைத்திருக்கிறது.
எண்பதுகளுக்குப் பிறகு அந்நிய முதலீடு அதிகரித்து, பெரு வர்த்தக நிறுவனங்கள் வளர்ந்த நிலையில், இந்தியாவிலேயே உள்ள பல தொழில்கள் படிப்படியாக சரிவைச் சந்தித்தன. அதிலும், இந்தச் சரிவு காங்கிரஸ் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
அதைத் தொடர்ந்து, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அடுத்தடுத்து அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரி விதிப்பும் இந்தியாவிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதிலும் குறிப்பாக சிறு, குறு தொழில்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. இன்றுவரை சந்தித்து வருகின்றன.
அதேசமயம் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெருவளர்ச்சியை, அதிகப்படியான மிகையான வளர்ச்சியை இதே காலகட்டத்தில் சந்தித்து இருக்கின்றன. அவற்றிற்கு சில லட்சம் கோடி அளவிற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
அதேநேரம், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் துவக்கி, அதற்காக கடன்பட்டவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உயிரிழக்கும் நிலையும் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது.
இப்படிப்பட்ட பொருளாதார நிலையில் இந்தியா தற்போது இருந்தாலும் உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.
மனிதத் திறனை பயன்படுத்துவதில், உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் நுகர்ப் பொருட்களை நுகர்வோரின் எண்ணிக்கையும் உலகளவில் இந்தியா முன்னணி இடத்தை வகிக்கிறது.
இதனால்தான் இந்திய சந்தையைக் கைப்பற்றுவதற்கு பல முன்னணி நாடுகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்ல ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் இதில் அடக்கம்.
இப்போது சீனப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் சர்வ சாதாரணமாக இந்தியச் சந்தையில் சீனப் பொருட்கள் மலிவான விலைக்கு விற்கப்படுகின்றன.
என்னதான் தீபாவளி சமயத்தில், சிவகாசிப் பட்டாசுகளை நாம் விற்க முடிந்தாலும், அதைவிட குறைவான விலைக்கு சீனப் பட்டாசுகள் சந்தைக்கு வருவதை இன்றுவரைத் தடுக்க முடியவில்லை.
இதற்கு அடிப்படையான காரணம் இங்குள்ள பொருட்களை வாங்கும் திறனுள்ள வாடிக்கையாளர்கள் தான்.
நமது வீட்டிற்கு அருகிலுள்ள மளிகைக் கடைகளிலோ, காய்கறிக் கடைகளிலோ பொருட்களை வாங்க விடாமல், பெரு நிறுவனங்கள் தற்போது கடை விரித்திருக்கும் பெரிய பெரிய மால்களுக்கு அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட்டிற்கோ செல்வதற்கு நாம் தொடர்ந்துத் தூண்டப்படுகிறோம்.
பல்வேறு விளம்பரங்கள் அந்தத் தூண்டுதலை கட்சிதமாக செய்கின்றன. ஆக, மக்களில் பெரும்பான்மையானவர்களை பெருநிறுவனங்களைச் சார்ந்து அவை மூலம் கிடைக்கும் பொருட்கள்தான் தரமானவை என்கின்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்கு இந்த விளம்பரங்கள் உதவுகின்றன.
இந்தநிலையில் தான், பிரதமர் மோடி இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசியபோது, இந்தியத் தொழில் நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.
இந்த வேண்டுகோள் யாருக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது?
இந்தியாவில் உள்ள பரந்துபட்ட வாடிக்கையாளர்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு உதவுகின்ற அதே மத்திய அரசுதான் இந்தம குரலையும் தற்போது எதிரொலித்திருக்கிறது.
‘சுதேசிக் குரல்’ மாதிரியான இந்தக் குரல் யாருடைய நலனுக்காக எழுப்பப்படுகிறது?
அமெரிக்கா தற்போது கையாண்டு வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இப்படிப்பட்ட ஒரு சுதேசி சாயல் கொண்ட பொருளாதாரக் கொள்கையை மத்திய அரசு முன்வைக்க விரும்புகிறதா?
அப்படியென்றால் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் அந்நிய முதலீடு அதிகப்பட்ட நிறுவனங்களுக்கும் இனி மத்திய அரசு கொடுக்கும் மதிப்பு என்னவாக இருக்கும்?
ஒரு விசயத்தை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சுதேசிக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், அதனால் பலனடைவது இங்குள்ள சாதாரண வணிகர்களும் சராசரியான மக்களும் தான்.
சுதேசிக் கொள்கைக்கு நேரெதிரான கார்ப்ரேட் கொள்கை அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதனால் பலனடைவது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும்தான்.
இதில், காந்தி மட்டுமல்ல இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் உட்பட மார்க்சிய தலைவர்களும் கூட வெவ்வேறு காலகட்டத்தில் சுயசார்பு பொருளாதாரம் என்கிற கருத்தாக்கத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
அதிலும், குறிப்பாக காந்தி முன்வைத்தது, ஒரு கிராமம் தன்னிறவு பெற்றுவிட்டதாக பிற உதவியை நாடாத அளவுக்கு தன் உரிமை பெற்றதாக பொருளாதார அளவில் இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தினார்.
அந்த வழியில் மீண்டும் இந்திய அரசு செல்லப்போகிறா?
சாதாரண மக்களுக்கு பலனளிக்கக் கூடிய கொள்கை இருக்குமா என்பதெல்லாம், தற்போது மத்திய அரசு வலியுறுத்தும் பொருளாதாரக் கொள்கை எந்த அளவுக்கு வலுவானதாக மாறும் என்பதைப் பொறுத்து இருக்கிறது. காத்திருப்போம்.
– மணா