கருணாமிர்த சாகரம் தந்த தமிழிசை அறிஞர்!

கவிஞர் குட்டி ரேவதி

தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் பிறந்த நாளும், நினைவு நாளும் ஆகஸ்ட் மாதத்தில் தான். (ஆகஸ்ட் 2, 1859 – 31, ஆகஸ்ட் 1919) அவரது மறைவும். ஆகவே ஆகஸ்ட் மாதம் தமிழிசை மாதம்.

நம்மிடமிருந்து பிய்த்து எறியப்பட்டிருந்த தமிழ் இசையை அதிக அக்கறையுடனும் உழைப்புடனும் நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

தமிழ் மொழி சென்ற இடங்களிலெல்லாம் இசையுடன் தான் சென்றது. தமிழ் இலக்கியத்தைத் திறக்கும் பக்கங்களில் எல்லாம் இசையாகவே மண்டிக்கிடக்கின்றது என்பதை உணர்ந்த பண்டிதர்,

இசை மொத்தத்தையும் கொஞ்சமும் துல்லியம் குறையாமல், சிதறாமல் மீண்டும் நம் மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்பது என்று தன் வாழ்நாளை அதற்காகவே செலவிட்டு 1346 பக்கங்களுடைய நூலான ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலை எழுதி, தானே அச்சிட்டு வெளியிட்டார்.

மொழியின் அடியொட்டி இருந்தாலும் மரபின் நிழலொட்டி இருந்தாலும் நம் நாவிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் இசைத் தமிழை நாம் நம் வீட்டின் அன்றாட வழக்கமாக்க நாம் மிகுந்த விழிப்புணர்வு கொள்ளவேண்டிய காலகட்டம் இது. நம் வீட்டில் அவசியம் கருணாமிர்த சாகரம் நூல் இருக்கவேண்டும்.

அந்த நூலை நாமெல்லோரும் வாசித்திருக்க வேண்டும். பண், சுருதிகள், சுரங்களைக் கண்டறியும் முறை, தமிழ்ச் சங்கங்கள் என எல்லாவற்றையும் தமிழ் மொழி அறிந்த ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இசையைப் புரிந்துகொள்ளல், அறிந்துகொள்ளல் நம் ஒவ்வொருவரின் திறனாக, ஒவ்வொரு வீட்டின் செல்வமுமாக ஆக்க, இவற்றையெல்லாம் நாம் சூளுரையாக எடுத்துக்கொள்ளல் வேண்டும்.

எட்டியிருந்த இசைத் தமிழை நம்மிடம் வந்து கொட்டிச் சேர்த்த ஆபிரகாம் பண்டிதருக்கும் நாம் எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

பண்டிதரின் இசைத் தமிழைப் பேணும் பொறுப்பில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டென்று அறிவோம்.

ஆபிரகாம் பண்டிதர் இல்லாமல் தேனான தமிழ் இசை இன்று வந்து நம் காதுகளில் பாய்ந்திருக்காது.

Comments (0)
Add Comment